மிளகு என்னும் மசாலா அரசன்

மிளகு என்னும் மசாலா அரசன் பற்றி தெரியாதவர்கள் இருக்க முடியாது. இது இல்லாமல் எந்த மசாலாவும் பூர்த்தி பெறாது. எனவேதான் இது மசாலாக்களின் அரசன் என்று சிறப்பாக அழைக்கப்படுகிறது. மேலும் இது மருத்துவ குணங்கள் மிக்கதாகவும் விளங்குகிறது.

இது உலகெங்கும் நறுமணப் பொருளாகவும், மருந்துப் பொருளாகவும், உணவில் சுவை கூட்டும் பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது.

மிளகு வாணிபம் மிகவும் லாபகரமானது. எனவே இது கறுப்புத் தங்கம் என்றும் அழைக்கப்படுகிறது. மேலும் பண்டைய காலத்தில் பணத்திற்குப் பதிலாக மிளகை உபயோகப்படுத்தியதாக வரலாறு கூறுகிறது.

மிளகில் கருமிளகு, வெண்மிளகு, பச்சை மிளகு, சிவப்பு மிளகு என நான்கு வகைகள் உள்ளன. மிளகுக்காய்கள் சில குறிப்பிட்ட பருவங்களில் பறிக்கப்பட்டு பல்வேறு முறைகளில் பதப்படுத்தப்படுவதால் மிளகின் வகைகள் கிடைக்கின்றன.

மிளகின் வகைகள்
மிளகின் வகைகள்

மிளகு என்று பொதுவாகக் கூறினால் அது கருமிளகினையே குறிக்கும்.

மிளகுக் காய்கள் பழுக்க ஆரம்பிக்கும் போது சிவப்பு நிறத்திற்கு மாறத் தொடங்கும். அப்போது அவை பறிக்கப்பட்டு சூடான நீரில் ஊறவைக்கப்பட்டு உலர வைக்கப்படுகின்றன. இதனால் அதனுடைய சதைப்பகுதி விதையுடன் காய்ந்து சுருங்கி கருப்புநிறமாக மாறி கருமிளகு கிடைக்கிறது.

நன்கு பழுத்த மிளகுப் பழங்களை ஊற வைத்து சதைப்பகுதியை நீக்கி விதைகள் உலர்த்தப்பட்டு கிடைப்பது வெண்மிளகாகும்.

பச்சையான மிளகுக்காய்கள் பறிக்கப்பட்டு பச்சைநிறத்தினை தக்க வைத்துக் கொள்ள உறைய வைத்து உலர்த்துதல் உள்ளிட்ட பதப்படுத்தும் முறைகள் பின்பற்றப்பட்டு பச்சை மிளகு பெறப்படுகிறது.

பழுத்த மிளகுப்பழங்களை சில வேதிப்பொருட்களைப் பயன்படுத்தி உலர வைப்பதன் மூலம் சிவப்பு மிளகு பெறப்படுகிறது.

மிளகின் வளரியல்பு

மிளகானது பல்லாண்டு வாழக் கூடிய சுமார் நான்கு மீட்டர் உயரம் வளரும் கொடி வகைத் தாவரத்திலிருந்து பெறப்படுகிறது. இது அருகில் இருக்கும் மரம், தூண், கயிறு ஆகியவற்றைப் பற்றி வளரும் இயல்புடையது. முள்முருங்கை உள்ளிட்ட பட்டையான மரத்தில் இது பற்றி செழித்து வளரும்.

மிளகுக் கொடி
மிளகுக் கொடி

இதனுடைய இலைகள் 5-10 செமீ நீளத்தில், 3-6 செமீ அகலத்தில் வெற்றியிலையைப் போல் பெரிதாக இருக்கும். இக்கொடியில் எட்டு செமீ ஊசியைப் போன்று நீளமான மலர்க்காம்பில் சிறிய வெள்ளைநிற மலர்கள் தோன்றுகின்றன.

மிளகின் மலர்கள் காயாக வளர்ச்சி பெறும்போது மலர்க்காம்பானது 15செமீ நீளம் வளர்ச்சி அடைகிறது. ஒரு காம்பில் 20-30 காய்கள் கொத்தாக இருக்கும். மிளகுக் கொடியானது எப்போதும் பசுமையாக காணப்படும்.

இது நீண்ட மழைப்பொழிவு, சீரான உயர்வெப்பம், பகுதி நிழல் இருக்கும் இடங்களில் செழித்து வளரும். வளமான, ஈரப்பதமான, கெட்டியான மண் இதற்கு தேவை.

மிளகின் வரலாறு

மிளகின் தாயகம் தென்னிந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியாகும். இந்தியாவின் கேரள கடற்கரைப் பகுதி நெடுங்காலமாக மிளகு உற்பத்தியில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

பண்டைய காலத்திலிருந்தே இப்பொருள் விலைமதிப்பு மிக்கதாக விளங்கி வருகிறது.

இந்தியாவை ஆங்கில ஆட்சியின் கீழ் கொண்டு செல்லக் காரணமாக விளங்கிய ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி உருவாக்கத்திற்கு மிளகே காரணம்.

ஏனெனில் ஐரோப்பிய நாடுகளில் மிகவும் விலைமதிப்பு மிக்கப் பொருளாகக் கொண்டாடப்பட்ட மிளகின் விலையினை டச்சு வணிகர்கள் லண்டனின் அதிகப்படுத்தி விற்றனர்.

மேலும் இந்தியாவில் விளைந்த நறுமணப்பொருட்கள் மற்றும் மிளகினைப் பெறும் நோக்கத்தினாலேயே இந்தியாவிற்கான கடல்வழி மார்க்கம் ஐரோப்பியர்களால் அறியப்பட்டது.

கிரேக்க நாகரீகத்தில் கிமு 4-ம் நூற்றாண்டு முதல் மிளகு பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.

மிளகின் விலை உயர்ந்திருந்ததாலும், அதிகமான தட்டுப்பாடு நிலவியதாலும் கிரேக்கத்தில் வசதியானவர்கள் மட்டுமே இதனுடைய சுவையை அறிந்திருந்தனர்.

கிரேக்கத்தில் கடவுளர்களின் காணிக்கைப் பொருளாகவும், வரி மற்றும் மீட்கும் தொகையை செலுத்தவும் மிளகானது பயன்படுத்தப்பட்டது.

ரோமப் பேரரசின் வீழ்ச்சியின் போது ரோமின் மீது படையெடுத்து வரும் காட்டுமிராண்டிகளுக்கு மிளகானது பரிசளிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது.

நறுமணப் பொருள்களின் சந்தையில் ஊக்குவிப்பானாக இருந்த மிளகானது புதிய நிலங்களின் கண்டுபிடிப்பிற்கும், மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஐரோப்பாவில் வியாபார நகரங்களின் உருவாக்கத்திற்கும் காரணமாக அமைந்தது.

இந்தியாவும், இந்தோனேசியாவும் மிளகின் உற்பத்தியில் முன்னிலையில் உள்ளன. கேரளாவின் கொச்சி நகரத்தில் சர்வதேச மிளகு சந்தை உள்ளது.

மிளகில் உள்ள ஊட்டச்சத்துக்கள்

மிளகில் விட்டமின் கே மிகஅதிகமாகவும், விட்டமின் இ, சி, பி6 (பைரிடாக்ஸின்) அதிகமாகவும் உள்ளன. இதில் விட்டமின் ஏ, பி1 (தயாமின்), பி2 (ரிபோஃப்ளோவின்), பி3 (நியாசின்), பி9 (ஃபோலிக் அமிலம்), சோலைன் ஆகியவையும் காணப்படுகின்றன.

இதில் இரும்புச்சத்து, மாங்கனீசு, செம்புச்சத்து மிகஅதிகளவும், கால்சியம், மெக்னீசியம் அதிகளவும் உள்ளன. இதில் பாஸ்பரஸ், துத்தநாகம், பொட்டாசியம் போன்ற தாதுக்களும் உள்ளன.

லுடீன் ஸீதாக்ஸைன், பீட்டா கரோடீன் போன்றவை மிகஅதிகளவும், பீட்டா கிரிப்டோ சாந்தின் அதிகளவும் போன்ற பைட்டோ-நியூட்ரியன்கள் காணப்படுகின்றன. மேலும் இதில் லைகோபினும் உள்ளது.

இது அதிகளவு நார்ச்சத்தைக் கொண்டுள்ளது. மேலும் இதில் கார்போஹைட்ரேட், புரதச்சத்து, கொழுப்புச்சத்து ஆகியவையும் காணப்படுகின்றன.

மிளகின் மருத்துவ பயன்கள்

மிளகின் காரமான நெடிக்குக் காரணம் பைப்பரின் ஆகும்.

வயிற்றின் ஆரோக்கியத்திற்கு

மிளகானது வயிற்றுக்குள் ஹைட்ரோகுளோரிக் அமிலச்சுரப்பை அதிகரிக்கச் செய்கிறது. ஹைட்ரோகுளோரிக் அமிலமானது செரிமானத்திற்கு மிகவும் அவசியமானது.

மேலும் இது வயிற்றில் வாயுக்கள் உருவாக்கத்தை தடுப்பதோடு சிறுநீர் மற்றும் வியர்வைச் சுரப்பினை ஊக்குவித்து உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுகிறது.

மேலும் மிளகானது வாயு நீக்கியாகவும், மலமிளக்கியாகவும் செயல்படுகிறது.

செரிமானம் நன்கு நடைபெற

மிளகில் உள்ள பைப்பரின் செரிமானம் நன்கு நடைபெற உதவுகிறது. இதனை உண்ணும் போது நாக்கில் உள்ள சுவை மொட்டுகளை ஊக்குவிக்கப்பட்டு ஹைட்ரோகுளோரிக் அமிலச்சுரப்பைத் தூண்டப்படுகிறது.

இந்த அமிலம் வயிற்றில் உள்ள மற்ற உணவுகளுடன் புரதங்களையும் நன்கு செரிமானம் செய்கிறது.

மிளகில் உள்ள கேப்சைசின் குடலினைப் பாதுகாக்கிறது. கார உணவினால் குடல் பாதிக்கப்பட்டிருந்தால் மிளகினை அதிகம் உணவில் சேர்த்துக் கொள்ளும்போது நிவாரணம் கிடைக்கும்.

மிளகானது உணவிற்கு சுவையை அளிப்பதோடு ஏனைய உணவுப்பொருட்களிலிருந்தும் ஊட்டச்சத்தினை குடல் உறிஞ்சவும் உதவுகிறது.

ஆரோக்கிய எடை இழப்பிற்கு

மிளகானது உடலில் உள்ள கொழுப்பு செல்களை எளிதாக உடைத்து நொதி வினைகள் மற்றும் பிற செயல்களுக்கு பயன்படுத்தச் செய்கிறது.  இதனால் உடலில் கொழுப்பு சேகரமாகி உடல் எடை அதிகரிப்பது தடுக்கப்படுகிறது.

மேலும் இது உடலில் உள்ள நஞ்சுப் பொருட்களை வியர்வை மற்றும் சிறுநீர் மூலமாக வெளியேற்றுவதை ஊக்குவிக்கிறது. இதனாலும் ஆரோக்கியமான உடல் எடை இழப்பு உண்டாகிறது.

சளி தொல்லை மறைய

மிளகில் உள்ள எதிர்ப்பு சக்தியானது சுவாசப் பாதையில் உண்டாகும் சளி மற்றும் கபத்தினை உடைத்து எளிதாக வெளியேற்றுகிறது. ஆதலால்தான் ஆயுர்வேதத்தின் சளிக்கான மருந்துகளில் மிளகானது சேர்க்கப்படுகிறது. மேலும் இது சைனஸ் மற்றும் மூக்கடைப்பிற்கு சிறந்த நிவாரணமாகும்.

பாக்டீரியா எதிர்ப்பாற்றல்

மிளகின் பாக்டீரியா எதிர்ப்பாற்றல் நோய் தொற்று மற்றும் பூச்சி கடித்தலுக்கு எதிராக செயல்படுகிறது.

மிளகில் உள்ள பைப்பரின் நோய்களை உண்டாக்கும் பாக்டீரியாக்களை அழிக்கிறது. ஈறு அழற்சி, வாய் துர்நாற்றம், பற்சிதைவு உண்டாக்கும் பாக்டீரியாக்களின் செயல்பாட்டினை மிளகானது அழித்துவிடுகிறது.

நினைவு திறனை மேம்படுத்த

மிளகின் முக்கியப் பொருளான பைப்பரின் நினைவகக் குறைபாடு மற்றும் அறிவாற்றல் செயலிழப்பு ஆகியவற்றைக் குறைப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

மேலும் பைப்பரின் மூளையில் உள்ள வேதியியல் பாதைகளைத் தூண்டுகின்றன. அல்சைமர் எனப்படும் வயதானவர்களில் காணப்படும் நினைவகக் குறைபாடு உள்ளவர்களுக்கு இது தீர்வளிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

புற்றுநோயைத் தடுக்க

மிளகில் உள்ள ஆன்டிஆக்ஸிஜென்ட்டுகள் புற்றுச்செல்கள் உருவாக்கத்தைத் தடுக்கவும், ப்ரீ ரேடிக்கல்களின் செயல்பாடுகளினால் பாதிக்கப்பட்ட புற்றுச்செல்களைப் பாதுகாக்கவும் மிளகில் உள்ள பைப்பரின் உதவுகிறது.

இது குடல், இரைப்பை, மார்பகம் உள்ளிட்ட இடங்களில் புற்றுநோய் உருவாக்கத்தைத் தடைசெய்கிறது.

மிளகினை வாங்கும் முறை

மிளகானது ஆண்டு முழுவதும் கிடைக்கும் பொருளாகும். மிளகுப்பொடிக்குப் பதிலாக முழு மிளகினை வாங்குவதே சிறந்தது.

விலையுர்ந்த பொருளான இதில் அதிகமான கலப்படம் உள்ளது. எனவே இதனை வாங்கும் போது கவனம் தேவை.

மிளகினை வாங்கும்போது ஒரே சீரான நிறம் மற்றும் அளவுடன் வட்டமானதாகவும், கனமானதாகவும் இருப்பதைத் தேர்வு செய்யவும்.

அறையின் வெப்பநிலையில் இதனை பாதுகாப்பாக வைத்து ஆண்டுக்கணக்காக பயன்படுத்தலாம்.

மிளகுப் பொடி தயார் செய்யும் போது தேவைக்கு தகுந்தாற் போல் அவ்வப்போது தயார் செய்வது சிறந்தது. இல்லையெனில் மிளகின் மணமும், சுவையும் மாறுபட்டுவிடும்.

பொதுவாக மிளகினைப் பொடி செய்து உணவு தயாரிப்பின் இறுதியில் சேர்ப்பர்.

இது சாலட், சூப், பொடிகள் தயாரிப்பு (இட்லி பொடி, கரம் மசாலா பொடி), மிட்டாய்கள், பிஸ்கட், கேக்குகள், சாஸ், ஊறுகாய் போன்றவற்றில் பயன்படுத்தப்படுகிறது.

மிளகு என்னும் மசாலா அரசன் உணவிற்கு சுவையை அளிப்பதோடு மருத்துவப் பண்புகளையும் கொண்டுள்ளதால் அடிக்கடி அளவோடு உணவில் சேர்த்து வளமான வாழ்வு வாழ்வோம்.

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.