மாலே மணிவண்ணா மார்கழி நீராடுவான்

மாலே மணிவண்ணா மார்கழி நீராடுவான் என்ற இப்பாடல், பெரியாழ்வாரின் செல்வப் புதல்வியும், கோதை நாச்சியார் என்று அழைக்கப்படும் ஆண்டாள் அருளிய, திருப்பாவையின் இருபத்து ஆறாவது பாசுரம் ஆகும்.

திருப்பாவை பாடல் 26

மாலே மணிவண்ணா மார்கழி நீராடுவான்

மேலையார் செய்வன வேண்டுவன கேட்டியேல்

ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன

பாலன்ன வண்ணத்துன் பாஞ்ச சன்னியமே

போல்வன சங்கங்கள் போய்ப்பா டுடையனவே

சாலப் பெரும்பறையே பல்லாண்டு இசைப்பாரே

கோல விளக்கே கொடியே விதானமே

ஆலின் இலையாய் அருளேலோர் எம்பாவாய்

விளக்கம்

திருமாலே!

நீலமணி போன்ற நிறம் உடையவனே!

பேரூழிக் காலத்தில் தோன்றிய பெருவெள்ளத்தில் மிதந்து வந்த ஆலமரத்து இலைமீது ஆடாது அசையாது பள்ளி கொண்டவனே!

மார்கழி நோன்பிற்காக நாங்கள் ஒன்றும் உன்னிடம் புதிதாகக் கேட்கப் போவதில்லை.

மார்கழி நீராடுவதற்காக சான்றோர்கள் மேற்கொள்ளும் முறைகளை கேட்பாயானால், அவர்கள் சுட்டிக்காட்டிய சிலபொருட்கள் வேண்டும். அவற்றைப் பட்டியலிடுகிறோம். கேட்டுக்கொள்.

உலகெமெல்லாம் அதிரும்படி ஒலிக்கவல்ல, உனது பஞ்சஜன்யத்தைப் போன்று, பாலின் நிறமுடைய வெண்சங்குகள் வேண்டும்.

அதிக ஒலி செய்யும் பறைகள் (சாதனங்கள்) வேண்டும்.

பல்லாண்டு பாடுவோர் வேண்டும்.

அழகிய திருவிளக்கு வேண்டும்.

கொடி வேண்டும்.

அதிகாலைப் பனிக்குப் பாதுகாவலாக மேல்கட்டி விதானம் வேண்டும்.

இவற்றை எல்லாம் நீ எங்களுக்கு நீ அருள வேண்டும் திருமாலே, மணிவண்ணா!

கோதை என்ற ஆண்டாள்

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.