மிலாடிநபி

மிலாடிநபி முகமதியர்களால் கொண்டாடப்படும் விழாவாகும். முகமது நபி எனப்படும் நபிகள் நாயகம் அவர்களின் பிறந்த தினத்தையே மிலாடிநபி விழாவாக கொண்டாடுகின்றனர்.

நபிகள் நாயகத்தின் வரலாறு மற்றும் போதனைகள்:

நபிகள் நாயகம் சவூதி அரேபியாவிலுள்ள மக்காவில் கி.பி.571 ஆம் ஆண்டு முகமதிய மாதமான ரபீவுல் அவ்வல் மாதம் 9-ம் நாள் திங்கட்கிழமை அதிகாலையில் பிறந்தார்.

நபிகள் நாயகம் தனது தாய் ஆமீனாவின் வயிற்றில் இருக்கும்போதே தந்தையை இழந்தார். இதனால் கவலையில் உடல்நலம் குன்றிய ஆமீனாவால் நபிகள் நாயகம் ஹலீமா என்ற வளர்ப்புத் தாயிடம் ஒப்படைக்கப்பட்டார்.

பின் ஐந்து வயதான போது வளர்ப்புத் தாயை இழந்ததால் மீண்டும் தாயிடம் வந்து சேர்ந்தார். ஆறு வயதான போது தாயையும் இழந்தார். பெற்றோரை இழந்த அந்த இளஞ்சிறுவனை பாட்டனார் அப்துல் முத்தலீப் வளர்த்து வந்தார். எட்டு வயதான போது பாட்டனாரும் மறைந்து விட்டார். அதன் பிறகு தனது பெரிய தந்தை அபூதாலிப்பிடம் வளர்ந்தார்.

அவர் சிறுவயதில் நற்குணம் உடையவராக திகழ்ந்தார். எனவே அவருக்கு அல்அமீன், அஸ்ஸாதிக் ஆகிய பட்டங்கள் வழங்கப்பட்டன. அல்அமீன் என்றால் நம்பிக்கைக்குரியவர் என்றும் அஸ்ஸாதிக் என்றால் உண்மையாளர் என்றும் பொருள்.

அவர் தனது இருபத்தைந்தாவது வயதில் நாற்பது வயதான விதவை பெண் கதீஜாவை மணந்தார். பின் அவர் தம் நாற்பதாவது வயதில் கீரா மலைக்குகையில் தவம் மேற்கொண்டார். அப்போது அவருக்கு இறையருள் கிடைத்தது. நபி பட்டம் வழங்கப்பட்டது. பின் அவர் மக்களுக்கு இறைவன் ஒருவனே என்ற கொள்கையை எடுத்துரைத்தார்.

இறைவன் ஒருவனே, அவன் தேவையற்றவன், அவன் எவரையும் பெறவுமில்லை எவராலும் பெறப்படவுமில்லை. மக்கள் யாவரும் ஓர் குலம். மொழியால், நிறத்தால் உயர்ந்தவர், தாழ்ந்தவர் இல்லை அனைவரும் ஓர் இனம்.

யார் நற்செயல் செய்கிறார்களோ அவரே மக்களிடமும், இறைவனிடமும் உயர்ந்தவர். யாரிடமும் எதையும் எதிர்பார்த்து உதவி செய்யக்கூடாது. மக்கள் மீது இரக்கம் காட்டாதவனுக்கு இறைவன் இரக்கம் காட்டமாட்டான் என்று கூறினார்.

அனாதைகளையும், ஏழைகளையும் அரவணைத்தார். சிறுவர்கள் மீது அன்பு காட்டினார். புறம் பேசுதல், பொறாமை கொள்ளல், பிறர் மீது அவதூறு சொல்லல், மது ஆகிய தீய செயல்களிலிருந்து மக்களைப் பாதுகாத்தார்.

தாய் தந்தையர் மீது அன்பு காட்ட வேண்டும். அவர்களுக்கு வயதான காலத்தில் பணிவிடை செய்ய வேண்டும் என்று எடுத்துரைத்தார். மன்னிக்கும் குணமுடையவராகத் திகழ்ந்தார். தான் இறைவனின் தூதனாகவும், அடியவனாகவும் இருப்பதால் தன்னை கடவுளாக வணங்கக்கூடாது என்று கூறினார்.

நபிகள் நாயகம் தனது 63வது வயதில் இயற்கை எய்தினார். 23 வருடங்கள் இறைவனின் கட்டளைகளை மக்களுக்கு எடுத்துரைத்தார். அதன் மொத்த வடிவமே திருக்குரான் ஆகும். அவரது போதனைகள் மற்றும் நற்குணங்களை மிலாடிநபி நாளில் பின்பற்றுவோம்.