மாரி மலை முழஞ்சில் மன்னிக் கிடந்து உறங்கும்

மாரி மலை முழஞ்சில் மன்னிக் கிடந்து உறங்கும் என்ற பாடல்  சூடிக் கொடுத்த சுடர்க் கொடியான ஆண்டாள் அருளிய  திருப்பாவையின் இருபத்து மூன்றாவது பாசுரம் ஆகும்.

வீரம் மிக்க சிங்கத்தைப் போன்ற கண்ணன் எழுந்து வந்து, பாவை நோன்பு நோற்பவர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றி வைக்கும்படி அழைக்கும் அற்புதமான பாசுரம் இது.

திருப்பாவை பாடல் 23

மாரி மலை முழஞ்சில் மன்னிக் கிடந்து உறங்கும்

சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து

வேரி மயிர்பொங்க எப்பாடும் பேர்ந்துதறி

மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்

போதருமா போலே நீ பூவைப்பூ வண்ணா உன்

கோவில் நின்று இங்ஙனே போந்தருளிக் கோப்புடைய

சீரிய சிங்கானத்திலிருந்து யாம் வந்த

காரியம் ஆராய்ந்து அருளாலோர் எம்பாவாய்

விளக்கம்

மழைகாலத்தில் காட்டில் உள்ள மலையில் அமைந்த குகையில், நேரத்தை மறந்து தூங்கிக் கொண்டு இருந்த சிங்கம் ஒன்று விழித்து எழுந்தது.

அதனுடைய கண்களில் தீப்பொறி பறக்க, பிடரியை சிலிர்த்துக் கொண்டு இப்படியும் அப்படியுமாக நடந்து சோம்பல் முறித்தது.

அதன்பின் பெரும் கர்ஜனை செய்து கொண்டு, குகையை விட்டு வெளியேறி வேட்டைக்கு கம்பீரமாகப் புறப்பட்டது.

அவ்வீரமிக்க சிங்கத்தைப் போல கம்பீரம் கொண்ட காயாம்பூ நிறத்தினை உடைய கண்ணனே!

நீயும் உன்னுடைய கோவிலினை விட்டு வெளியேறி, அத்தாணி மண்டபத்தில் முறையாக வைக்கப்பட்டுள்ள அழகிய சிங்கானத்தில் வந்து அமர்வாயாக!

நாங்கள் உன்னை நாடி வந்தது ஏன் என்பதைக் கேட்டு எங்களுக்கு அருள் செய்ய வேண்டும்!

கோதை என்ற ஆண்டாள்

 

இடைவிடாத இறை பிரார்த்தனை, நமது உள்ளத்திற்கும் உடலுக்கும், அமைதியையும் மகிழ்ச்சியையும் தரும்.

ஆதலால் நாம் இறைவனை, நம் இதய சிம்மாசனத்தில் இருத்தி, நம்முடைய வேண்டுதல்கள் நிறைவேற பிரார்த்தித்து, இறைவனின் அருளைப் பெறுவோம்.

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.