மின்சார கார் – ஓர் அறிமுகம்

மின்சார கார் பற்றிய செய்திகளை நாம் இக்கட்டுரையில் காண இருக்கிறோம்.

மனிதனின் அன்றாட செயல்பாடுகள் சுற்றுசூழலை பாதிப்படைச் செய்து கொண்டு இருக்கின்றன. சுற்றுசூழல் சீர்கேட்டில் காற்று மாசுபாடு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது.

பசுமை இல்ல வாயுக்கள் புவிவெப்பமயமாதலுக்கு முக்கிய காரணமாக உள்ளன. பெட்ரோலிய பொருட்களால் இயங்கும் வாகனங்கள் இவ்வாயுக்களை அதிகளவு வெளியிடுகின்றன.

எனவே பெட்ரோலிய பொருட்கள் கொண்டு இயங்கும் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்குப் பதிலாக மின்சாரத்தில் இயங்கும் இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளன.

இந்த மின்சார வாகனங்கள் எவ்வாறு செயல்படுகின்றன. அவை சுற்றுசூழலில் எந்த வகையான தாக்கத்தை உண்டாக்குகின்றன. அவற்றின் நிறை குறைகள் பற்றிப் பார்க்கலாம்.

 

மின்சார கார்

மின்சார கார் என்பது மின்சாரத்தை எரிபொருளாகக் கொண்டு இயங்கக் கூடியது. இதில் மின்சாரத்தை சேமிக்க பாட்டரிகள் பயன்படுத்தப்படுகின்றன.

இந்த பாட்டரிகளில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் மின்சாரத்தை மின்மோட்டர்கள் எடுத்துக் கொண்டு காரினை செயல்பட வைக்கின்றன. இதில் பயன்படுத்தப்படும் பாட்டரிகள் மீண்டும் ரீஜார்ஜ் செய்யக் கூடியவை.

மின்சார கார் ரீசார்ஜ் செய்தல்
மின்சார கார் ரீசார்ஜ் செய்தல்

 

முதல் நடைமுறை மின்சார கார் 1880-ல் உற்பத்தி செய்யப்பட்டது. 19-ம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும், 20-ம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் மின்சார கார் பிரபலமடைந்தது.

பழைய‌ மின்சார கார்
பழைய‌ மின்சார கார்

 

சுற்றுச்சூழலில் பசுமை இல்ல வாயுக்களின் தாக்கம் மற்றும் பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வு, மின்சார கார்களில் பயன்படுத்தப்படும் பாட்டரிகளின் முன்னேற்றம் ஆகியவற்றின் காரணமாக 2008-ம் ஆண்டு முதல் மின்சார வாகனங்கள் மீண்டும் பிரபலமடையத் துவங்கிவிட்டன.

மின்சார வாகனங்களில் இருந்து வெளியேற்றப்படும் பசுமை இல்ல வாயு மாசுக்கள் மிகவும் குறைவு அல்லது இல்லை என்றே கூறலாம்.

பாட்டரிகள் ஆரம்பத்தில் அதிக விலையைக் கொண்டிருந்தன. தற்போதைய நவீன அறிவியலின் காரணமாக மின்சார வாகனங்களின் பாட்டரிகளின் விலை குறையத் துவங்கியுள்ளது.

இக்காரணங்களால் தற்போது மின்சார வாகனங்கள் பிரபலமடையத் துவங்கியுள்ளன.

 

மின்சார வாகனங்களின் நிறைகள்

மின்சார வாகனங்கள் பசுமை இல்ல வாயுக்களை வெளியேற்றுவதில்லை. எனவே காற்று மாசுபாடு குறைக்கப்படுகிறது.

பெட்ரோலிய எரிபொருட்கள் இவ்வகை வாகனங்களுக்கு தேவையில்லை என்பதால் வற்றும் வளமான எண்ணெய் வளம் குறிப்பிட்ட அளவு பாதுக்கப்படுகிறது.

இவை சத்தம் எழுப்புவது இல்லை. எனவே சுற்றுசூழலில் ஒலி மாசுபாடு குறைக்கப்படுகிறது.

மின்சார காரில் பயணம் செய்யும்போது விபத்துக்கள் ஏற்பட்டால் காரில் உள்ள காற்று பைகள் விரிவடைந்து மின்மோட்டார்களுக்கு மின்சாரம் செல்வது தடை செய்யப்படுகிறது. இதனால் கோர விபத்துக்கள் தவிர்க்கப்படுகின்றன.

 

மின்சார வாகனங்களின் குறைகள்

மின்சார வாகனங்களின் வேகம் மற்றும் செல்லும் தூரம் ஆகியவற்றின் அளவானது குறைவாக உள்ளது.

இவை ஒலியில்லாமல் செல்வதால் சில நேரங்களில் விபத்திற்கு வழிவகுக்கிறது.

மின்சார வாகனங்களின் பயன்பாட்டினால் மின்தேவையின் அளவு அதிகரிக்கிறது. மின்பற்றாக்குறை உள்ள இடங்களின் இவ்வாகனங்களின் பயன்பாடு கேள்விக் குறியாகிறது.

 

மின்சார காரினால் சுற்றுசூழலில் ஏற்படும் தாக்கம்

மின்சார கார்கள் இயங்கத் தேவையான மின்சாரமானது இயற்கை மூலங்களான சூரியன், காற்று ஆகியவற்றிலிருந்து பெறப்படும்போது சுற்றுசூழல் பெரியளவில் பாதிக்கப்படுவதில்லை.

சூரிய சக்தி மூலம் மின்சார கார் ரீசார்ஜ் செய்தல்
சூரிய சக்தி மூலம் மின்சார கார் ரீசார்ஜ் செய்தல்

 

நிலக்கரியின் மூலம் மின்சாரம் பெறப்பட்டால், அவ்விடங்களில் மின்சார கார்கள் மறைமுக சுற்றுசூழல் பாதிப்பை பெரிய அளவில் ஏற்படுத்துகின்றன.

அதாவது அதிக மின்சார தேவையின் காரணமாக அனல்மின் நிலையங்களிலிருந்து அதிக அளவு பசுமை இல்ல வாயுக்கள் வெளியேற்றப்படுகின்றன.

இவ்விடங்களில் பெட்ரோலிய பொருட்கள் கொண்டு இயங்கும் வாகனங்கள் ஏற்படுத்தும் காற்று மாசுபாட்டைவிட மின்சார கார் மறைமுகமாக அதிகளவு காற்று மாசுபாட்டை உண்டாக்குகிறது.

மின்சார கார்களில் பயன்படுத்தப்படும் பாட்டரிகளின் கழிவு நீக்கம் சுற்றுசூழலில் பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது.

ஏனெனில் இக்கார்களில் பயன்படுத்தப்படும் பாட்டரிகளில் காரீயம், நிக்கல், காப்பர் மற்றும் லித்தியம் போன்ற கடின உலோகங்கள் உள்ளன. இவற்றின் கழிவுநீக்கம் சுற்றுசூழலுக்கு பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது.

மின்சார வாகனங்களில் பாட்டரிகள் மறுசுழற்சி செய்யப்பட்டும் சில இடங்களில் பயன்படுத்தப்படுகிறது.

மின்சார வாகனங்களில் பயன்படுத்தும் பாட்டரிகளின் மூலப்பொருட்கள் மிகக்குறைந்த அளவே மண்ணில் இயற்கையாக கிடைக்கின்றன.

இம்மூலப்பொருட்களைப் பெறுவதற்காக சுரங்கங்கள் ஆழமாகத் தோண்டப்படுகின்றன. மேலும் மூலப்பொருட்களை தனியே பிரித்தெடுக்க வேதிப்பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதனால் சுற்றுசூழல் பாதிப்படைகிறது.

நவீன அறிவியலின் முன்னேற்றத்தால் மின்சார வாகனங்களுக்கான மின்சாரம் சூரியன், காற்று மற்றும் அணுமின் நிலையங்கள் ஆகியவற்றிலிருந்து அதிகளவு கிடைக்கப்படும்போது மின்சார வாகனங்கள் சுற்றுசூழலுக்கு பாதுகாப்பானவையாக இருக்கும்.

மின்சார வாகனங்களின் பாட்டரிகள் சுற்றுசூழலுக்கு தீங்கு விளைவிக்காத வகையில் முறையாக கழிவுநீக்கம் செய்யப்படும் போதும், மறுசுழற்சி செய்யப்படும்போதும் அது வரவேற்கத்தக்க ஒன்றாகும்.

நவீன அறிவியல் முன்னேற்றத்தால் சுற்றுசூழலுக்கு தீங்கு விளைவிக்காத மின்சார வாகனங்களின் பயன்பாடு வருங்கால சந்ததியருக்கு ஒரு வரப்பிரசாதமாகும்.

வ.முனீஸ்வரன்

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.