மின்னாற்பகுப்பு நீர் – நீருடன் ஓர் உரையாடல் – 12

மின்னாற்பகுப்பு நீர் (Electrolysed water) மற்றும் அதன் பயன்கள் பற்றி சற்று முன்னர் தான் எதேச்சையாக படித்து அறிந்து கொண்டேன்.

ஆச்சரியப்பட்டேன்.

சுமார் ஒரு நூற்றாண்டுக்கு முன்பிலிருந்தே ஜப்பானிய மருத்துவ நிறுவனங்களிலும், பின்னர், உலக நாடுகளிலும் பல்வேறு தொழிற்துறைகளில் மின்னாற்பகுப்பு நீர் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. ஆனால் இப்பொழுதுதான் எனக்கு தெரியும்.

இந்த செய்தியை உடனே ’நீருக்கு’ தெரிவிக்க வேண்டும் என்று தோன்றியது.

’என்ன செய்வது’ என்று தெரியவில்லை. இதுவரையிலும் நீர் தான் தானாக என்னிடம் வந்து பேசியது.

சிந்தித்தேன். உடனே, சமையலறையில் இருந்த குடத்தின் அருகில் சென்று, அதன் மீது வைக்கப்பட்டிருந்த தட்டை எடுத்தேன். குடிநீர் நிரம்ப இருந்தது. சிலநொடிகள் உற்றுப் பார்த்தேன். நீர் பேசவில்லை.

பின்னர் அங்கிருந்து வீட்டிற்கு வெளியே வந்தேன். வாளியில் இருந்த நீரை உற்று நோக்கினேன். அங்கும் நீர் பேசுவதாக தெரியவில்லை. சில மணித்துளிகள் அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தேன்.

பின்னர் மீண்டும் வீட்டிற்குள் நுழைந்தேன். கடிகாரத்தை பார்க்க, நேரம், பகல் 11.30-ஐ நெருங்கிக் கொண்டிருந்தது.

“மதிய சாப்பாட்டுக்கு சமைக்கனுமே…. இப்பவே தொடங்கிடுவோம்” என்று எண்ணிக்கொண்டு, சமையலறைக்குள் நுழைந்தேன்.

சாதத்துக்கு, ஒரு ஆழாக்கு அரிசியை எடுத்து நன்கு நீரில் கழுவி, பின்னர் அடுப்பில் வைத்தேன். தக்காளி தொக்கு செய்வதற்கு, சில தக்காளிகளை எடுத்தேன்.

யோசனை வந்தது. ஒரு பாத்திரத்தில் நீரை எடுத்துக் கொண்டு ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து கலக்கினேன். அந்த மஞ்சள் நீரில், தக்காளிகளைக் கழுவினேன்.

மின்னாற்பகுப்பு நீர் என்றால் என்ன?

“என்ன சார் புதுசா மஞ்சளெல்லாம் போட்டு தக்காளிய கழுவுறீங்க?” – குரல் நீருடையது தான்.

“ஆ ஆ.. நீரா? உன்னத்தான் தேடிக்கிட்டு இருந்தேன்.”

“என்னையா! எதுக்கு சார்?”

“உன்ன பத்தி ஒரு புது தகவல் தெரிஞ்சிக்கிட்டேன். அத உன்கிட்ட சொல்லலாமுன்னு தான் தேடினேன். இப்ப நீயாகவே வந்துட்ட…”

அப்படியா! எனக்கு அந்த தகவல சொல்லுங்களேன்.”

“உம்ம்… ’மின்னாற்பகுப்பு நீர்’ கேள்விபட்டிருக்கியா?”

“மின்னாற்பகுப்பு நீரா? புதுசா இருக்கே?”

“புதுசுலாம் இல்ல… ரொம்ப வருடங்களாகவே இருக்கு”

“எனக்கு தெரியல. சரி, முதல்ல மின்னாற்பகுப்பு நீருன்னா என்னன்னு சொல்லுங்க?”

“இம்ம்.. நீருல, சோடியம் குளோரைடு போன்ற சாதரண உப்புக்கள கரைச்சிக்கிட்டு, அந்தக் கரைசலை மின்னாற்பகுப்பு கலனுல (electrolytic cell) எடுத்துகிட்டு மின்னாற்பகுப்பு செயல்முறைக்கு (electrolysis) உட்படுத்துறாங்க. மின்சாரத்தால, சில வேதிவினைகள் நடந்து, பிறகு மின்னாற்பகுப்பு நீர் உற்பத்தியாகுது. இதுல ஹைபோகுளோரஸ் அமிலம் (HClO) இருக்குது.”

“ஓஓ…. மின்னாற்பகுப்பு நீர ஆய்வகத்துல உருவாக்கியிருக்கீங்களா? அதான் எனக்கு தெரியல.”

“சரி தான். உண்மையில கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் அதைப் பத்தி நானும் படிச்சேன்.”

“அட! உங்களுக்கும் இப்ப தான் தெரியுமா?”

“ஆமா ஆமா..”

“சரி சார். ஹைபோகுளோரஸ் அமிலத்தால என்ன நன்மை?”

“ஏன் திடீர்ன்னு ஹைபோகுளோரஸ் அமிலத்த பத்தி கேக்குற?”

“சார் நீங்க தான, இப்ப சொன்னீங்க. மின்னாற்பகுப்பு நீருல ஹைபோகுளோரஸ் அமிலம் இருக்குன்னு”

“ஆமாம்…. சரி சரி. ஹைபோகுளோரஸ் அமிலம் கிருமிநாசினியா செயல்படும். அதனால, மின்னாற்பகுப்பு நீரும் கிருமிநாசினியா பயன்படுத்தலாம்.”

“கிருமிநாசினினா?”

“வைரஸ்கள், பாக்டீரியாக்கள் மற்றும் பூஞ்சைகள் உள்ளிட்ட பொதுவான நுண்ணுயிரிகளை அழிக்க கூடிய பொருள கிருமிநாசினின்னு சொல்லுவோம். குளோரின் சேர்மங்கள் கிருமிநாசினியாக பயன்படுத்தப்படுது.”

கிருமிநாசினியாக பயன்படுத்தப்படுதல்

“ஓஓ… அப்ப ஏற்கனவே பயன்படுத்தப்படும் கிருமிநாசினிகளவிட, மின்னாற்பகுப்பு நீர் சிறந்ததா?”

மின்னாற்பகுப்பு நீரின் பயன்கள்

“ஆமாம், மற்ற கிருமிநாசினிகளவிட, மின்னாற்பகுப்பு நீர் பலமடங்கு அதிக திறன் கொண்டதாகவும், வேகமாகவும் செயல்படுவதாகத் தான் கட்டுரையில படிச்சேன்.”

“சரி சார், அது வெறும் கிருமிநாசினியா மட்டும் தான் பயன்படுதா? இல்ல வேற எதுக்கும் பயன்படுத்துறாங்களா?”

“நல்ல கேள்வி. மின்னாற்பகுப்பு நீரினை உணவு துறையிலும் பரவலா பயன்படுத்துறாங்களாம். எப்படீன்னா, காய்கறிகள், பழங்கள், இறைச்சி, மற்றும் கடல் உணவுகளின் மீதிருக்கும் நுண்ணுயிரிகளை அழிக்க மின்னாற்பகுப்பு நீர பயன்படுத்துறாங்களாம்.

அதுமட்டுமில்ல, காய்கறிகள் மற்றும் பழங்களின் தரத்தை மேம்படுத்தவும், அவற்றை தாக்கும் நோய்களைக் கட்டுப்படுத்தவும் அது உதவுது.

முக்கியமா, காய்கறி மற்றும் பழங்களின் மீது ஏதாச்சும் பூச்சிக்கொல்லி இருந்தா அதனையும், மின்னாற்பகுப்பு நீர் சிறப்பாக அகற்றுதாம். இதனால் உணவு, தரமானதாகவும் ஆரோக்கியமானதாகும் இருக்குதாம்.”

“சிறப்பு சார்”

“அத்தோட, உலோகங்கள், ஆடை போன்றவற்றிற்கும் மின்னாற்பகுப்பு நீரால் தீங்கு விளையாது. அதனால், அதை வணிக சலவைகள், நீச்சல் குளங்கள், பயணக் கப்பல்கள், நீர் சுத்திகரிப்பு மற்றும் கால்நடை வளர்ப்பு போன்ற பல துறைகளிலும் பயன்படுத்துறாங்களாம்.”

“மின்னாற்பகுப்பு நீரால தீங்கு இருக்கா?”

“இல்ல. மின்னாற்பகுப்பு நீர் மனிதர்களுக்கு நச்சுத்தன்மையற்றது, சுற்றுச்சூழலுக்கும் ஏற்றது. அத்தோட விலையும் குறைவு தானாம்.”

“நல்லது சார். என்னை நீங்க ஆய்வகத்துல உருமாற்றினாலும் நான் உங்களுக்கு நல்லது தான் செய்கிறேன். எனக்கு மகிழ்ச்சியே.”

“எங்களுக்கும் மிக்க மகழ்ச்சி. இதுக்காக, உனக்கு நன்றிகள சொல்லிக்கிறேன்.”

“சரி, சார். ஏதோ தீயிர வாசனை வருதே”

“அடடா! சாதம் வச்சிருக்கேன். மறந்துட்டேனே.”

“சீக்கிரம் போங்க சார். நாம அப்புறம் சந்திப்போம்.” என்று சொல்லி புறப்பட்டது நீர்.

விரைந்து சென்று சாதத்தைப் பார்த்தேன். அரிசி நன்றாக வெந்திருந்தது. ஆனால், குண்டானில் நீர் இல்லை. நல்ல வேளை, அவ்வளவாக சாதம் அடி பிடிக்கவில்லை. சாதத்தை வடித்து விட்டு பின்னர் தக்காளி தொக்கு சமைக்க ஆரம்பித்தேன்.

(உரையாடல் தொடரும்)

கனிமவாசன்
சென்னை
கைபேசி: 9941091461
மின்னஞ்சல்: drsureshwritings@gmail.com

இதைப் படித்து விட்டீர்களா?

வாலைவடி நீர் – நீருடன் ஓர் உரையாடல் – 13

நன்னீர் – நீருடன் ஓர் உரையாடல் – 11

கனிமவாசன் அவர்களின் ஆராய்ச்சிக் கட்டுரைகள்

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.