மின்மினிப் பூச்சி ஏன் ஒளிர்கிறது?

மின்மினிப் பூச்சி ஏன் ஒளிர்கிறது? என்ற கேள்வி, தூங்கணாங்குருவியைப் பற்றி அம்மா சொல்லிக் கொண்டிருந்த போது எனக்குள் தோன்றியது.

“தூங்கணாங்குருவி, குஞ்சுகளுக்கு வெளிச்சம் தருவதற்காக ஈரக் களிமண்ணைத் தோண்டி எடுத்து கூட்டில் வைத்து, அதில் மின்மினிப் பூச்சியை பொதிந்து வைக்குமாம்.” என்று அம்மா தான் கேள்விப்பட்டிருப்பதாகக் கூறினார்.

காரணம் மின்மினிப் பூச்சியும் தூங்கணாங்குருவியும் மாசுபடாத நீருள்ள ஈரப்பதமான இடங்களையே வாழிடங்களாகக் கொண்டவை.

நாங்கள் சிறுவயதில் ஒரு பாட்டிலின் அடியில் ஈரத்துணியைப் போட்டு, அதில் மின்மினிப் பூச்சிகளை அடைத்து துளையுள்ள மூடியால் அடைத்து வைப்போம்.

பாட்டிலைத் தூக்கிக் கொண்டே இரவில் இருண்டான பகுதிக்குக் கொண்டு செல்வோம். சிறிது நேரத்தில் மின்மினிப் பூச்சிகள் ஒளிரத் துவங்கும்.

அதனைக் கண்டதும் நாங்கள் கைதட்டி ஆரவாரம் செய்து மகிழ்ச்சியாக விளையாடுவோம். மறுநாள் காலையில் பாட்டிலிருந்து அவற்றிற்கு விடுதலை கொடுப்போம்.

அன்றைய கவிஞர்கள் முதல் இன்றைய அறிவியல் அறிஞர்கள் வரை எல்லோரையும் இப்பூச்சிகள் கவர்ந்திழுக்கின்றன.

இப்பொழுதெல்லாம் மின்மினிப் பூச்சிகளை காண முடிவதில்லை. அவை எங்கே போயின? என்பதற்கு விடையே மின்மினிப் பூச்சி ஏன் ஒளிர்கிறது? என்ற இக்கட்டுரை.

மின்மினிப் பூச்சிகள் மற்றும் அதனுடைய சுற்றுசூழல் முக்கியத்துவம் பற்றி தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

மின்மினிப் பூச்சிகள் வண்டினைச் சார்ந்தது. இதில் சுமார் 2000 வகைகள் உள்ளன. இவை புவியில் வெப்பமண்டல மற்றும் மிதவெப்ப மண்டல பகுதிகளில் காணப்படுகின்றன.

இது மென்மையான உடலினைக் கொண்டு 5 முதல் 25 மிமீ நீளத்தில் இருக்கிறது. இது தட்டையான அடர் பழுப்பு அல்லது கருப்பு உடலால் பெரும்பாலும் ஆரஞ்சு அல்லது மஞ்சள் வண்ணத்தில் குறிக்கப்படுகிறது.

இவை வாழ்வதற்கு ஈரப்பதமான சூழ்நிலை மிகவும் அவசியம். ஆதலால்தான் இவை ஆறு, ஏரி, குளம், நீரோடை, வயல்வெளிகள், வனப்பகுதிகள், சதுப்புப் பகுதிகள் ஆகிய இடங்களில் காணப்படுகின்றன.

இவை இருளில் பச்சை, மஞ்சள், ஆரஞ்சு வண்ணங்களை வெளியிடுகின்றன. மின்மினிப் பூச்சி மட்டுமல்லாது அதனுடைய முட்டை, லார்வா, கூட்டுப்புழு ஆகியவையும் ஒளிரும் தன்மை உடையவை.

மின்மினிப் பூச்சிகள் இரையைப் பிடிக்கவும், இணையைக் கவரவும், எதிரிகளை பயமுறுத்தவும் ஒளியை உமிழ்கின்றன.

மின்மினிப் பூச்சிகள் ஒளியை உமிழும் உறுப்பானது அடிவயிற்றுப் பகுதியில் காணப்படுகிறது. இதனுடைய உடலில் நடக்கும் வேதிவினையே ஒளி உமிழக் காரணமாகிறது. இதற்கு உயிர் ஒளி உமிழும் தன்மை என்று பெயர்.

இப்பூச்சிகளின் உடலில் லூசிஃபெரேஸ் என்னும் ஒளி உமிழ்தலைத் தூண்டும் நொதி ஒன்று சுரக்கிறது. இந்நொதியிலிருந்து உருவாகும் லூசிஃபெரின் என்னும் கரிமப்பொருள் கால்சியம், அடினோசைன் டிரை பாஸ்பேட், ஆக்ஸிஜனின் ஆகியவற்றுடன் வினைபுரிந்து ஒளி உண்டாகிறது.

உயிரினங்கள் உண்ணும் உணவானது அடினோசைன் டிரை பாஸ்பேட் என்னும் வேதிச் சேர்மத்தின் வடிவில் உடலில் சக்தியாக சேமித்து வைக்கப்படுகிறது.

மின்மினிப் பூச்சிகள் ஒளி உருவாக்க தேவையான வேதிப்பொருட்களுடன் ஆக்ஸிஜனைச் சேர்த்து வேதிவினையின் தொடக்கம் மற்றும் முடிவைக் கட்டுப்படுத்துகிறது.

அதாவது ஆக்ஸிஜன் இருக்கும்போது ஒளி வெளிப்படும். ஆக்ஸிஜன் இல்லாத போது ஒளி வெளியிடப்படாது.

மின்மினிப் பூச்சிகளுக்கு நுரையீரல் கிடையாது. அவை உடலின் வெளிப்பகுதியிலிருந்து உட்புறச் செல்களுக்கு ட்ராக்கியோல்கள் எனப்படும் தொடர் குழாய்கள் மூலம் ஆக்ஸிஜனைப் பெறுகின்றன.

பொதுவாக விளக்குகள் எரியும் போது ஆற்றலானது ஒளியாகவும், வெப்பமாகவும் வெளிப்படும். ஆதாவது ஒரு பல்ப் எரியும் போது 10 சதவீதம் ஒளி ஆற்றலையும், 90 சதவீதம் வெப்ப ஆற்றலையும் வெளியிடுகிறது.

ஆனால் மின்மினிப் பூச்சிகள் உடலில் நடைபெறும் வேதியாற்றல் முழுவதும் (100 சதவீதம்) ஒளியாற்றலாக மாற்றப்படுகிறது. வெப்பாற்றல் வெளியிடப்படுவதில்லை. ஆதலால் மின்மினிப் பூச்சிகள் குளிர்ந்த விளக்குகள் என்று அழைக்கப்படுகின்றன.

இப்பூச்சிகளின் வெவ்வேறு இனங்கள் வெவ்வேறு கால அளவுகளில் வெவ்வேறு வண்ணங்களை வெளிவிடுகின்றன.

மின்மினிப் பூச்சிகள் ஈரப்பதம் மிகுந்த தரைகளின் மேற்பரப்பில் முட்டைகளை இடுகின்றன.

இம்முட்டைகளிலிருந்து 3 வாரங்களில் லார்வாக்கள் வெளிவருகின்றன.

இந்த லார்வாக்கள் மண்புழு, நத்தை, எறும்பு, புழுக்கள் போன்றவற்றின் உடலில் ஒருவித திரவத்தை செலுத்தி அதனைக் கூழ்மமாக்கி உறிஞ்சி விடுகின்றன.

மின்மினிப் பூச்சிகள் லார்வாக்களாக 1-2 வருடங்கள் உயிர் வாழ்கின்றன. பின்னர் மூன்று வாரங்கள் கூட்டுப்புழுவாக இருந்து மின்மினிப் பூச்சிகளாக உருவாகின்றன.

மின்மினிப் பூச்சிகளாக உருமாறிய பின்பு 3-4 வாரங்கள் மட்டுமே உயிர் வாழ்கின்றன. அதாவது முட்டை இட்டதும் இவை அழிந்து விடுகின்றன.

மின்மினிப் பூச்சிகளின் சில இனங்கள் முழுபூச்சியாக உருமாறிய பின்பு உணவினை உண்பதில்லை. பல இனங்கள் பூக்களின் மகரந்தங்கள், தேன் ஆகியவற்றை உணவாக்குகின்றன.

இப்பூச்சிகளை உணவாக்க நினைக்கும் விலங்குகள் இதனைத் தாக்கியதும் இதனுடைய உடலிலிருந்து வெளிப்படும் திரவமானது கசப்பு சுவையைத் தருகிறது. மேலும் இவை ஒளியையும் வெளிப்படுத்தும். இதனால் இவற்றை பெரும்பான்மையான உயிரினங்கள் வேட்டையாடுவதில்லை.

இப்பூச்சிகள் நத்தைகள், மண்புழுக்கள் ஆகியவற்றின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தி உயிர்ச்சூழலை சமநிலைப்படுத்துகின்றன. மேலும் இவை வேளாண்மைக்கு தீங்கு விளைவிக்கும் பூச்சிகளையும் அழிக்கிறது.

இவை பூக்களின் மகரந்தத்தையும், தேனையும் உண்பதற்காக ஒரு பூவிலிருந்து மற்றொரு பூவிற்கு சென்று அமர்வதால் அயல் மகரந்த சேர்க்கைக்கு உதவி தரமான விதைகளை உருவாக்க உதவுகிறது.

மின்மினிப் பூச்சிகள் தென்படும் இடங்கள் நீர் மாசுபாடு இல்லாத வளமான உயிர்சூழலுக்கான அறிகுறியாக ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.

மின்மினிப் பூச்சிகளில் உள்ள அடினோசைன் டிரை பாஸ்பேட்டை எடுத்து புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்ட உயிரினத்தின் செல்களில் செலுத்தி நோயின் தன்மை பற்றி அறிந்து கொள்கிறார்கள்.

தற்போது மின்மினிப் பூச்சிகளின் உடலிலிருந்து அடினோசைன் டிரை பாஸ்பேட்டை எடுப்பதற்குப் பதிலாக, செயற்கையாக தயாரிக்கப்பட்ட அடினோசைன் டிரை பாஸ்பேட் ஆராய்ச்சிகளில் பயன்படுத்தப்படுகிறது.

மேலும் உணவு கெட்டுப்போவது, பூமியில் பாக்டீரியா மாசுபடுத்தல் பற்றிய ஆராய்ச்சிகளில் மின்மினிப் பூச்சிகளின் அடினோசைன் டிரை பாஸ்பேட் பயன்படுத்தப்படுகிறது.

மின்மினிப் பூச்சிகள் தற்போது காணாமல் போவதற்கு முக்கிய காரணம் ஒளி மாசுபாடு. இவை இருளில் ஒளிர்தலைப் பயன்படுத்தியே இணையைக் கவர்ந்து இனப்பெருக்கம் செய்கின்றன.

ஒளி மாசுபாட்டால் இவற்றால் இணையை சரிவர தேர்வு செய்ய முடிவதில்லை. மேலும் இவை வேறு சில உயிரினங்களைப் போல இடம்பெயர்ந்தும் வாழ்வதில்லை.

இதனால் இதனுடைய வாழிடம் ஈரப்பதம் இல்லாமல் ஒளி மாசுபாடடைந்தால் இவை மடிந்து விடுகின்றன.

வெளிநாடுகளில் மின்மினிப் பூச்சிகளின் சூழியல் முக்கியத்துவம் கருதி, தற்போது இவற்றைப் பாதுகாக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மாசுபாட்டைக் குறைப்போம். இயற்கை விளக்கான மின்மினிப் பூச்சிகளை அடுத்த தலைமுறைக்கும் எடுத்துச் செல்வோம்.

வ.முனீஸ்வரன்