மார்கழி உற்சவம் என்பது ஆண்டுதோறும் மார்கழி மாதம் முழுவதும் நடைபெறுகின்ற விழாவாகும். விழாக்கள் பொதுவாக மாதத்திற்கு இரண்டு அல்லது மூன்று நாட்கள் நடைபெறும். ஆனால் மார்கழி மாதத்தை பொறுத்த மட்டில் விழாக்கள் மாதம் முழுவதும் நடைபெறுகின்றன.
இந்த மாதத்தில் பகல் குறைந்தும் இரவு மிகுந்தும், தட்ப வெப்பமானது ஈரப்பதமாகவும் குளிர் மிகுந்தும் காணப்படும். எனவே இம்மாதம் முழுவதும் இறை வழிபாட்டிற்கு உகந்ததாகக் கருதப்படுகிறது.
இந்துக்களின் திருவாதிரை, வைகுண்ட ஏகாதசி, கிருத்துவர்களின் கிறிஸ்துமஸ், புதுவருடபிறப்பு, முகமதியர்களின் பக்ரீத் போன்ற பண்டிகைகள் இம்மாதத்தில் கொண்டாடப்படுகின்றன. புத்த, சீக்கிய மற்றும் சமண மதங்களிலும் இந்த மாதம் புனித மாதமாக கருதப்படுகிறது.
மார்கழியில் ஓசோன் படலமானது பூமிக்கு மிக அருகில் இருக்கிறது. எனவே சுத்தமான காற்றை சுவாசித்து உடலை நலம் பெறச் செய்ய அதிகாலை வழிபாடு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.
இந்து சமயத்தில் ஒரு வருடத்தை உத்திராண்ய காலம், தட்சியாண்ய காலம் என இரண்டாகப் பிரிக்கின்றனர். உத்திராண்ய காலம் என்பது தை முதல் ஆனி மாதம் வரை என்றும், தட்சியாண்ய காலம் என்பது ஆடி முதல் மார்கழி மாதம் வரை என்றும் கணக்கிடப்படுகிறது.
மனிதர்களின் ஒரு வருடம் என்பது தேவர்களுக்கு ஒரு நாள் ஆகும். எனவே தட்சியாண்ய காலத்தின் கடைசி மாதமான மார்கழி மாதம் தேவர்களுக்கு பிரம்ம முகூர்த்த காலமாகும். எனவே இந்த மாதத்தில் அதிகாலையில் (4.30 முப-6.00 முப) எழுந்து நீராடி கோயிலுக்கு சென்று இறைவழிபாடு செய்யப்படுகிறது. இம்முறை பற்றி மாணிக்க வாசகர் திருவெம்பாவையிலும், ஆண்டாள் நாச்சியார் திருப்பாவையிலும் கூறியுள்ளனர்.
பொதுவாக பெண்கள் அதிகாலையில் எழுந்து குளிர்ந்த நீரில் குளித்து வீட்டு வாசலில் வண்ணக் கோலமிட்டு, கோவிலுக்குச் சென்று இறை வழிபாடு செய்கின்றனர். ஆண்கள் எல்லோரும் குளிர்ந்த நீரில் நீராடி பஜனை பாடல்களைப் பாடி ஊர்வலம் சென்று இறுதியில் கோவிலை அடைந்து இறைவழிபாடு செய்கின்றனர்.
மார்கழியில் அதிகாலை வழிபாட்டில் வேதங்களுக்கு பதிலாக திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளி எழுச்சி, ஆழ்வார் பாசுரங்கள் ஆகியவையே கோவில்களில் பாடப்படுகின்றன.
பாவை நோன்பு
ஆயர் பாடியில் கோபியர்கள் மார்கழி மாதத்தில் ஆற்றிற்கு அதிகாலையில் சென்று நீராடி மண்ணால் செய்த காத்யாணி தேவியை வழிபட்டு தங்களுக்கு நல்ல கணவன் கிடைக்க வழிபாடு நடத்தினர் என்றும் பெண்கள் கடைப்பிடித்த விரதமாயின் இதற்கு பாவை நோன்பு என்றும் பெயர் வழங்கலாயிற்று.
ஆண்டாள் பாவை நோன்பினை மேற்கொண்டே அரங்கனை கணவனாக அடைந்தாள். ஆண்டாள் பாவை நோன்பின் போது நெய், பால் முதலியவற்றை உண்ணாமலும் (கண்ணுக்கு மை இடாமல் தலையில் மலர் சூடாமல்) புற அழகில் நாட்டம் செலுத்தாமலும் இறை நாட்டத்தில் மட்டும் மனதினைச் செலுத்தி பாவைநோன்பை மேற்கொண்டாள்.
எனவே கன்னிப்பெண்கள் நல்ல கணவன் கிடைக்க மார்கழி மாதத்தில் அதிகாலையில் எழுந்து நீராடி கோவிலுக்குச் சென்று ஆண்டாள் எழுதிய திருப்பாவைப் பாடல்களைப் பாடி வழிபாடு நடத்துகின்றனர். திருமணமான பெண்கள் மகிழ்ச்சியான மணவாழ்வு நீடிக்கவும் மற்றும் குடும்ப நலன் வேண்டியும் இந்நோன்பினை மேற்கொள்கின்றனர். பாவை நோன்பு என்பது 2000 ஆண்டுகளுக்கு முன்பே வழக்கத்தில் இருந்துள்ளது.
திருவாதிரை
மார்கழியில் பௌர்ணமியும் திருவாதிரை நட்சத்திரமும் ஒன்று சேரும் நாளில் திருவாதிரை கொண்டாடப்படுகிறது. திருவாதிரை விழாவானது சிவனுக்குரிய வழிபாடாகும். திருவாதிரைக்கு அரிசிக் களி, ஏழுவிதமான காய்கறிகள் கொண்டு ஏழு கறிக் கூட்டு செய்து இறைவனுக்கு படைக்கின்றனர்.
வைகுண்ட ஏகாதசி
மார்கழியில் அமாவாசை முடிந்த பதினொன்றாம் நாளான (வளர்பிறை)ஏகாதசி திதியில் வைகுண்ட ஏகாதசி கொண்டாடப்படுகிறது. வைகுண்ட ஏகாதசியை வைணவர்கள் கொண்டாடுகின்றனர். வைகுண்ட ஏகாதசி அன்ற இரவு முழுவதும் விழித்து மகாவிஷ்ணவை வழிபாடு செய்கின்றனர்.
விரதம் மேற்கொள்வோர் வைகுண்ட ஏகாதசி அன்று துளசித் தண்ணீரை மட்டுமே உணவாக உட்கொள்கின்றனர். வைகுண்ட ஏகாதசி விரதத்தினை மேற்கொண்டால் மோட்சம் கிட்டும் என்று நம்பப்படுகிறது. வைகுண்ட ஏகாதசி அன்று அதிகாலையில் எல்லா வைணவ ஆலயங்களிலும் சொர்க்க வாசல் திறக்கப்படுவது ஒரு முக்கியமான நிகழ்வாகும்.
அனும ஜெயந்தி
மார்கழி மாதத்தின் மூலம் நட்சத்திர நாளானது அனுமனின் பிறந்த நாளாக தமிழ்நாட்டில் கொண்டாடப்படுகிறது. அனும ஜெயந்தி அன்று விரதம் மேற்கொண்டு மன உறுதி, ஆற்றல், தைரியம் ஆகியவற்றை அருளுமாறு அனுமனிடம் பிரார்த்திக்கின்றனர். அனுமனுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் ஆராதனைகள் கோவில்களில் நடைபெறுகின்றன.
சபரிமலை யாத்திரை
மாலை அணிந்து 41 நாட்கள் எளிய உணவினை உண்டு பிரம்மச்சாரிய விரதம் கடைபிடித்து செல்லும் சபரிமலை யாத்திரையானது மார்கழி மாதம் முழுவதும் மேற்கொள்ளப்படுகிறது.
இசைத் திருவிழா
தமிழ்நாட்டில் உள்ள திருவையாற்றில் மார்கழியில் தியாகராஜர் ஆராதனை என்கிற உலகப் புகழ் வாய்ந்த இசைத் திருவிழா ஆண்டு தோறும் நடைபெறுகின்றது. இவ்விழாவில் இந்தியா முழுவதிலும் இருந்து பாடகர்கள், இசையமைப்பாளர்கள், இசைக் கலைஞர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர். இந்நிகழ்ச்சியில் புகழ்பெற்ற தியாகராஜர் கீர்த்தனைகள் பாடப்படுகின்றன.
நாமும் மார்கழியில் அதிகாலையில் எழுந்து நீராடி தூய்மையாகி இறைவனை வணங்கி அருள் பெறுவோம்.