மிளகு ரசம் செய்வது எப்படி?

மிளகு ரசம்

மிளகு ரசம் மருத்துவ குணம் நிறைந்த‌ உணவு. சைவப் பிரியர்களாக இருந்தாலும் சரி, அசைவப் பிரியர்களாக இருந்தாலும் சரி, ரசம் என்றால் அநேகப் பேருக்கு பிரியமே. ஜீரணத்திற்காக மட்டும் இந்த ரசத்தை கடைசியாக சாப்பிடுவது இல்லை.

ரசத்திற்கு உபயோகிக்கும் மிளகிற்கு விஷத்தை முறிக்கும் சக்தி உள்ளது. நாம் உண்ணும் உணவில் ஏதாவது உபாதை ஏற்படுவதாக இருந்தாலும் இந்த மிளகு அதை சரி செய்து விடுகிறது. இதனாலே நம் முன்னோர்கள் கடைசியாக மிளகு ரசம் சாப்பிடுமாறு கூறியுள்ளார்கள்.

திருமணமாகி புகுந்த வீட்டிற்கு வரும் புதுபெண்ணை முதலில் இனிப்பு செய்யச் சொல்வது வழக்கம். அதற்கு அடுத்தாக அவ்வீட்டில் உள்ள பெரியவர்கள் ரசம் வைக்கச் சொல்வார்களாம். ஏனெனில் ரசம் மட்டும் சுவையாக வைத்து விட்டால் அப்பெண்ணுக்கு நன்கு சமைக்கத் தெரியும் என்று அர்த்தமாம். இவ்வாறு என் அம்மா கூறி கேள்விப்பட்டிருக்கிறேன்.

அப்படிப்பட்ட இந்த சுவையான மிளகு ரசம் செய்வது எப்படி என்று பார்போம்.

 

தேவையான பொருட்கள்:

புளி : சிறிய எலுமிச்சை அளவு

தக்காளி : 3

மிளகு : 1 ஸ்பூன்

சீரகம் : 1/2 ஸ்பூன்

பூண்டு : 8 பல் (சிறியது)

கருவேப்பிலை : 2 கீற்று

கொத்தமல்லி இலை : சிறு கைபிடி அளவு

 

தாளிக்க:

கடுகு : ¼ டீஸ்பூன்

சீரகம் : ¼ டீஸ்பூன்

வெந்தயம் : ¼ டீஸ்பூன்

பெருங்காயம் : சிறிதளவு

நல்லெண்ணெய் : தேவைக்கு

உப்பு : தேவைக்கு

 

செய்முறை:

முதலில் படத்தில் காட்டிய படி, புளியை தேவையான தண்ணீர் சேர்த்து கரைத்துக் கொள்ளவும். தக்காளியை விழுதாக அரைத்துக் கொள்ளவும். கொத்தமல்லி இலையை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

 

மிளகு சீரகக் கலவை, தக்காளி, புளிக் கரைசல், கொத்தமல்லி இலை
மிளகு சீரகக் கலவை, தக்காளி, புளிக் கரைசல், கொத்தமல்லி இலை

 

மிக்ஸியில் முதலில் மிளகு, சீரகத்தை நன்கு பொடித்துக் கொள்ளவும். அதனுடன் பூண்டு, கருவேப்பிலை சேர்த்து அரைத்துக் கொள்ளவும். புளிக் கரைசல், அரைத்த தக்காளி விழுது, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை இவை மூன்றையும் ஒன்றாக கலந்து தேவையான தண்ணீர் சேர்த்து வைத்துக் கொள்ளவும.

வாணலியில் நல்லெண்ணெய் விட்டுக் காய்ந்ததும் கடுகு, சீரகம், வெந்தயம் இவற்றை ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்த்து தாளிக்கவும். தணலைக் குறைத்த விட்டு அதனோடு அரைத்த மிளகு சீரகக் கலவையை சேர்த்து ½ நிமிடம் வதக்கி பெருங்காயத்தூள் சேர்க்கவும்.

 

மிளகு ரசம்
மிளகு ரசம்

 

கடைசியாக புளி, தக்காளி மற்றும் கொத்தமல்லி இலை கலந்த கலவையை ஊற்றி, உப்பு சேர்க்கவும். தணலைக் கூட்டி வைக்கவும். ரசம் நுரை கூடியதும் பாத்திரத்தில் மூடி விடவும். சுவையான மிளகு ரசம் தயார்.

குறிப்பு: புளியின் அளவு மிகவும் கூடியோ, குறைந்தோ இருந்தால் ரசம் நன்றாக இருக்காது.

இப்பொழுது கடைகளில் ரசப் பொடி கிடைக்கின்றது. மிளகு, சீரகம் மட்டும் அரைக்காமல் அதற்குப் பதில் இந்த ரசப்பொடி 2 ஸ்பூன் சேர்த்துத் தாளிக்க வேறு சுவையுடன் அருமையாக இருக்கும்.

இதே ரசத்தில் புளிப்புச் சுவையை சிறிது அதிகப்படுத்திக் கொண்டு அதோடு வேக வைத்து மசித்த துவரம் பருப்பை ஒரு கைபிடி அளவு சேர்க்க பருப்பு ரசம் தயார்.

பிரதிபா செந்தில்

 

Comments

“மிளகு ரசம் செய்வது எப்படி?” மீது ஒரு மறுமொழி

  1. […] என்றால் அவர்களைக் கவனித்து கொள்வது, ரசம் வைத்துத் தருவது, அவர்கள் துணிகளை […]