மின்சிகிச்சை என்றவுடன் மிரளாதீர்கள்!

“உங்களுக்கு நர்வ்ஸ்ல சின்ன ப்ராப்ளம் இருக்கும்னு நினைக்கிறேன். அப்படி இருந்தா, ஷாக் ட்ரீட்மெண்ட் தரவேண்டியிருக்கும்.” என்று சொல்வார் மருத்துவர்.

“அய்யோ, டாக்டர்…ஷாக் ட்ரீட்மெண்டா, ரொம்ப பயமா இருக்கு டாக்டர். உயிருக்கு எதுவும் ஆகிடாது இல்லையா? ரொம்ப வலிக்குமா?” இப்படி பல கேள்விகளைக் கேட்டு பதறி விடுவார்கள்.

அதற்குக் காரணம் சில விஷயங்களை அதிகம் நெருங்கவும் முடியாது. அதேசமயம் அவற்றை ஒரேடியாக தவிர்க்கவும் முடியாது.

நெருப்பு, கேஸ் இப்படியான‌வற்றின் வரிசையில் மின்சாரத்துக்கும் இடம் உண்டு.

மின்சாரம் என்றதும், லைட் முதல் கணினி வரை மின்உபகரணங்களை இயக்குவதற்கான ஆற்றலைத் தருவது என்பதுதான் பலருக்கும் நினைவு வரும்.

ஆனால் மருத்துவ உலகில் சில சிகிச்சைகள் மின்சாரத்தின் உபயோகத்தால் அளிக்கப்படுகிறது. அதுவே மின்சிகிச்சையாகும்.

குறிப்பாக சொன்னால் இயன்முறை மருத்துவத்துறையில்தான் மின்சிகிச்சை அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது.

மின்சிகிச்சை என்றவுடன் பயப்படவோ அல்லது ஏதாவது ஆகிவிடும் எனநினைத்து சிகிச்சையையேத் தவிர்த்து வாழ்நாள் முழுவதும் வலியோடு வேதனைப்படவோ வேண்டாம் என்பதை விளக்கி விழிப்புணர்வினை ஏற்படுத்துவதே இந்தக்கட்டுரை.

இயன்முறை சிகிச்சையில் மின்சிகிச்சை

இயன்முறையில் மின்சிகிச்சையானது எப்படி செய்யப்படுகிறது என்பதற்கு உதாரணமாக வலிகுறைப்பிற்காக பயன்படுத்தப்படும் மின்சிகிச்சைக்கான கருவியான TENS (TRANS CUTANEOUS ELECTRICAL NERVE STIMULATION) பற்றிப் பார்ப்போம்.

TENS கருவியானது சிறிய பேட்டரியால் இயங்கக்கூடிய மின்சிகிச்சைக் கருவியாகும்.

தற்போது மின்சாரத்தில் இயங்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டு இயன்முறை மருத்துவத்துறையில் (Physiotherapy) பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

வலியுள்ள இடத்தில் மின்அட்டைகளைப் (Electrical Pads) பொருத்தி TENS கருவியின் மூலம் சிறிய அளவிலான மின்தூண்டுதல் வலியுள்ள அல்லது பாதிக்கப்பட்ட இடத்திற்கு அளிக்கப்படுகின்றது.

இந்த மின்தூண்டுதலானது தண்டுவடம் மற்றும் மூளைப்பகுதிக்குச் சென்று உடலிலுள்ள இயற்கையான வலிகுறைப்பு ஹார்மோனான எண்டார்பினைத் தூண்டி வலியைக் குறைக்கவும், தசைகளை இலகுவாகவும் (Relax) செய்கிறது.

என்ன நோய்களுக்கு மின்சிகிச்சையைக் கொடுக்கலாம்?

கீழ்கண்ட நோய் அறிகுறிகளுக்கு இயன்முறை மருத்துவத்தில் TENS பயன்படுத்துகிறது.

மூட்டுவலி, முதுகுவலி, கழுத்துவலி, மூட்டுத் தேய்வு மற்றும் மூட்டு சம்பந்தமான நோய்கள்.

தசைகளில் ஏற்படும் வலி, விளையாட்டு வீரர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள், மாதவிடாய் நேரத்தில் பெண்களுக்கு ஏற்படும் வலியினைப் போக்க இக்கருவி பயன்படுத்தப்படுகிறது.

அதுமட்டுமில்லாமல் சிலநேரங்களில் பேறுகாலத்தில் ஏற்படும் வலியினைக் குறைக்கவும் TENS பயன்படுத்துகிறது.

அதேநேரத்தில் வலியை முற்றிலும் நீக்கிவிடும் அளவிற்கு இந்த சிகிச்சையானது அமையும் என்று சொல்ல முடியாது. ஆனால் வலியை அந்தந்த நேரத்தில் குறைக்க TENS சிகிச்சையானது பயன்படுகிறது.

TENS சிகிச்சை தவிர்க்க வேண்டிய நபர்கள் மற்றும் இடங்கள்

மின்சிகிச்சைக்கான TENS சிகிச்சையினை உடலின் கீழ்கண்ட பாகங்களில் பயன்படுத்தலாகாது.

கழுத்தின் முன்பகுதியிலோ அல்லது பக்கவாட்டிலோ, நெற்றிப்பகுதி, கண்கள், உதடுகள் மற்றும் மார்பு.

நோய்த்தொற்று உள்ள இடங்கள், அரிப்பு மற்றும் தோல் வியாதிகளால் பாதிக்கப்பட்ட இடங்கள்.

சுருள் சிரை நோய் (Varicose vein).

பாதுகாப்பான, முற்றிலும் பக்கவிளைவுகள் இல்லாத சிகிச்சைமுறை என்றாலும் நோயாளிகளுக்கு ஒரே மின்அட்டைகளை (Electrical Pads) தொடர்ந்து பயன்படுத்துவதால் தோலில் ஒவ்வாமை (Allergy) மற்றும் நோய்தொற்று (Infection) ஏற்படலாம்.

எனவே ஒவ்வொரு தனி நோயாளிக்கும் புதிய மின்அட்டைகளை சிகிச்சைக்கு பயன்படுத்துவது நல்லது.

பொதுவாகவே TENS சிகிச்சை மட்டுமின்றி இயன்முறை மருத்துவத்தில் மின்சிகிச்சையை கீழ்கண்ட நபர்கள் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

இதய மின்னியக்கி (Cardiac Pace maker) பொருத்தியுள்ளவர்கள்.

எலும்பு முறிவிற்கான சிகிச்சையில் உடலினுள் உலோகம் பொருத்தியவர்கள்.

கர்ப்பிணிகள், இதயநோயாளிகள், மனநோயாளிகள்.

வலிப்புநோய் உள்ளவர்கள்.

 

இயன்முறை மருத்துவத்துறையில் பயன்படுத்தப்படும் மின்சிகிச்சைகளால் பக்கவிளைவுகள் மற்றும் உடலில் இரத்தக்குறைபாடு ஏற்படும் என பொதுமக்களிடையே கருத்து நிலவுகிறது. இது முற்றிலும் தவறானதாகும்.

 

அனைத்துவகை மின்சிகிச்சைகளும் இயன்முறை மருத்துவத்தில் பாதுகாப்பான உடலுக்குத் தீங்கு விளைவிக்காத, பக்கவிளைவு இல்லாத, நோய்தீர்க்கும் உன்னத சிகிச்சை முறையே ஆகும்.

தகுதிவாய்ந்த இயன்முறை மருத்துவரால் மின்சிகிச்சைக் கருவிகளை சிறிதும் தவறு இல்லாமல் மிகத்துல்லியமாக இயக்கி நோயாளிகளுக்கு தகுந்த வகையில் சிகிச்சை அளிக்க முடியும்.

ஒவ்வொருவருடைய உடலின் தகுதிகள் அனைத்தும் பரிசோதிக்கப்பட்ட பின்னரே, இயன்முறை மின்சிகிச்சையானது தொடங்கப்படும்.

எனவே மின்சிகிச்சை என்றதும் பயப்படவோ, தவிர்த்து ஒதுக்கவோ தேவையில்லை என்பதே நிதர்சனமான உண்மை.

க.கார்த்திகேயன்

க.கார்த்திகேயன் அவர்கள்

க.கார்த்திகேயன்

தமிழ்நாடு இயன்முறை மருத்துவர்கள் நலச்சங்கத்தின் மாநிலத் தலைவர்.

ஆர். கே. இயன்முறை மருத்துவமனை மற்றும் புனர்வாழ்வு மையத்தின் நிர்வாக இயக்குநர்.

அண்ணாமலைப் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரியில் 2007 ஆம் ஆண்டிலிருந்து 2012 ஆம் ஆண்டுவரை உதவி விரிவுரையாளராகப் பணியாற்றியவர்.

அண்ணாமலைப் பல்கலைக் கழகம் – ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் இளையோர் இயன்மருத்துவப் பட்டம் (Bachelor of Physiotherapy), முதுநிலை உளவியல் ஆற்றுப்படுத்துதல் பட்டம்(M.S.,(Psychotherapy) படித்தவர்.

விளையாட்டு மருத்துவம் (Sports Medicine & Rehabilitation) ), மூட்டுவலிக்கான சிறப்பு சிகிச்சை (Ligament Injuries & Rehabilitation) ஆகிய சான்றிதழ் படிப்புகளையும் படித்தவர்.

முகவரி :
க.கார்த்திகேயன்
46 ,மேலத்தெரு
வீரான நல்லூர் ,
காட்டுமன்னார் கோயில் -608301
கைபேசி: 9894322065

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.