மார்கழி மாதத்து பூசணிக்காய்

மார்கழி மாதத்து பூசணிக்காய் என்ற இக்கதை, பொது இடத்தில் உள்ள பூசணிக்கொடியில் காய்த்திருக்கும் பூசணிக்காயை கைப்பற்ற நினைக்கும் மக்கள் பற்றியது.

பூசணிக்காய் அவர்களுக்கு கிடைத்ததா என்பதை அறிய, கதையைப் படியுங்கள்.

 

மார்கழி மாதத்தின் பாதி.

அம்மா என்னிடம் “எதிர்த்த வீட்டுக்கு கிழக்க, காலி நிலத்துல பூசணிக்கொடி கிடக்கு பாத்தியா?” என்றார்.

“இல்லம்மா…, ம்..ம்… நம்ம வீட்ட செம்ம பண்ணுறப்ப இடிச்ச செங்கல், மண்ணத்தான அங்கே போட்டுருக்கோம். அங்கயா?” என்று சாப்பிட்டுக் கொண்டே கேட்டேன்.

“ஆமா, அந்த கல்லு கட்டிக்குள்ளதான், தானா முளைச்சி வந்திருக்கு” என்றார் அம்மா பாத்திரம் தேய்த்துக் கொண்டே.

“இப்ப என்ன அதுக்கு?” என்றேன்.

“நான் ஜாக்கெட் தைக்க கொடுக்க போறப்ப, எதிர்த்த வீட்டு அக்காதான் பூசணிக்கொடியில பூ இருக்கிறத காட்டுனாங்க.” என்று ஆச்சர்யப்பட்டார் அம்மா.

“இது என்ன அதிசயமா?”, என்றேன் சற்று எரிச்சலாக.

“பெண் பூசணிப் பூ வர்றப்ப சின்ன காய் முதல வந்து, அதுக்கப்புறம் பூக்குது. ஆண் பூவா இருந்தா வெறும் பூவா இருக்கு தெரியுமா?

ஆண் பூக்களப் பறிச்சு மார்கழி கோலத்துல வைப்பாங்க. ஏன்னா ஆண் பூக்கள பறிக்க, பறிக்கதான் பெண் பூக்கள் அதிகமா பூத்துக் காய்க்குமுன்னு அந்த அக்கா சொன்னாங்க.” என்றார் அம்மா ஆச்சர்யமாக.

எனக்கும் இது தெரியாத விசயமாக இருந்தது. உடனே வேகமாக சாப்பிட்டுவிட்டு பூசணிக்கொடியைப் பார்க்க ஓடினேன்.

“ஏய், சத்யா, எங்கே போற? உனக்கு ஆபீசுக்கு லேட் ஆகலயா?'”என்று அம்மா கத்தினார். நான் எதனையும் பொருட்படுத்தவில்லை.

பூசணிக்கொடி பச்சை பசேலென அகன்ற இலைகளையும், மஞ்சள் நிறப்பூக்களையும் கொண்டு, இடிமானப் பொருட்கள் போடப்பட்டிருந்த இடம் முழுவதையும் ஆக்கிரமித்து இருந்தது.

அதனுடைய மூலம் எங்கிருக்கிறது என்று எண்ணி தேடினேன். பக்கத்தில் துத்திச்செடியும், சீமைக்கருவேலமும் புதர்காடாக இருந்ததால் என்னால் மூலத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

அம்மா சொன்ன மாதிரி பெண்பூக்களின் அடிப்பாகத்தில் காய் இருந்தது. ஆண் பூக்கள் வெறுமனே காணப்பட்டன.

அப்போது பூசணிக்கொடிக்கு எதிரே இருந்த இரட்டை வீடுகளில் மேலவீட்டின் ரேவதி வாசலில் நின்று கொண்டு,

‘என்ன சத்யா பூசணிக்கொடியையா பாக்குற?. நிறைய காய சின்னபசங்க பிடுங்கி போட்டுறாங்க. அந்த வீட்டுக்கு பக்கத்துல ஒரு காய் கொஞ்சம் பெரிய சைசுல இலைக்கு அடியில இருக்கு. தைப்பொங்கலுக்கு சரியா வருமுன்னு நினைக்குறேன்’ என்றபடி எதிர்புற வீட்டைக் காட்டினார்.

நான் அவர் கூறியதற்கு வெறுமனே தலையாட்டிவிட்டு அலுவலகம் செல்ல முனைந்தேன்.

அதற்கு அடுத்து வந்த ஒவ்வொரு நாளும் பூசணிக்கொடியையும், ஒற்றைக்காயையும் நான் பார்க்க தவறுவதில்லை.

பூசணிக்காய் யாருக்கு?

ஒருவாரம் கழித்து ஞாயிற்றுக்கிழமை மதியம் சாப்பாட்டு வேளையில், அம்மா பூசணிக்கொடி பற்றிய பேச்சை எடுத்தார்.

“தெருவுல வாழைப்பழம் விக்குற கூடக்காரி, நேத்து எதிர்த்த வீட்டுக்காரங்ககிட்ட, பொங்கலுக்கு பூசணிக்காய பறிச்சா, அவளுக்கும் கொஞ்சம் வேணும்முன்னு சொன்னாளாம்.

தையல் கடைக்கு வேலைக்குப்போகும் மேலத்தெரு லட்சுமி, நான் நேத்து வெளிய நிக்றப்ப பூசணிக்கொடிய பார்த்திட்டு இருந்தா.

நான் அவள பாக்றத கவனிச்சதும் ‘எக்கா, நான் நிதமும் இந்தக்காய கவனிச்சிட்டு வரேன். பொங்கலுக்கு பூசணிக்காய பறிச்சா எனக்கு கொஞ்சம் கொடுங்கன்னு என்ட சொன்னா.”

அப்பா உடனே “நீயும், எதிர்த்த வீட்டுக்காரங்களும்தான், பூசணிகாய கண்ணு வைச்சிருக்கீங்கன்னு நினைச்சேன். ஆனா, இப்பதான் தெரியுது பூசணிக்காய நிறைய பேரு கவனிக்காங்கன்னு.” என்றார்.

“காலிநிலத்துக்கு எதிர்வீட்டுக்காரங்ககூட, பொங்கலுக்கு பூசணிக்காய பறிக்கனும்முன்னு சொன்னாங்க.” என்றேன்.

“எதிர்த்த வீட்டக்கா, யாரும் அந்த காய பறிச்சுடாம, பூதம் புதையல காக்குற மாதிரி பாதுகாக்காக.

போகிக்கு முதநாள் நாங்க பூசணிக்காய பறிக்க போறோம்” என்றார் அம்மா,  பூசணிக்காய் எதிர்த்த வீட்டாருக்கும், தனக்கும் மட்டும் என்ற உரிமையுடன்.

“உங்களுக்கு தெரிஞ்சு இத்தன பேரு, பூசணிக்காய பொங்கலுக்கு பறிக்கனுமுன்னு நினைச்சிருக்காங்க. தெரியாம எத்தனபேரு அதக்கண்ணு வச்சிருக்காங்கன்னு தெரியாது.” என்றார் அப்பா சிரித்துக் கொண்டே.

“பூசணிகாய பறிக்க நினைக்குற யாராவது அத முறைப்படி நட்டு வைச்சீங்களா? இல்ல அதுக்குத்தான் தண்ணி ஏதாவது ஊத்துனீங்களா? இல்லையே.

அதுவா முளைச்சி கேட்பாரற்று கிடந்துச்சு. இன்னைக்கு பலன் குடுகையில மட்டும் எல்லோரும் அத எடுத்துக்கன்னுமுன்னு நினைக்குறோம். என்னே பெருந்தன்மை நமக்கு?” என்றேன் நான் கடுப்பாக.

“இப்படிதான் பொதுவா இருக்கற நிறுவனமோ, அமைப்போ வளர்ந்து பலன் கொடுக்கையில பலபேரு அத கைப்பத்த முயற்சிக்கிறாங்க இன்னைக்கு.” என்று வருத்தப்பட்டார் அப்பா.

“சரி, பேசாம சாப்பிடுங்க” என்றார் அம்மா எரிச்சலாக.

பொதுச்சொத்து

போகிக்கு முதல்நாள் காலையில எதிர்த்த வீட்டக்கா காலையிலே எங்கம்மாகிட்ட வருத்தமா பேசுற சத்தம் கேட்டுச்சு. நான் எட்டிப்பார்த்தேன்.

“சத்யா,  இந்த கொடுமைய கேட்டுயா?  நேத்து சாயந்தரம்கூட இந்தக்கா பூசணிக்காய பார்த்துருக்காக. காலையில எந்திரிச்சு பறிக்கலாமுன்னு போய்பாத்தா பூசணிக்காய் இல்லையாம்.  யாரோ அதுக்குள்ள பறிச்சுட்டாங்க. யாருன்னு தெரியல்ல.” என்றார் அம்மா மிகவும் ஏமாற்றத்துடன்.

எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை.

‘பொதுச்சொத்து எல்லோருக்கும் சொந்தம் தானே. அதான் யாரோ பறித்து விட்டார்கள்’ என்று எண்ணினேன்.

பொங்கலன்று அம்மா இடிசாம்பார் வைத்திருந்தார்கள். நாங்கள் சாப்பிட அமர்ந்தபோது “நம்ம பூசணிக்காய போட்டு சாம்பார் வைச்சிருந்தா நல்லா இருந்திருக்கும். நாம கொடுத்து வச்சது அவ்வளவுதான்” என்றார் அம்மா ஏக்க பெருமூச்சுடன்.

பொங்கல் முடிந்து இரண்டு வாரம் கழித்து பூசணிக்கொடியை சென்று பார்த்தேன். பூசணிக்கொடியில் இருந்த காய்கள் வெம்பிப் போய் இருந்தன. புதிதாக பூக்கள் ஏதும் என் கண்களில் படவில்லை.

பக்கத்துவீட்டு அம்மா என்னிடம் “சத்யா, இந்த கொடியில ஒத்த பூசணிக்காய் மட்டுந்தான் பெரிசா வளர்ந்துஞ்சு. நிறைய பிஞ்சுகள சின்னபசங்க பிடுங்கி எறிஞ்சுட்டாங்க.

இப்ப வெயில் அதிகமாயிட்டதால பூக்கள் கருகி, கொடியும் கருக ஆரம்பிச்சுருச்சு. ஆனா, அந்த ஒத்த பூசணிக்காய யாரோ பறிச்சுட்டாங்க.” என்றார் வருத்தமாக.

பொதுச்சொத்து என்பது பலன் கொடுக்கும் வரையில் மட்டுமே என்பதை மார்கழி மாதத்து பூசணிக்காய் என்ற இக்கதை உணர்த்துகிறது.

வ.முனீஸ்வரன்

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.