மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால் என்ற பாடல் ‘கோதை நாச்சியார்’ ஆண்டாள் அருளிய திருப்பாவையின் முதல் பாடலாகும்.
இது உலகைக் காக்கும் நாயகனான நாராயணின் அருளை வேண்டி பாவை நோன்புக்காக, பாவையர்களாகிய பெண்களை ‘வாருங்கள் நீராட’ என நீராட அழைப்பு விடுப்பதாக அமைந்த பாசுரம்.
திருப்பாவை பாடல் 1
மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்
நீராடப் போதுமீர் போதுமினோ நேரிழையீர்
சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்
கூர்வேல் கொடுந்தொழிலோன் நந்தகோபன் குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்
கார்மேனிச் செங்கண் கதிர்மதியம்போல் முகத்தான்
நாராயணனே, நமக்கு பறை தருவான்
பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்
விளக்கம்
முழுநிலவு ஒளிவீசும் நல்ல நாளான இன்று, மார்கழி மாதம் பிறந்து விட்டது.
சிறந்த அழகிய ஆபரணங்களை அணிந்தவர்களே, வளம் நிறைந்த ஆயர்பாடியின் செல்வச் சிறுமியர்களே, எழுந்திருங்கள். நாம் அனைவரும் இன்று அதிகாலையில் நீராடச் செல்வோம்.
கூர்மையான வேலாயுதத்தைக் கையில் கொண்டு போர்த்தொழிலில் வல்லவனான நந்தகோபனாரின் திருமகன்.
அழகிய கண்களை உடைய யசோதையின் சிங்கக்குட்டி போன்ற மகன். மேகங்களைப் போல கரிய மேனியும், சிவந்த கண்களையும் கொண்டவன்.
சூரியனைப் போன்றும், சந்திரனைப் போன்றும் ஒளி நிறைந்த முகத்தினை உடையவன். மேற்கூறிய தன்மைகளைக் கொண்ட நாராயணனே நமக்குப் பரம்பொருள்.
அவன் கட்டாயம் நமக்கு நோன்பின் பலனை (பறை) அருளுவான்.
அவனின் அருளால் உலத்தோர் நம்மைப் புகழ்வார்கள். ஆதலால் வாருங்கள் நீராட என்று அழைப்பதாக அமைந்த பாசுரம்.
இப்பாசுரம் பாவை நோன்பு நோற்கும் காலத்தை விளக்குகிறது.
திருப்பாவை என்பது சூடிக்கொடுத்த சுடர்க்கொடி எனப் போற்றப்படும் ஆண்டாள் நாச்சியாரால் பாடப்பட்ட பாடல்களின் தொகுப்பாகும்.
இப்பாடல்கள் இன்றைக்கும் மார்கழி மாதத்தின் முப்பது நாட்களிலும் பாவை நோன்பு நோற்கும் பெண்களால் விரும்பிப் பாடப்படுகின்றன.
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!