மிதிவண்டிப் பயிற்சி / சைக்கிள் பயிற்சி பலன்கள்

மிதிவண்டிப் பயிற்சி / சைக்கிள் பயிற்சி உடலுக்கும் உள்ளத்திற்கும் புத்துணர்வு தரும் மிக எளிய பயிற்சி.

பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கும் இந்த உலகில் மனிதனும் தன் தேவைகளுக்காக ஓய்வின்றி ஓடிக்கொண்டு இருக்கிறான்.

அவன் தனது உடல் ஆரோக்கியத்திற்கான முயற்சிகளை மேற்கொள்ள முடியாமல், உடல்நலம் கெட்டும், மனஉளைச்சலுக்கு ஆளாகியும் காலம் தள்ள வேண்டிய சூழலே தற்போது நிலவுகிறது .

பெரும்பாலானவர்கள் நோய் வந்தபிறகே (உதாரணமாக இதயநோய்கள்,உடல் பருமன் ,நீரிழிவு நோய் ) மருத்துவரின் ஆலோசனையின் பெயரில் கட்டாயத்திற்காக நடைப்பயிற்சி ,ஜாகிங், உள்ளிட்ட‌ சில எளியவகை உடற்பயிற்சிகளை மேற்கொள்கின்றனர் .

உடற்பயிற்சிக்கு என‌  நேரம் ஒதுக்க முடியாதவர்கள், தங்கள் உடலை கட்டுக்கோப்பாகவும், ஆரோக்கியமானதாகவும் அமைத்துக் கொள்ள மிதிவண்டிப் பயிற்சி / சைக்கிள் பயிற்சி பயனுள்ளதாக அமைகின்றது.

மிதிவண்டிப் பயிற்சி என்பது ஏரோபிக் வகை பயிற்சியாகும். இது சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மேற்கொள்ளக்கூடிய எளியமுறை பயிற்சியாகும் .

மிதிவண்டிப் பயிற்சி / சைக்கிள் பயிற்சி நன்மைகள்

இப்பயிற்சி மேற்கொள்ளும்போது உடலின் பல பாகங்கள் பயனடைகின்றன .தொடர்ந்து மிதிவண்டிப்பயிற்சி மேற்கொள்வதால் நாம் பல நன்மைகளைப் பெறலாம். அவை

 

இதயத்தசைகள் மற்றும் நுரையீரல் பலமடைகின்றன.

உடலிலுள்ள தசைகள் வலுப்பெறுகின்றன.

மூட்டுகள் வலுப்பெறுவதுடன் ,மூட்டுகளின் செயல்பாடுகள் அதிகரிக்கின்றன.

உடலிலுள்ள எலும்புகள் பலம் பெறுகின்றன.

உடல் பருமன் குறைகிறது.

இரத்தஓட்டம் உடல்முழுவதும் அதிகரிக்கின்றது.

இரத்த ஓட்ட அதிகரிப்பதால் இரத்தக்குழாய்களில் ஏற்படும் இரத்த அடைப்பு  தடுக்கப்படுகிறது.

உடலில் சேரும் கொழுப்புகள் குறைகின்றன.

மனதிற்கு மகிழ்ச்சி உண்டாவதுடன் மனஅழுத்தம் குறைகிறது.

சுவாசத்தசைகள் பலம்பெறுவதோடு ,சுவாசிப்பது எளிதாகிறது.

மூளைக்கு பிராணவாய்வு தடையின்றி செல்கிறது.

மிதிவண்டிப்பயிற்சியின்போது உடலிலுள்ள வியர்வை சுரப்பிகளின் செயல்பாடுகள் தூண்டப்படுவதால் வியர்வையின் மூலம் உடலிலுள்ள நச்சுப்பொருள்கள் வெளியேற்றப்படுகின்றன .

இதயத்தசைகள் வலுப்பெறுவதால் இதய நோய்கள் மற்றும் மாரடைப்பு வருவது தவிர்க்கப்படுகிறது.

தசைகள் வலுப்பெறுவதால் மூட்டுகளில் ஏற்படும் நோய்கள்,மூட்டு தேய்வு ஆகியவை தடுக்கப்படுகின்றன

சரியான உடல் செயல்பாடுகள் இல்லாமல் உள்ளவர்களுக்கே இரண்டாம் வகை நீரிழிவு நோய் ஏற்படுகிறது .

2017  ல் எடுக்கப்பட்ட ஆய்வின் படி ஒரு நாளைக்கு சுமார் 30 நிமிடங்கள் முறையான மிதிவண்டிப்பயிற்சி மேற்கொள்பவர்களுக்கு  நீரிழிவு நோயின் தாக்கம் 40 சதவீதம் குறைவதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது .

அதே போல் பெருங்குடல், மார்பு  புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் மிதமான மிதிவண்டிப்பயிற்சி மேற்கொள்ளும்போது நோயின் தாக்கம் குறைவதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

உடற்பயிற்சி என்று இல்லாமல் குறைந்த தூரம் செல்லும் பயணங்களுக்கு நாம் மிதி வண்டியைப் பயன்படுத்த ஆரம்பித்தால் அது காற்று மாசுபாட்டை நீக்க உதவும். சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதே இன்று மிகப்பெரிய தர்ம செயல் ஆகும்.

எவ்வளவு நேரம்?

வாரத்தில் இரண்டிலிருந்து நான்கு மணி நேரமாவது குறைந்த பட்சம் மிதிவண்டிப்பயிற்சியினை மேற்கொள்ளவேண்டும் .இதன் மூலம் 2000 கலோரிகள் வரை எரிக்கப்பட்டு உடல் சீரடைகிறது .

உடற்பயிற்சி மேற்கொள்ளாதவர்கள், பணிச் சுமையினால்  உடற்பயிற்சி மேற்கொள்ள நேரம் கிடைக்காதவர்கள் வாரத்திற்கு நான்குமணி நேரமாவது மிதிவண்டிப்பயிற்சியினை மேற்கொள்வது உடலின் திண்மையை மேம்படுத்தும்.

பக்க வாதத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் படுக்கையிலேயே STATIC CYCLE எனப்படும் நிலையான மிதிவண்டிப்பயிற்சியை மேற்கொண்டால் அவர்கள் மீண்டும் நிற்க, நடக்க ,பேருதவியாக இருக்கும்.

முறையான மிதிவண்டிப் பயிற்சி மேற்கொள்வீர். ஆரோக்கியத்துடன் வளமான வாழ்வு வாழ்வீர்.

 

க.கார்த்திகேயன் அவர்கள்

க.கார்த்திகேயன்

தமிழ்நாடு இயன்முறை மருத்துவர்கள் நலச்சங்கத்தின் மாநிலத் தலைவர்.

ஆர். கே. இயன்முறை மருத்துவமனை மற்றும் புனர்வாழ்வு மையத்தின் நிர்வாக இயக்குநர்.

அண்ணாமலைப் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரியில் 2007 ஆம் ஆண்டிலிருந்து 2012 ஆம் ஆண்டுவரை உதவி விரிவுரையாளராகப் பணியாற்றியவர்.

அண்ணாமலைப் பல்கலைக் கழகம் – ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் இளையோர் இயன்மருத்துவப் பட்டம் (Bachelor of Physiotherapy), முதுநிலை உளவியல் ஆற்றுப்படுத்துதல் பட்டம்(M.S.,(Psychotherapy) படித்தவர்.

விளையாட்டு மருத்துவம் (Sports Medicine & Rehabilitation) ), மூட்டுவலிக்கான சிறப்பு சிகிச்சை (Ligament Injuries & Rehabilitation) ஆகிய சான்றிதழ் படிப்புகளையும் படித்தவர்.

முகவரி:
க.கார்த்திகேயன்
46 ,மேலத்தெரு
வீரான நல்லூர் ,
காட்டுமன்னார் கோயில் -608301
கைபேசி: 9894322065

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.