மிருக வதை – சிறுகதை

“தாமர”

“எஸ் மேடம்”

“குப்புராஜ் நகர்ல எனக்கு ஒரு பிரண்டு இருக்கான்னு சொல்லியிருக்கேன் இல்லையா?”

“ஆமா மேடம். தையல் கடை நடத்தறாங்கன்னு”

“ஆமா, அங்க போ. என்னவோ பிரச்சனை. மீட்டிங்கல இருக்கேன்.”

“ஒகே மேடம். உடனே கெளம்பிடறேன்.”

“டூட்டி எப்ப?”

“முடிச்சுட்டு இப்பதான் மேடம் வந்தேன். இப்பதான் வீட்டுக்குள்ள நுழைஞ்சேன்.”

“அடடா, சாரி தாமர. நான் வேற ஆள.”

“இருங்க மேடம். உங்களுக்கு செய்யாம எப்படி? என்ன பிரச்சன மேடம்?”

“அவளுக்கு ஒரு பொண்ணு இருக்குது. வயசுப் பொண்ணு. உடனே வரச்சொன்னா.பொண்ணு, பொண்ணுன்னா குரல்ல ஒரு அவசரம்; பயம். நான் ஒரு மீட்டிங்கல, சரி இரு. மீட்டிங்கா முக்கியம்? அந்த குரல்ல அவ்வளவு பதட்டம்.நானே கெளம்பிடறேன்.” பேச்சு நின்றது.

தாமரை வியர்த்திருந்த காக்கி சட்டையின் பட்டனை கழட்டியிருந்தாள். மறுபடி போட்டுக் கொண்டாள். அவள் அப்பா வந்து பின்னாடியே நின்று, “பாடா படுத்தறாங்க டிபார்ட்மெண்டுல, இப்பதானே வந்த”

“அப்பா, உனக்கு ஒரு பொண்ணு இருக்கு. ஏதோ பிரச்சனை. போன் பண்ணறீங்க போலீசுக்கு. அவங்க என்ன செய்யனும்?”

“அதுக்காக இப்படியா, மூணு மணி நேரம் தான் தூங்குவியா? சாப்பாடு, குளியல், அரட்ட. சித்தப்பா கூட ஒரு ஊர்வலம், இதுக்கு ஒரு மூணு மணி நேரம். நான் அப்பவே சொன்னேன். இந்த உத்தியோகம் வேணாமுன்னு”

ஷூவை மாட்டிக்கொண்டே, “அப்பா, நான் கேட்டது வேற”

“என்ன சொன்னே?”

“ஏதோ ஆபத்து, போன் வருது ஒரு போலீசுக்கு, என்ன பண்ணனும்?”

“உடனே கெளம்பிடனும், காத்து மாதிரி. உயிர் போற விச‌யமா இருக்கலாம்.சீக்கிரம் போனா அந்த உயிர காப்பாத்தலாம்”

“ஆனா அவங்க அப்படி செய்யலையே. மீட்டிங்குன்னு சொல்லறாங்க. தப்பில்ல?”

“தப்புதான்” அவர் முடித்தபோது அவள் கதவை திறந்து வெளியே போய்க்கொண்டிருந்தாள்.

அந்த அப்பா கதவை பார்த்து ஓடினார். அவளுடைய மொபைல் அருகில் அந்த டேபிள் மீது கிடந்தது.

குப்புராஜ் நகர் அங்கிருந்து பத்து நிமிடம். பைக்கில் ராஜாஜி நகர் வழியே குறுகலான சந்துகளில் புகுந்து பைபாஸ் வந்து மறுபடி ஒரு அகலமான பிரிவில் வலதுபுறம் திரும்பி அந்த மழலையர் பள்ளி தாண்டி பூவரச மரத்தின் இடதுபறத்தில் “குப்புராஜ் நகர் உங்களை வரவேற்கிறது” பலகையை தாண்டி வலதுபுறம் நீளத் தெருவில் மெதுவாகி,

“பொண்ணு பொண்ணுன்னா”

பாக்கெட்டை தடவினாள் மொபைலுக்காக. “போச்சு” என்று சொல்லிக் கொண்டாள்.

அட்ரஸ், அட்ரஸ். வண்டியை நிறுத்தாமல் தொடர்ந்தாள். ஒரு மாடு படுத்துகொண்டு அசை போட்டுக் கொண்டிருந்தது. பெரும்பாலும் மூடப்பட்டிருந்த கேட்டுகள்.

ஒரு வீட்டுக்கு வெளியே கேட்டுக்குள் விளையாடிக்கொண்டிருந்த நான்கைந்து பையன்களை பார்த்து “இங்க டைலர் கடை எங்க இருக்குது?”

பேட் வைத்திருந்தவன் இன்னொருத்தனை பார்க்க எதிர்புறம் மேல் வீட்டில் சன்னலிலிருந்து “சண்முகம் கடையா?. இதாம்மா இந்த சந்து கடைசில.”

“இல்ல பெரியவரே, லேடீஸ் டைலர் கட”

“அதுவா, மூணாவது கிராஸ்ல இருக்குது பாருங்க. அந்த கடைய இப்ப தெறக்கறதலையே.”

“அப்படியா? ஏதாவது அடையாளம்?”

“உடனே வரச் சொன்னா”

“சரி இருங்க, நானே பாத்துக்கறேன்.” வண்டியை திருப்பும்போது “நேரா போங்க, ரைட்ல கட் பண்ணுங்க. அங்கிருந்து ரண்டாவது சந்து. மஞ்சா கலரு வேன் ஒன்னு நிக்கும் பாருங்க. அதுக்கு பக்கத்துல அந்தம்மா கடை.”

பையன்கள் கேட்டுக்குள்ளேயே ஃபோர் அடித்து “ஹே…ஹே…” என்றார்கள்.

வண்டி கிளம்பி சந்து முனையில் அந்த “இங்கு ஆண்களுக்கான உடைகள் மட்டும் தைக்கப்படும்.” கடையை தாண்டி வளைந்து அங்கிருந்து இரண்டாவது தெருவில் திரும்பி அந்த மஞ்சள் கடை வேனைப் பார்த்து, ”அப்பாடா” என்று கிட்டே போய் நிறுத்தி ஒரு மாடி வீடு தள்ளியிருந்த, அடச்சே, அந்த பவித்ரா பெண்கள் தையல் கடை சாத்தியிருந்தது.

அந்த மஞ்சள் நிற வேனில் ஒரு ஆள் உட்கார்ந்திருந்தான். தலையை வெளியே நீட்டி, “மேடம், யாரைப் பாக்கனும்?”

“இங்க இந்த டைலர் கடை?”

“அக்கா பத்து நாளா வரலீங்க மேடம்”

“அக்கா பேரு?”

“பாக்கியம்”

“பவித்ரா யாரு?”

“அது அவங்களோட பொண்ணு மேடம்.பத்தாவது படிக்குது.”

“ஓ, வீடு எங்க?”

“இப்படியே நேரா போங்க. பால் சொசைட்டி வரும். லெப்டுல திரும்புங்க. கொஞ்சம் தள்ளி ஒரு சலவைக்கட இருக்கும். அங்கிருந்து ரைட்டு ஒரு புட்டுக்கட. அதையொட்டி மஞ்சள் கலர்ல ஒரு சின்ன கேட்டு வச்ச வீடு. முன்னாடி வேப்பமரம் இருக்கும். ஏதாவது துணி கொடுத்துருக்கீங்களா?”

“ஆமா” என்று வண்டியை கிளப்பினாள்.

அந்த வீட்டை கண்டுபிடித்தபோது இருபது நிமிடம் ஆகிவிட்டிருந்தது. வண்டியை நிறுத்தியதில் எதிர் வீட்டிலிருந்து ஒரு பெரியம்மா எட்டிப்பார்த்து, “யாரு?”

“போலீஸ்” என்றாள் கதவை திறந்த பெண்ணிடம்.

அவள், ”தாமர?”

“ஆமா, நான்தான்”

“வாங்க, உள்ளாற” சட்டென்று அவளை இழுத்து கதவை மூடும்போது வெளியே பார்த்தாள். கதவை மெதுவாக மூடி வேகமாக தாளிட்டாள். “அந்த கிழவிதான் பாக்குது. கண்ணு தெரியாது அதுக்கு” பேசியவளின் கண்களில் அதிர்வு தெரிந்தது. வேகவேகமாக மூச்சு விட்டாள்.

படபடக்க “அவ போன் பண்ணா”

“யாரு?”

“பிரெண்டு”

“வர்றேன்னு சொன்னாங்க”

“இல்ல, வேண்டாமுன்னு சொல்லிட்டேன்.”

“ஏன்?”

“பொண்ணு மயக்கமாயிடுச்சு, இப்ப சரியாப் போச்சுன்னு சொல்லிட்டேன்.”

“எங்க உங்க பொண்ணு?”

“பாத்ரூம்ல”

தாமரையை கையை பிடித்து அருகிலிருந்த சேரில் உட்கார வைத்தாள். கையில் ஈரம். கண்களில் அனல் பறந்தது. லேசான நடுக்கம். சட்டென்று முகத்தை இறுக்கிக்கொண்டு.. “நீங்க வரமாட்டீங்களோன்னு நினைச்சேன்.” அவளும் அருகிலிருந்த சேரில் உட்கார முயன்றாள்.

சட்டென்று கதவருகே இருந்த ஜன்னலருகே சென்று மெதுவாக எட்டிப் பார்த்து, “அந்த கிழவிய காணோம்” என்றாள் மெதுவாக இவளை திரும்பிப் பார்த்து.

தாமரை எழுந்து “மேடம், உங்க பேரென்ன?” என்றதும், அவள் பக்கத்தில் வந்து இடது கையை பிடித்து “உக்காருங்க முதல்ல. சத்தமா பேசாதிங்க.” காதுகளை தீட்டி உற்று கவனிப்பது போல எங்கேயோ பார்த்தாள். பிறகு இவளைப் பார்த்து “நான் அந்தாளை காட்டறேன்.”

“எந்தாளை?”

“நீங்க உக்காருங்க மொதல்ல” தாமரை உட்கார்ந்து அவளை கவனித்தாள். அவளும் அருகே அமர்ந்து கண்களை மூடிக்கொண்டு இவளைப் பார்க்காமல் “அவ வரமாட்டா இல்ல?”

“யாரு?”

“எம் பிரெண்டு”

“தெரியல”

“வரமாட்டா, சிரிச்சுக்கிட்டே சொன்னேன். நம்பிட்டா.”

“உங்க பொண்ணு எங்க?”

“பாத்ரூம்ல”

“எந்த சத்தமும் காணோமே”

“வருவா”

“அந்தாளுன்னு சொன்னீங்களே, யாரு அது?”

“அதுவா, அது சொல்றேன். அவ இருக்கா பாருங்க. அவள நம்ப முடியாது”

“யார?”

“எம் பிரெண்ட”

“ஏன்?”

“அவ சுயநலவாதி. அவளுக்கு புரியாது. பயந்துடுவா. உங்கள பாத்தா அப்படி தெரியல.” அவளுடைய கால்கள் தரையில் குத்தியது. கண்கள் உள்ளுக்குள் திரும்புவது தெரிந்தது. வெள்ளை ஜாக்கெட்டில் வெளிறிப்போன அந்த தாலி தெரிந்தது.

தாமரை எழுந்தாள். முன் அறை. ஒரு டிவி, அலமாரி, புத்தகங்கள், பூனை பொம்மைகள், தரையில் ஒரு லேப்டாப். திறந்திருந்த இரண்டு மூன்று நோட்டுகள். சுவரில் சுத்தமான வெள்ளை பெயிண்ட். டிவிக்கு மேலே மறுபடியும் பூனை பொம்மை.

தாமரை அவளைப் பார்த்தாள். அவள் கண்களை திறந்து இவளைப் பார்த்து சிரித்தாள்.

“கடைசியா நான் சொன்னேனே, உங்கள பாத்தா அப்படி தெரியல”

“பாத்ரூம் எங்க?”

“அந்த ரூமுக்கு வெளியில” எழுந்து அவளை தாண்டி “இங்கதான்” என்றாள்.

அந்த அறையில் எதுவுமில்லை. ஒரு சன்னல் மூடியிருந்தது. மேலே அரணில் ஏதோ மூட்டைகள். பழைய பாய், பிளாஸ்டிக் டிரம்கள். சுவரில் ஒரே ஒரு போட்டோ.

“எம் பொண்ணு” என்றாள்.

“சின்ன வயசுல எடுத்தது. எவ்வளவு அழகா இருக்கா பாருங்க.” அவளுடைய பார்வை அந்த அறையிலிருந்து பிரிந்து உட்புறமாக சென்ற வழி மீது நிலைத்தது.

தாமரை அதற்குள் நுழைந்தாள். லேசான இருட்டு. யாரோ இருமும் சத்தம். “பக்கத்து வீட்ல” என்றாள் அவள்.

இப்போது நிதானித்து இவளைப் பார்த்து “இது பெட்ரூம்” என்றாள்..

ஒரு கட்டில், இரண்டு பீரோக்கள், நிறைய ஆணிகள். பேண்ட், சட்டை, பழைய சேர் ஒன்று மடிக்கப்பட்டு ஒரு மூலையில். ஒரு அலமாரி, கண்ணாடிக் கதவு, உள்ளே அலங்காரப் பொருள்கள். கழட்டி வைக்கப்பட்டிருந்த கவரிங் செயின், மாத்திரை புட்டி, ஏதோ டானிக், மறுபடியும் இருமல்.”

“பக்கத்து வீட்லிருந்துதான்.”

“இல்ல, சத்தம் இங்கிருந்துதான்” தாமரை பெட்டுக்கு பின்னாடி ஒரு கதவு இருப்பதை பார்த்தாள். மறைத்தபடி ஸ்க்ரின் துணி. கட்டில் அந்த இடத்தில் அந்நியமாக தோன்றியது. கீழே தரையில் லேசான கோடுகள்.

தாமரை கட்டிலை நெருங்கி தலைமாட்டில் ஏறி ஸ்கிரினை தள்ளினாள். கதவு மீது கை வைக்க முயன்றபோது அது தானாக மெதுவாக திறந்தது.

முகத்தில் கீறல்கள், கன்றிப்போன மேல் உதடு, கண்களில் மிரட்சி, தலைமுடி கலைந்து, “எம் மக” என்றாள் இவள்.

தாமரை கட்டிலை வேகமாக கீழ்புறம் தள்ளி “என்னாச்சு?” என்றாள். அவளுடைய கைகள் அந்த பெண்ணை வெளிப்பறமாக இழுத்தபோது வாயை மூடிக்கொண்டு அவள் அழ ஆரம்பித்தாள்.

“ஒண்ணுமில்லைம்மா, ஒண்ணுமில்லை. நான் வந்துட்டேன் பாரு. இனி பயமில்ல, தைரியமா இரு. உம் பேரென்ன? உம் பேர சொல்லு”

“பவித்ரா” என்றாள் அழுது கொண்டே.

வேகமாக பக்கத்தில் வந்து அவளை கட்டிக்கொண்டு இவளிடம், “எம் பொண்ணு, நான் பெத்த பொண்ணு. ஆனா, எம் மகளுக்கு ஏன் இந்த மாதிரி” மகளை கட்டிக்கொண்டபோது தாமரை ஓரமாக ஒதுங்கி “உங்க பேரு என்ன?”

“பாக்கியம்”

“அந்தாளுன்னு சொன்னீங்களே, யாரது?”

பவித்ரா கட்டிலுக்கு கீழே கையை காட்டினாள். தாமரை சட்டென்று கீழே குனிந்து பார்த்தாள். இருட்டு. ஒரு பக்கமாக விழுந்திருந்த வெளிச்சம். அந்தப் பக்கமாக தொங்கிக் கொண்டிருந்த போர்வை. இடது மூலையில் ஏதோ ஒன்று நீண்டு, தாமரை குனிந்து எடுத்தாள்.

ஒரு கட்டை. ஒரு மேசையின் கால்பகுதி மாதிரி. ஒரு நுனியில் ஓரத்தில் சிவப்பாக, ரத்தம். லேசாக உறைந்து ஆனால் பிசுபிசுப்புடன். தாமரை வேகமாக அதே இடத்தில் அந்த கட்டையை விட்டெறிந்தாள்.

இவளிடம் “நான் போலீஸ். தடயங்கள அழிக்கக் கூடாது. என்ன நடந்ததுன்னு இப்பவாச்சும் சொல்லுங்க. அந்தாளு யாரு? எங்க?”

பவித்ரா அந்த மர பீரோவை காட்டினாள். அது திரும்பியிருந்தது அப்போதுதான் தெரிந்தது. தாமரை திருப்ப முயன்றபோது அவளுக்கு புரிந்தது. நிறுத்தி பாக்கியத்திடம், ”உங்களோட செல்ல கொடுங்க, பேசனும்”
அப்போது பீரோவிலிருந்து மொபைல் அடித்தது.

பாக்யம் அருகில் வந்து.”ரண்டு விச‌யம், ஒன்னு சத்தம் போடாதீங்க ரண்டாவது யார்கிட்டேயும் பேசாதிங்க”

“லூசு மாதிரி பேசாத, நானு போலீஸ்”

“அந்த போட்டோவ பாருங்க” வாசல் பக்கம் பெரியதாக இருந்ததை காட்டினாள்.

“எங்க குடும்ப போட்டோ”

புகைப்படத்தில் அவள் வீட்டுக்காரன் சிவப்பு சட்டையில் பல் தெரிய சிரித்துக்கொண்டிருந்தான். பாக்கியத்துக்கு லேசான தயக்கமான புன்னகை. அம்மா பக்கத்தில் பவித்ரா, நீல சட்டையில் உதடுகளை மூடியபடி, ஒரு பக்கமாக திரும்பியபடி. அம்மாவின் ஒரு கை அவளை அணைத்தபடி.

“எம் பொண்ணு எவ்வளவு அழகா இருக்கா பாருங்க”

தாமரை பீரோவை திருப்பினாள். வாயை மூடிக்கொண்டே அம்மாவின் நெஞ்சில் புதைந்துக்கொண்ட பவித்ரா. அவள் தலையை முத்தமிடும் பாக்கியம். லேசான சத்தத்துடன் நகரும் அந்த மர பீரோ.

இழுக்கும்போதே கதவு திறந்து வெளியே வந்து விழுந்த உடல். ஒரு பக்கமாக திரும்பிய முகம். பின்மண்டையில் கசகசத்த ரத்தம். திறந்திருந்த வாய். பற்களில் கசிந்து இறுகிப்போன சிவப்பு அடையாளம்.
தாமரைக்கு தாமதமாகத்தான் புரிந்தது.

“உன் வீட்டுக்காரனா? அவரு மாதிரிதான் தெரியுது”

பவித்ரா கூனிக்குறுகி உட்கார்ந்தாள். அவளுடைய பார்வை தாமரையின் மீது நிலைத்தது.

“அம்மா, பயமா இருக்குதும்மா” என்று முனகியது பாக்கியத்துக்கு சரியாக காதில் விழவில்லை. இரண்டு பேரும் முன் அறையில் அந்த டிவி பக்கம் சரிந்து உட்கார்ந்து தாமரையை பார்க்க அவள் கதவை நோக்கினாள்.

“யாராவ‌து வருவாங்களா?”

“தெரியல”

“யாறாவது பேசுனாங்களா? செல்லுல?”

“என் ஃபிரண்டுதான் கடைசியா பேசினது”

“அதுக்கு முன்னாடி?” கிட்டே போய் பவித்ராவிடம் “பவி, அழாதே. தைரியமா இரு. இதுக்கு மேல உன்னோட தைரியம்தான் முக்கியம். இங்க வா” அவளை கட்டிக்கொண்டாள்.

பவித்ரா அவளை இறுக்கமாக அணைத்துகொண்டு “எங்கம்மாவ ஒன்னும் செஞ்சுறாதீங்க” விக்கினாள்.

“அழாத, அழாத, சொல்றத கேளு”

“நீங்க போலீஸ்” என்றாள் பாக்கியம்..

“ஆமா, அதுக்கென்ன இப்போ?”

“உங்க கடமைய செய்யுங்க”

“பேப்பர், டிவி, பப்ளிக், முன்னாடி வீட்டு கிழவி. பரவாயில்லையா?”

பவித்ரா மறுபடியும் அழுதாள். அவளுடைய கண்ணீர் தாமரையின் உடையில் பரவுவதை உணர்ந்தாள். மீண்டும் இறுக்கி அணைத்துக் கொண்டாள்.

“உனக்கு ஒன்னும் ஆகாது பவி. தைரியம் முக்கியம். இந்த உலகம் கொடுமையானது. நமக்கு நாமதான் ஆறுதல்.முக்கியமா பொம்பளைங்களுக்கு.”

பாக்கியத்திடம் திரும்பி “இன்னிக்கு யார் யார் கூட பேசனீங்க?”

“காலைல பால்காரன். அப்பறம் வாசு”

“வாசு யாரு?”

“கடைப் பக்கம் இருக்கறவரு. ஒரு வேன் வச்சுக்கிட்டு நடமாடும் ஓட்டல் நடத்தறாரு”

“ஓ.. அந்த மஞ்சா கலரு வேனா?”

“ஆமா”

“என்ன பேசனீங்க?”

“ஏன் பத்து நாளா கடைய தொறக்கலைன்னாரு. உடம்பு சரியில்லைன்னேன். வந்து பாக்கறேன்னாரு. வேணாம்னு சொல்லிட்டேன். இப்ப பரவாயில்லைன்னு சொன்னேன். அவரு அந்தாளுக்கு ஏற்கனவே பழக்கம். அவரு மூல்யமாதான் அந்த டைலர் கடைய பாத்தோம்.”

“அந்த கெழவி..?”

“அவங்க வந்து கொஞ்ச நேரம் பேசிட்டு போவாங்க. பவித்ராவ புடிக்கும். இன்னிக்கும் காலைல எட்டு மணிக்கு வந்தாங்க. இட்லி செஞ்சிருக்கியான்னு கேட்டாங்க. அவங்களுக்கு இட்லின்னா புடிக்கும். அப்ப அந்தாளு சிரிச்சுக்கிட்டே இட்லி கடையா வச்சிருக்கோமுன்னு சொன்னான்.

அந்தம்மா கோவிச்சுக்கிட்டு போயிடுச்சு. அந்தாளும் எங்கேயோ கெளம்பி போனான். நான்தான் கிழவி மேல பரிதாபப்பட்டு இட்லி வாங்கிட்டு வந்திடறேன்னு பாப்பாக்கிட்ட சொல்லிட்டு தெரு முனைல தள்ளு வண்டி ஒன்னு இருக்கும். அங்க போனேன். அப்பதான்..” முகத்தை ஒரு பக்கமாக சாய்த்து ஜன்னலை பார்த்து சத்தமாக “யாரு சன்னலை தெறந்து விட்டது.?. பவி, பவி, போய் ஜன்னலை சாத்து”

பவித்ரா சட்டென்று எழுந்து ஜன்னலை சாத்தினாள். அம்மாவின் அருகில் போய் அவள் மீது சாய்ந்துக்கொண்டாள்.

“நான் உசாராதான் இருந்தேன். ஒரு வாரத்துக்கு முன்னாடிதான் தெரியும்.” என்றபோது பவித்ரா “அம்மா, வேணாம்மா” அவளது விரல்கள் அம்மாவின் கைகளில் தஞ்சமடைந்தது.

“அப்ப நான் கடைக்கு கெளம்பிட்டிருந்தேன்.. ரொம்ப சோர்ந்து போயிருந்தா. உடம்பு சரியில்லையான்னு கேட்டேன். இப்படியே ரண்டு நாளு போயிடுச்சு. ஆனா நீ கூட இரும்மான்னா. பயமா இருக்குதுன்னா. கூட வா. கடைக்கு போலாம்னு கூப்பிட்டப்ப அங்க எல்லாம் பாப்பாங்கன்னு சொன்னா. ஏன் அப்படி சொன்னான்னு தெரியல. மறுநா மறுபடியும் அதே மாதிரி சொன்னா.. அந்தாளு டாக்டருக்கிட்ட போலாமான்னு சிரிச்சான்”

“உன் வீட்டுக்காரனா?”

“ஆமா, இவ இல்லம்மா. கூட இரும்மான்னு வழக்கமா சொன்னா. எனக்கு ரொம்ப பயமாயிடுச்சு. புள்ள பாவம் ஒடுங்கிப்போயி, மெரண்டு போயி, ஏதோ திகிலோட. ஏதாவது கெட்ட கனவு கண்டியா.?. யாறாவது மெரட்டுனாங்களா..? ஸ்கூல்ல ஏதாவது பிரச்சினையான்னு நோண்டி நோண்டி கேக்கறேன்.

அவளுக்கு பதில் சொல்ல தெரியல்ல. வாயில இருந்து வார்த்தைங்க ஏதோ வருது, ஆனா புரியல. எனக்கு திக்கு.. திக்குன்னு ஆயிடுச்சு. அந்தாளுக்கிட்ட சொல்லறேன்.

நடங்க ஆஸ்பிட்டலுக்கு கூட்டிட்டு போலாமுன்னு. இவ போயி ஒரு மூலைல பதுங்கறா. அவ அப்பாவ பயந்து பயந்து பாக்கறா. அந்தாளு சிரிச்சுக்கிட்ட பக்கம் போனா, ‘கிட்ட வராத, கிட்ட வராத’ன்னு கத்தறா.

எனக்கு அந்தாளு ஏன் அப்படி சிரிக்கறான்னு தோணல. பைத்தியமா நீ? பொண்ணுக்கு ஏதோ பிரச்சன. நீ சிரிக்கறியேன்னு திட்டறேன். அப்பவும் சிரிக்கறான். அதெல்லாம் ஒன்னுமில்ல. எல்லாம் சரியாயிடுமுன்னு சொல்லறான்.

ஆனா எனக்கு என்னமோ உறுத்தலு. அவ அவங்கப்பனை பாத்த பார்வை. அப்பப்பா.

இப்படி வாம்மான்னு தனியா அந்த பெட்ரூமுக்கு கூட்டிட்டு போயி கதவ சாத்திக்கட்டேனே, ரொம்ப நேரம் அவகிட்ட கெஞ்சினேன். சொல்லிரு, உனக்கு என்ன பிரச்சனை? சொல்லிருன்னு.

அந்தாளு கதவ தட்டிக்கிட்டே அது ஏதாவது பயந்திருக்கும். நான் பாத்துக்கறேன். கதவ திறன்னு கத்தறான். கதவ ஓங்கி குத்தறான். எட்டி உதைக்கறான். திம்மு, திம்முன்னு இடிக்கறான்.

பாப்பா என்னைய கட்டிப் புடிச்சுக்கிட்டப்போ எனக்கு உயிரே போயிடுச்சு. அது வளர்ந்த பாப்பா மாதிரியே தெரியல. கொழந்த மாதிரி. உடம்பெல்லாம் நடுங்கி, ‘பயமா இருக்குதும்மா, பயமா இருக்குதும்மா. என்னைய வுட்டுட்டு போயிடாதம்மா. அவன்தாம்மா. அவன்தாம்மா’ன்னு கதவ கை காட்டறா.

எனக்கு அப்ப கூட புரியல. மக்கு நானு, மக்கு. அப்பறம்தான் சொன்னா. ‘நீ இல்லாதப்ப பக்கத்துல வந்து’ ன்னு சொல்லி மறுபடியும் ஓ‍ன்னு அழறா. அடக்கடவுளேன்னு தலைல கைய வச்சுக்கிட்டு. எனக்கும் உடம்பு நடுங்க ஆரம்பிச்சுடுது.

எனக்கும் அழுக அழுகையா வருது. சட்டுன்னு கதவ அடிக்கறது நின்னுப் போச்சு. அமைதி. பாப்பா என்ன சொல்லுதுன்னு அடக்கமா கதவுக்கு பின்னாடியிருந்து கேக்கறான். அதுக்குள்ள கதவு சத்தம் கேட்டு யாரோ வெளியில வந்து கேக்கறாங்க.

அந்தாளு போயிட்டு ஏதோ பேசறான். அப்பறம் திரும்ப வர்ற சத்தம் கேட்டது. பாப்பா திகிலோட என்னைய பாத்தா. நான் பாத்துக்கறேன் இருன்னு ஒரு முடிவோட போயி கதவ தொறந்தேன்.

ஒன்னும் தெரியாத மாதிரி ‘என்னம்மா ஆச்சு? என்ன சொன்னா? என்ன சொன்னான்னு உள்ளாற வந்தான்.

‘இல்லீங்க, வயித்துக் கோளாறு, வலி’ அதான்னு சொன்ன பெறகுதான் அவனுக்கு அப்பாடான்னு ஆச்சு. பாப்பாவ பாத்துக்கிட்டே அதானே பாத்தேன்னு கண்ண ஒரு உருட்டு உருட்டினான்.

பாப்பா ஓடி வந்து எம்பக்கத்துல நின்னுக்கிச்சு. தொடப்போனான். வெலகிட்டா.

‘அப்பாம்மான்னு கிட்ட வந்தான். நான்தான் தடுத்துட்டேன். புள்ள பயந்திருக்குது. மாத்தர சாப்புட்டா சரியாயிடுமுன்னு சொல்லி வெளியே கூட்டிட்டு வந்துட்டேன். அவனுக்கு பெரிய சமாதானம் ஆயிடுச்சு. எதையோ ஜெயிச்சுட்ட மாதிரி அலட்சியமா டிவிய போட்டுக்கிட்டு படம் பாக்க ஆரம்பிச்சுட்டான்.” நிறுத்தி மகளை பார்த்தாள்..

“ஜன்னலை நல்லா மூடினியா பவி?” என்றாள்.

தாமரை சன்னலருகே சென்று திறந்து வெளியே பார்த்தாள்.. கேட்டுக்கு முன்னாடி வேப்பமரத்தடியில் நிற்கும் அவளுடைய வண்டி. காற்றில் சிதறும் வேப்பம்பூக்கள். எதிர் வீட்டு திண்ணையில் அந்த பாட்டி. எதையோ மென்று கொண்டு. சன்னலுக்கு நேராக தெரிந்த இரண்டு மாடி வீடுகளில் ஒருத்தி துணி காயப் போட்டுக் கொண்டிருந்தாள்..

“எந்த பிரச்சனையும் இல்ல, ஜன்னல் திறந்தே இருக்கட்டும்” தாமரை பவித்ராவின் அருகில் சென்று கீழே உட்கார்ந்து அவளை அம்மாவிடமிருந்து பிரித்து அணைத்துக் கொண்டாள்.

பவித்ரா, “அம்மா, தண்ணி” என்றாள். பாக்கியம் இடத்தை விட்டு எழவில்லை.

அவள் பார்வை சன்னல் மீதே இருந்தது. தாமரைதான் டிவி அருகே இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்துக் கொடுத்தாள்.
“நான் ஏன் தப்பு செஞ்சேன்” பாக்கியத்தின் உதடுகள் முணுமுணுத்தது.

“என்ன தப்பு? கொலை செஞ்சதா?”

“அது கொலையில்ல”

“போலீசுக்கு அது கொலை”

“அரெஸ்ட் பண்ணுங்க. தாராளமா, எம் பொண்ண விட்டிருங்க”

“பண்ணிக்கலாம். நான் ரிப்போர்ட் தரணும். அப்பாக்கிட்ட பேசனும். இது வேற போலீஸ் ஸ்டேஷன் லிமிட். அந்த கட்டைல என் கைரேக படிஞ்சிருக்குது. திட்டுவாங்க. எல்லா இடத்திலேயும் நடந்திருக்கேன். திட்டுவாங்க.”

“அதெல்லாம் மர்மக்கொலைக்கு. நான் கொன்னதுக்கு எதுக்கு சாட்சி? தடயம்?”

“அந்தாள நீங்க கொல்லலை”

“பின்ன?”

“உங்க பொண்ணு”

வெளியே ஏதோ சத்தம் கேட்டது. பாக்கியம், “அது அந்த மஞ்சா வேன்” என்றாள்.

அவள் எழவில்லை. தாமரை எழுந்து சன்னலருகே மறுபடியும் போனாள். வேனை நிறுத்திவிட்டு அந்த நபர் டூ வீலரை பார்த்தபடியே கேட்டருகே வருவது தெரிந்தது.

பவித்ரா அம்மாவின் மடியில் படுத்துக் கொண்டாள். கேட்டை திறக்கும் சத்தம்.

தாமரை, “இப்ப எதுக்கு இது தேவையில்லாம. அதுவும் வேன்ல?”

கதவு தட்டியது.

பாக்கியம் “யாருங்க?”

“நான் வாசு”

“இருங்கண்ணா, ஒரு நிமிசம்” எழ முயன்றாள்.

பவித்ரா தரையில் படுத்தாள். அதற்குள் தாமரை கதவை திறந்து, “இவரு யாரு?”

“இவங்க வாசு. அண்ணா, வாங்க உள்ளாற”

தாமரை ஒதுங்க “இவங்க வேற போலீஸ் நண்பியா?” நுழைந்து கொண்டே கேட்டான்.

“அங்க கடைக்கு வந்திட்டுதான் வந்தாங்க. கொஞ்சம் வேகமா இருந்தாங்க. ஒரு சந்தேகத்துலதான் வந்தேன். அவரு வேற போன எடுக்கலை.”

“ரிங் போச்சாண்ணா?”

“இல்ல, ஸ்விட்ச் ஆஃப்புன்னு வருது. தெரியல, எங்கேயோ போனாரு?”

“இப்ப எப்படியிருக்கு உடம்புக்கு?”

“பரவாயில்ல, பவித்ராவுக்குதான் முடியல”

“அவளுக்குமா? பவி, பவி”

தாமரை சேரில் உட்கார்ந்துக்கொண்டே, “வேன் பிசினஸா உங்களது?”

“ஆமாங்க மேடம். வாடகையெல்லாம் இல்ல. ஓட்டல். ஒரே ஐட்டம்தான். மீன் பிரியாணி.” பவித்ராவிடம் திரும்பி “பவி, பவி”

அவள் ஏதோ முனகினாள். பாக்யம் அவள் கன்னத்தை வருடினாள். “எல்லாம் சரியாயிடும். மாத்திர சாப்பிட்டிருக்கா”

“சரியானா சரி, நாளைக்காவது கடைய தொறங்க. நெறயப் பேரு வந்து பாத்துட்டு போறாங்க. அந்த பாய் பொம்பள திட்டுது. புது ஜாக்கெட்டுக்கு ரண்டு நாள்ல தந்தர்றேன்னு சொன்னீங்களாமே?”

“அதை பாத்துக்கலாம்”

தாமரை அவனிடம், ”இன்னிக்கு வேல இல்லையா?”

“இல்லை மேடம், மீன் வரலை. டெய்லி அறுபது கிலோ எடுப்பேன். இன்னிக்கு புடிக்கலையாம்.”

“வேனுக்கு அப்ப வேலையில்லையா?”

“ஆமா மேடம், ஏதாவது வேலயிருக்கா? போலீஸ் சமாச்சாரமுன்னா வேணாம் மேடம்”

“ஏன்யா பயப்படறீங்க?”

“மீன் பிரியாணிக்கு ஆசப்பட்டு லைசென்ஸ காட்டுங்கிறாங்க”

பவித்ராவை பார்த்தபடி ”ஒரு பார்சல் பண்ணனும்”

“என்ன பார்சல் மேடம்?”

“ஒரு பீரோவ, மர பீரோதான். பழைய பீரோ. பெருசா அகலமா இருக்கும். பக்காவா பூட்டு போட்டு பார்சல் பண்ணி ரெடியா இருக்குது. உள்ளாற துணிங்க. லெதர் பேக்குங்க. கொஞ்சம் கனமா இருக்கும். என்னோட ஐட்டம். இங்கதான் இத்தன நாளா இருந்தது. எனக்கு வேற நேரமாகுது. அடுத்த டூட்டிக்கு. தூங்கி ரெஸ்ட் எடுக்கனும். அதுக்கு முன்னாடி சாப்பிடனும், தூக்கிடலாமா?”

“தாராளமா மேடம், எங்க போணும்?”

“பைபாஸ்ல சங்கர்பவன் ஓட்டல தாண்டி பெரிய மலைக்கு திரும்புதில்ல”

“ஆமாமா”

“அங்கிருந்து உள்ளாற போங்க.ஒரு ஆஞ்சநேயர் கோயிலு வரும்.”

“ஆமாமா”

“அங்கிருந்து ஒரு லெப்ட் எடுத்திங்கன்னா ஒரு கிலோ மீட்டர்ல தென்னந்தோப்பு ஒன்னு வரும். உள்ளாற நுழைஞ்சா கீத்து போட்ட பெரிய கொட்டாய் இருக்கும். அங்க இறக்கனும்.”

“வீடில்லையா அது?”

“வீடு மாதிரிதான். எங்க நெலம்தான். பக்கத்துல ஒரு ஆறு போகுதில்ல. எதுத்தாப்ல மலை.தோப்புல ஒரு கெணறு. பத்தாதுக்கு ஒரு குட்டை வேற இருக்குது ஒரு மூலைல. சேறு சேறா. எறங்கி கொஞ்சம் ஓட்டை போட்டு மூடிட்டா வெளிய தெரியாது”

“எதுக்கு மேடம்?”

“மீன் புடிக்கறதுக்கு”

“புரியல, மீன் குட்டையா அது. கெளுத்தி நெறைய கெடைக்குமே. பிரியாணிக்கு தருவீங்களா.?”

“பாத்துக்கலாம்”

பவித்ராவிடம் திரும்பி, “பவி, நீ நல்லா ரெஸ்ட் எடு. உங்கம்மா கூடவேதான் இருக்காங்க. தைரியமா இருக்கனும். உடம்பு சரியாயிடும். நான் வந்து பாக்கறேன்”

பாக்கியத்திடம் ”நாளைக்கு கடைய தொறந்திடலாமா?”

“ஆமாங்க, வியாபாரம் கெட்டுப் போச்சு. கஸ்டமருங்க வந்து விசாரிக்கறாங்க.”

பாக்கியம் இவளையே பார்க்க, அவள் கண்களில் நீர் கோர்த்து.

தாமரை சட்டென்று எழுந்து, “பீரோவ புடிக்கலாமா வாசு சார்?”

“ஓகே மேடம், இருங்க‌ ரண்டு பேர கூட்டிக்கிட்டு வர்றேன்”

“அதெல்லாம் வேணாம், நாம ரண்டுப்பேரு போதும். வண்டிய திருப்பி பின்னாடி ஒப்பன்ல விடுங்க. கேட்டுக்கு குளோஸா நிறுத்துங்க. மீன் பிரியாணி பிசினஸா சொன்னீங்க?”

“ஆமாங்க, அம்பது ரூபாதான். கூட கொத்துமல்லி சட்னி, வெங்காயம், லெமன், அப்பறம்…”

“போதும் வாங்க. ஏம்மா பாக்கியம், நீ அந்த எடத்த விட்டு எழவே மாட்டியா?”

பாக்கியம் கண்களை உயர்த்த கஷ்டப்பட்டு மகளை பார்த்தவாறு “நீங்க பீரோவ தூக்கிட்டு வெளிய போனப்பிறகு..” என்றாள்.

“மேடம், நீங்க ஏரிக்கரை ஸ்டேஷனா? அந்த வாசு மர பீரோவை பார்த்து பரவாயில்ல. வேன்ல உக்காந்துக்கும்.”

“நானு வெங்கடஹள்ளி ஸ்டேஷன். இதா, இப்புடி புடிங்க” பீரோவை ஒரு பக்கமாக இழுத்தபோது “ரொம்ப கனக்குதே?” என்றான் அவன்..

“எனக்கு அப்படி தெரியல. வாசு சார், பாத்துங்க. வாசல்ல இடிச்சுடப்படாது. யாரு பின்னாடி? பாக்கியமா, வந்துட்டீங்களா? நீங்க போங்க நாங்க பாத்துக்கறோம்.”

பாக்கியம் “அந்த கட்டை? மொபைலு?” என்றாள்.

“என்னா கட்ட, ஏதாவது விட்டுப் போச்சா?” வாசு கீழே சுற்றிலும் பார்த்தான்.

“அதெல்லாம் இல்லை வாசு சார். எல்லாம் பீரோவுல வச்சாச்சு. பீரோவோட போயிடும் அதெல்லாம்.”

“எனக்கு ஒன்னும் புரியல, டைலரம்மாவையும் புடிக்க சொல்லலாமே?”

“வேணாம், அவங்களுக்கு உடம்பு சரியில்ல. வெளிய நில்லுங்க பாக்யம். பவித்ராவ போயி கவனிங்க.”

“இல்ல வேணாம்”

“என்ன வேணாம்?”

“பீரோ இருக்கட்டும்” என்றதும்

தாமரை “வாசு சார், ஒரு நிமிஷம். நான் இவங்களோட தனியா பேசனும். ஒரு அஞ்சு நிமிஷம் வெளிய இருக்கீங்களா? வெளியேன்னா உங்க வண்டிக்கிட்ட. அஞ்சே நிமிஷம்”

“அதுக்கென்ன மேடம், பீரோவுல ஏதாவது பண விவகாரமா?” சிரித்துக் கொண்டே “சீக்கிரம் கூப்புடுங்க” வெளியேறினான்.

அவன் கேட்டை திறக்கும் சத்தம் கேட்டு “உங்களுக்கென்ன பைத்தியமா?” என்றாள் தாமரை.

“இல்லீங்க”

“பின்ன?”

“நானா முடிவு பண்ணது. இப்ப, இந்த நொடில.” பக்கத்தில் வந்த நின்ற பவித்ராவை முதுகோடு அணைத்து “எம் பொண்ணு தைரியசாலிங்க. இல்லன்னா அவ்வளவு பெரிய ஆள கட்டையால ஒரே போடு. பின்னாடி மண்ட மேல. பொட்டுன்னு போயிட்டான். என்னால கூட முடிஞ்சிருக்காது”

“அதனால?”

“எனக்கு இப்ப அழுக வரலைங்க. ஆனா வராதுன்னு சொல்ல முடியாது.பின்னாடி அழுதுக்கறேன். பதினஞ்சு வருச வாழ்க்கை. அவன் வாசனைய முழுசா அனுபவிச்சிருக்கேன்.

கணவன் அப்படீங்கற பிம்பத்தோட. இந்த பத்து நாள்ல அதெல்லாம் அழிஞ்சுப்போச்சு. சமீபத்துலதாங்க இந்த மாதிரி. இவள கேட்டா ஒரு மாசாமாதான் இந்த மாதிரி நடக்குதுங்கறா. தொட்றது, கெட்ட வார்த்த பேசறது, ஒரு மாதிரியா பாக்கறது”

“இல்ல, இல்ல, இது ரண்டு மூணு வருசமாகவே இருந்திருக்கலாம்”

“என்ன சொல்றீங்க?”

“போலீஸ் புத்தி. அதான், அவளுக்கு தெரிஞ்சுருக்காது. டச் பண்ணறது, நெருக்கமா வந்து நிக்கறது, கன்னத்தை கிள்ளறது. இதெல்லாம் அப்பா அப்படீங்கற வட்டத்துக்குள்ளதான் உங்க பொண்ணுக்கு தோனிருக்கும்.

அந்தாளுக்கும் அந்த தயக்கம் இருந்திருக்கும். அந்த தயக்கம் இப்ப சமீபத்துலதான் உடைஞ்சிருக்குது. சீண்டல் அதிகமாயிருக்குது. அநேகமா வலுக்கட்டாயம். மிரட்டல் வரைக்கும் போயிருக்கலாம். உங்களுக்கு விச‌யம் தெரிஞ்சு நீங்க வீட்ல இருக்க ஆரம்பிச்ச பெறகு உங்களை அவன் புரிஞ்சிருக்கனும். அவன் வெளிய போயிட்டான்னு நீங்க இட்லி வாங்க போனப்ப உள்ளாற வந்து.”

“சொல்லாதீங்க, சொல்லாதீங்க. மெரட்டல்தான். அங்கங்கே கத்தி வச்சி கீசிருக்கான். முகத்தை அழுத்தி கட்டுலு மேல போட்டு, நல்லவேள, எதுவும் நடக்கல. திமிறிட்டு பக்கத்துல இருந்த கட்டையால ஒரே அடி. ம்மா, நான் உள்ளாற வந்தப்போ அவன் தலைகுப்புற விழுந்திருந்தான். பின்னாடி மண்டைல ரத்தம் சொட்டுது. கட்டையோட இவ. புருஞ்சுக்கிட்டேன். அப்பறம்? அப்பறம்? திடீரென்று..”

“அப்படின்னா நான் வெளிய போவேனான்னு எங்கேயோ நின்னு வேவு பாத்திருக்கான்.”

“ஆமா, அநேகமா இது நாலாவது முறையோ, அஞ்சாவது முறையோ இருந்திருக்கலாம். ஒவ்வொரு முறையும் உங்க பொண்ணு சத்தம் போட்டே தப்பிச்சிருக்குது.”

“எப்படி சொல்லறீங்க?”

“உங்களுக்கு உங்க பொண்ணு சொல்லாம இருந்திருக்கலாம். அக்கம் பக்கத்துல வீடுங்க இருக்குது. முன்னாடி திண்ண மேல எப்பவும் அந்த பாட்டி. அந்தாளுக்கு தோதுப்பட்டிருக்காது. அநேகமா உங்க பொண்ணு ஒரு நாலஞ்சு மாசமா உங்களோட அதிகமா பேசியிருக்காதே. கவனிக்கலையா நீங்க.?”

பாக்யம் மகளைப் பார்த்து, ”ஒன்னும் புரியலைங்க. நான்தான் தப்பு பண்ணிட்டேன்.”

“எப்படி?”

“இந்த மாதிரின்னு தெரிஞ்சு போலீசுக்கு போயிருக்கனும். வீட்ட விட்டு வெளிய போடான்னு முடுக்கியிருக்கனும். இல்லன்னா எம்மகள இழுத்துட்டு நான் வெளிய போயிருக்கனும்.

ஏங்க நான் அமைதியா இருந்தேன்? குடும்ப கௌரவம்னா? வெளிய தெரிஞ்சாதான் என்ன? மூடி மறைச்சு அப்படி என்னாங்க கௌரவம் வேண்டி கெடக்குது?”

“பொண்ணோட வாழ்க்கை?”

“அதான் சொன்னேனே. இப்பதான் முடிவெடுத்தேன். எம்பொண்ணு தைரியசாலிங்க. கொடுமைக்கார அப்பன கொன்னவன்னு பேப்பர்ல வருமில்ல. இவள மாதிரி நாலு பேருக்கு தைரியம் வருமில்ல. எம் பொண்ணுக்கு ஒன்னும் ஆகல. ஆனா இதே மாதிரி நடக்கற வீட்ல அந்த பொண்ணை பத்தி யோசிச்சுப் பாருங்க.

அந்தப் பொண்ணு யாருக்கும் சொல்லாம உள்ளுக்குள்ளேயே வச்சுக்கிட்டு அப்பனோட மெரட்டலுக்கு பணிஞ்சு.. சே.. சே.. நான் சொல்லப் போறேனுங்க. எம்பொண்ணுதான் கொன்னா அந்த வெறி புடிச்சவன அப்படீன்னு.

தற்காப்புக்குன்னு விட்டுடுவாங்க. எனக்கு தெரியும். ரோட்ல போனா இந்தப் பொண்ணுதானான்னு பாப்பாங்க, பாக்கட்டும். தைரியசாலின்னு சொல்லட்டும்.

நல்லாயிரும்மான்னு வாழ்த்தட்டும். முடியாதவங்க தாண்டி போகட்டும். அவங்களுக்கும் செத்துப் போனானே, அவனுக்கும் வித்தியாசமே இல்லன்னு அர்த்தம். எனக்கு ஒரு உதவி செய்யுங்க”

“என்ன?”

“ஒரு நல்ல வக்கீல ஏற்பாடு பண்ணுங்க”

“வக்கீலே தேவையில்ல, உங்க பொண்ணு கோர்ட்டு படியேறிட்டு வீட்டுக்கு வந்திடும். அதுக்கு முன்னாடி பாடிய, அந்த கட்டைய இருந்த எடத்துல தூக்கிப் போட்டுருவோம். அசிங்கம் புடுச்சவன் பாடியை எப்படி டீல் பண்ணறதுன்னு போலீசுக்கு தெரியும்”

உள்ளே தயங்கி, தயங்கி வந்த வாசுவிடம், ”வாசு சார், உங்களுக்கு வேலையில்ல. ஆனா வேற வேலை தர்றேன்”

“என்ன மேடம்?”

“இவங்கள வண்டியில ஏத்திக்கோங்க. ஸ்டேஷனுக்கு போறோம். நான் இவங்க நண்பிக்கிட்ட பேசிடறேன்.” என்ற தாமரை பவித்ரா அருகில் சென்று, “நானும் உன்னோட இருப்பேன். பயப்படக்கூடாது.இன்னும் கொஞ்ச நேரத்துல இந்தியாவே உன்னைய திரும்பிப் பாக்க போகுது.” அவள் கையை பிடித்துக்கொண்டு “உங்கம்மா செய்யறது சரிதானே?”

“ம்..ம்..” என்றாள் பவித்ரா

வாசு, “எனக்கு ஒன்னும் புரியலைங்க”

“புரிஞ்சுடும். ஏம்மா பாக்கியம், உங்க மொபைல்ல இருந்து உங்க ஃபிரண்டுக்கு போன் போட்டுக் கொடுங்க. நீ வா பவி” அவளை அணைத்தபடியே வெளியேறி.

“என் வீட்ல ஒரு குட்டி பாப்பா இருக்குது. சித்தப்பா பொண்ணு, உன்ன மாதிரியே..” என்றபோது பாக்கியம்

“இந்தாங்க, லைன்ல இருக்காங்க.”

வாங்கி, ”ஹலோ மேடம்”

“இன்னுமா அங்கேயே? ஏதும் பிரச்சனை இல்லைன்னு சொன்னாளே”

“இல்லை மேடம், இங்க ஒரு ஹீரோயின் இருக்காங்க”

“யாரு?”

“பவி”

“ஓ, பவித்ரா, சரியா பேசமாட்டாளே. மூஞ்சியை பறிகொடுத்த மாதிரி வச்சுக்கிட்டு”

“இல்ல மேடம்.. அது என்னன்னா” தொடர்ந்தாள் தாமரை.

வேல்விழிமோகன்
9442304307
velvizhiimohan@gmail.com
கிருஷ்ணகிரி

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.