மிளகு தக்காளி கீரை சத்து மிகுந்த உணவாகும். இது மழைக் காலத்தில் அதிகளவு கிடைக்கக் கூடிய உணவுப் பொருளாகும்.
இக்கீரையைக் கொண்டு மசியல், பொரியல் போன்றவற்றைச் செய்யலாம். இனி சுவையான மிளகு தக்காளி / மணத்தக்காளி கீரை பொரியல் செய்வது பற்றிப் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
மிளகு தக்காளி கீரை – 1 கட்டு
உப்பு – தேவையான அளவு
மஞ்சள் பொடி – 2 ஸ்பூன்
பாசிப் பருப்பு – 20 கிராம்
தேங்காய் – ¼ மூடி
சீரகம் – ½ ஸ்பூன்
தாளிக்க
சின்ன வெங்காயம் – 3 எண்ணம் (நடுத்தர அளவு)
கறிவேப்பிலை – 3 கீற்று
உளுந்தம் பருப்பு – 2 ஸ்பூன்
கடுகு – ¼ ஸ்பூன்
மிளகாய் வற்றல் – 2 எண்ணம் (நடுத்தர அளவு)
நல்ல எண்ணெய் – 3 ஸ்பூன்
மிளகு தக்காளி / மணத்தக்காளி கீரை பொரியல் செய்முறை
முதலில் மிளகு தக்காளி கீரையை தண்டினை விட்டு பிய்த்து விடவும். பின்னர் அதனைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
சின்ன வெங்காயத்தை தோலுரித்து சதுரங்களாக நறுக்கிக் கொள்ளவும்.
கறிவேப்பிலையை அலசி உருவிக் கொள்ளவும்.
தேங்காயைத் துருவிக் கொள்ளவும்.
நறுக்கிய கீரையை மஞ்சள் பொடி சேர்த்த தண்ணீரில் 2 நிமிடங்கள் மூழ்க வைக்கவும்.
பின்னர் கீரையைத் தனியே தண்ணீர் வடிதட்டில் போட்டு தண்ணீரை வடிய விடவும்.
ஒரு பாத்திரத்தில் பாசிப் பருப்பினை மூழ்குமளவு தண்ணீரில் போட்டு அடுப்பில் வைக்கவும்.
தண்ணீர் கொதித்ததும் அடுப்பிலிருந்து பருப்பினை இறக்கி மூடி தனியே வைக்கவும்.
வாணலியில் நல்ல எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதனுடன் சதுரமாக்கிய சின்ன வெங்காயம், கடுகு, கறிவேப்பிலை, உளுந்தம் பருப்பு, கடுகு, மிளகாய் வற்றல் சேர்த்து தாளிதம் செய்யவும்.
பின்னர் அதனுடன் அலசிய கீரை, சீரகம், தேவையான உப்பு ஆகியவற்றைச் சேர்த்து வதக்கவும்.
கீரை முக்கால் பாகம் வெந்ததும் அதனுடன் (பாசிப் பருப்பில் உள்ள நீரினை வடித்து விட்டு) பாசிப் பருப்பினைச் சேர்க்கவும்.
இரண்டு நிமிடங்கள் கழித்து அடுப்பினை அணைத்து விடவும்.
துருவிய தேங்காயைச் சேர்த்து ஒரு சேர கிளறவும்.
சுவையான மிளகு தக்காளி / மணத்தக்காளி கீரை பொரியல் தயார்.
இதனை ரசம், சாம்பார் உள்ளிட்ட சாத வகைகளுடன் சேர்த்து உண்ணலாம்.
குறிப்பு
விருப்பமுள்ளவர்கள் மிளகாய் வற்றலுக்குப் பதில் பச்சை மிளகாயைப் பயன்படுத்தி பொரியல் தயார் செய்யலாம்.