மனிதி!
மறைந்தும் மறைத்தும் மறந்தும் வாழ்ந்தது போதும்!
மனதை லேசாக்கு
பார்ப்பவன் பார்த்துக் கொண்டே இருப்பான்
படைப்பவன் படைத்துக் கொண்டே இருப்பான்
நீ யாராக இருக்க எண்ணுகிறாயோ இக்கணமே முடிவெடு
உனது சுதந்திரத்தை ஒருவனிடம் ஒப்படைத்து விட்டு
அனுதினமும் யாசித்துக் கொண்டே வாழ்ந்திட
முடிவெடுத்து விட்டாயோ?
அவனிடம் நீ நீயாக இல்லாத போது புரிந்து கொள்
நீ எப்பொழுதோ அடிமையாகி விட்டாய் என்பதை!
உனது ஆடையிலும் தோற்றத்திலும் ஒழுக்கத்தினை
தேடும் இச்சமூகத்திற்கு
உனது எண்ணங்களில் உள்ள ஒழுக்கம் புரியவா போகிறது?
குடிகாரனுக்கு அடிமையாய் வாழ்வதை விட
குழந்தைக்காகக் கூலியாய் வாழ்ந்து விடு
உனது கனவு எதுவாயினும் முனைப்போடு போராடு
வெற்றி பெற வலிமைதான் தேவை துணை தேவை இல்லை
இழந்ததை எண்ணி இருப்பதைத் தொலைத்து விடாதே
துணிந்து வா துயரங்கள் தூள் தூளாய் சிதறி விடும்
விமர்சனங்களை மட்டும் கூறும் சமூகமிது
அதைக் கேட்டு வெற்றியை தொலைதூரம் ஆக்குவதும்
செவி சாய்க்காமல் வெற்றி பெறுவதும் உன் முடிவே
பெண் முற்றுப்புள்ளியாக வாழ்கிறாள்
கேள்விக்குறியாக மாறினால்
யாருக்கும் பதில் கிடைக்காது
தாலி சூடிய பெண்ணே!
உனது தாலிக் கயிறு கணவன் என்னும்
புது உறவை இணைக்கத் தானே தவிர
உனது ஆசைகளையும் கனவுகளையும் தொலைக்க அல்ல
உனக்கான மரியாதையையும் அங்கீகாரத்தையும்
நீ தான் உருவாக்க வேண்டும்
வீட்டினுள் அடிமையாக மட்டும் இருந்து விடாதே
உனது சுயசம்பாத்தியம் தரும் தைரியம்
வேறு யாராலும் தர முடியாதது
கல்லூரிக் கண்மணிகளே!
சாதிக்க வேண்டிய காலம் இது
தூண்டிலில் மாட்டிக் கொள்ளும் மீனாக
தயவு செய்து இருந்து விடாதீர்
வலையினை விழுங்கும் திமிங்கலமாக இருப்பீர்!
காதல் என்பது
வரமா சாபமா? என்ற
விடை தெரியாத கேள்வி
பெற்றோர்களே!
பெண்களுக்குக் கூறிய அறிவுரை
இன்னும் 100 ஆண்டுகளுக்குப் போதுமானது!
இனி ஆணுக்கு அறிவுரை கூறி வளருங்கள்
பெண்களைத் தவறான கண்ணோட்டத்துடன்
பார்க்காதே! எண்ணாதே என்று!
மு.சீத்தாலட்சுமி