மாலை மயக்கம்

மாலை நேரம் வந்துச்சுன்னா மனசு உருகுதே – ஒரு

மயக்கத்தை தான் எந்தன் நெஞ்சில் அதுவும் கொடுக்குதே

சேலை கட்டி வளர்ந்த பிறகும் சுகத்தை கொடுக்குதே – நாம

சேர்ந்து விளையாடியதை நினைக்கும் போதிலே (மாலை)

 

சோளத்தட்டை தேரு செஞ்சி ஓட்டி ரசிச்சோம் – பிறகு

சோறு பொங்கி குழம்பு வச்சி பார்த்து ரசிப்போம்

ஆளுக்காளு வீடுகட்டி மணலை சிதைப்போம் – அதை

அடிச்சி நொறுக்கி மறுபடியும் கட்டி ரசிப்போம் (மாலை)

 

சும்மா கிடந்த கல்லை எடுத்து சாமியாக்கினோம் – அதை

சுமந்துகிட்டு ஊர்வலமாய் நடந்து காட்டினோம்

அம்மா தந்த அரிசி முருக்கை அதுக்கு படைச்சோம் – அதை

அழகுப் பூவால் அலங்கரிச்சு அழிச்சி சிரிச்சோம் (மாலை)

 

கள்ளன் போல நீ ஒளிய நானும் தேடுவேன் – உன்னை

கண்டுகிட்டா கைபிடிச்சி இழுத்து ஓடுவேன்

கள்ளமில்லா அந்த வயசும் திரும்ப கிடைக்குமா? – நான்

கைபிடிச்சி இழுத்திடத்தான் இப்ப முடியுமா? (மாலை)

– இராசபாளையம் முருகேசன் (கைபேசி: 9865802942)