மாலறியா நான்முகனும் காணா மலையினை

மாலறியா நான்முகனும் காணா மலையினை நாம் என்ற இப்பாடல் திருவெம்பாவையின் ஐந்தாவது பாடல் ஆகும்.

அடிமுடி அறியா வண்ணம் சோதிப் பிழம்பாக காட்சியருளிய, இறைவரான சிவபெருமானின் மீது, வாதவூரடிகள் என சிறப்பிக்கப்படும் மாணிக்கவாசகரால்  பாடப்பட்ட  பாடல்களின் தொகுப்பு திருவெம்பாவை ஆகும்.

மாணிக்கவாசகர் திருவண்ணாமலையில் தங்கியிருந்தபோது திருவெம்பாவையை பாடினார். இப்பாடல் இன்றைக்கும் மார்கழியில் இறைவழிபாட்டின் போது பாடப்படுகிறது.

பாவை நோன்பு வழிபாட்டிற்காக பெண்கள் கூட்டமாகச் செல்லுகின்றனர்.

வழியில் வழிபாட்டிற்கு தயாராகி வீட்டிற்கு வெளியே வராமல், தூங்கிக் கொண்டிருக்கும் தங்களின் தோழியை இறைவனின் புகழினைப் பாட அழைப்பதாக, திருவெம்பாவையின் ஐந்தாம் பாடல் அமைந்துள்ளது.

“திருமாலுக்கும், பிரம்மனுக்கும் அருளிச் செய்யாத இறைவன் நமக்கு எளிதில் அருளுவார் என்று வாய் இனிக்க பேசிய வஞ்சகியே, உன் வாயில் கதவைத் திறந்திடு.” என்று அழைக்கின்றாள்.

சிறிது நேரத்தில் இறைவனின் பெருமைகளை புகழ்ந்து மெய் மறந்து பெண்கள் பாடுகின்றனர். அதனைக் கேட்டும் உள்ளே இருந்தவள் வரவில்லை.

“நீ உன்னுடைய கூந்தலில் நறுமணச் சாந்தினைப் பூசி அதன் மீது நாட்டம் கொண்டு இறைவனை மறந்து தூங்குகின்றாய். உன்னுடைய இந்த நிலைமையை என்னவென்று சொல்வது?’ என்று பெண்கள் வருத்தமடைகின்றனர்.

தான் என்ற அகந்தையுடன் இறைவனைத் தேடுபவர்கள், தேவர்கள் (திருமால், பிரம்மன் உட்பட) ஆயினும் அவர்களுக்கு இறைவன் அருளமாட்டார்.

உள்ளத்தில் உண்மையான அன்பு கொண்டு நெஞ்சுருகி முழு அர்ப்பணிப்புடன் வழிபடுவோர் எளியோர் ஆயினும் அவர்கள் இறையருளுக்கு பாத்திரமாவர் என்பதை இப்பாடல் உணர்த்துகிறது.

இனி திருவெம்பாவை ஐந்தாவது பாடலைக் காண்போம்.

திருவெம்பாவை பாடல் 5

மாலறியா நான்முகனும் காணா மலையினை நாம்

போலறிவோம் என்றுஉள்ள பொக்கங்களே பேசும்

பாலூறு தேன்வாய்ப் படிறீ கடைதிறவாய்

ஞாலமே விண்ணே பிறவே அறிவரியான்

கோலமும் நம்மை ஆட்கொண்டருளிக் கோதாட்டும்

சீலமும் பாடிச் சிவனே சிவனே என்று

ஓலம் இடினும் உணராய் உணராய்காண்

ஏலக் குழலி பரிசேலோர் எம்பாவாய்

 

விளக்கம்

பாவை நோன்பிற்காக பெண்கள் கூட்டமா செல்கின்றனர். அப்பெண்களின் தோழி ஒருத்தி நோன்பிற்கு தயாராகி வெளியே வராமல், வீட்டிற்குள்ளே உறங்கிக் கொண்டிருக்கிறாள்.

உறங்கிக் கொண்டிருக்கும் தோழியை நோக்கி பெண்கள் “முதலும் முடிவும் இல்லாத இறைவனான சிவபெருமானின் அடியையும் முடியையும் தேடி திருமாலும் பிரம்மாவும் சென்றபோது இறைவனார் சோதிப்பிழம்பாகி அருள்மலையாக நின்றார்.

அந்த அருள்மலையை திருமாலால் அறிந்து கொள்ள முடியவில்லை. நான்முகனால் காண இயவில்லை.

இத்தகைய அறியவரும், பெரியவருமாய் உள்ள சிவபெருமானை நாம் எல்லோரும் அறியும் ஆற்றல் உடையோம் என்று, பிறர் நம்பும்படி பால்போலும் தேன்போலும் இனிக்க இனிக்கப் பேசிய வாயினை உடைய வஞ்சகியே. உன்னுடைய வாசல் கதவினை திற.” என்கின்றனர்.

தோழியோ கதவை திறவாமல் இருக்கிறாள். உடனே பெண்கள் இறைவனின் திருப்புகழினைப் பாடுகின்றனர்.

“மண்ணில் வாழ்கின்றவர்களும், விண்ணுலகத்து தேவர்களும், ஏனைய உலகில் வாழ்பவர்களும் காண்பதற்கு அரிதான வடிவத்தினையும், நம்முடைய குற்றங்களை களைந்து எளியவர்களாகிய நம்மை ஆட்கொண்டருளி சீராட்டுகின்ற பெருங்குணத்தையும் பாடுகின்றோம்.

‘சிவனே’ ‘சிவனே’ என்று நெஞ்சுருகி உரக்க பாடுகின்றோம்.

எங்களின் பாடல் ஒலியையும் நீ உணர்ந்தவளாகத் தெரியவில்லை; உணர்ந்து விழிக்கவும்வில்லை. நீ இறைவனை மறந்து உன்னுடைய மயிர்சாந்து பூசிய கூந்தலை விரும்பி உறங்குகின்றாய். உன்னுடைய இத்தன்மையை என்னவென்பது?” என்று வருத்தம் கொள்கின்றனர்.

இறைவழிபாட்டில் புறஅழகையும், தான் என்ற‌ கர்வத்தையும் மறந்து, மன ஒன்றுதலோடு நெஞ்சுருகி முழு அர்ப்பணிப்புடன் வழிபட்டால் இறைவன் நம்மை ஆட்கொண்டருளுவான் என்பதை இப்பாடல் விளக்குகிறது.

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.