“ஏடி ஜீனத்து! அவிக இன்னும் பின்னாடியே வாராகளா; பாரும்!” என்று பதைபதைத்தாள் ஆயிஷா.
“ஆமாடீ! ரோமியோ கணக்கா கூட்டாளிகளோட வாராகல. அன்னைக்குகூட நம்ம நரியண்ணே கடையில சிகரெட் ஊதிட்டு உனக்கு வெயிட்டிங்காம்ல, சரசுக்கா ஜாக்கிட்டு வாங்க போவயில சொன்னாவ.” என்றாள் ஜீனத்.
“நெசமாவால சொல்லுத?”
“இந்த மக்கு ஆயிஷாக்கு அல்லாஹ் கண்ண தொறக்க வழி காட்டும் நாகூர் ஆண்டவா!”
“இந்த திட்டாஞ்சேரி மாவனத்துலயே ஆயிஷாவிட அழகு உண்டோ?, உம்ம பருதாவ தாண்டி பாத்துருக்கான் புள்ள, இல்ல தனியா அழைசிட்டு போயி சிபெஷல் ஷோ காட்டினியோ? அந்த நாகூரான் தான் பொறுப்பு”
“ஹான்! காட்டு தாங்க நீ வேற ட்டீ! வாப்பா பொளந்துருவாக”
“வாப்பாக்கு பயப்படுர புள்ளைய பாரும், நீ நடத்து புள்ள!”
திட்டாஞ்சேரி நாகப்பட்டினம் மாவட்டத்தில் சந்தனகூடு கந்தூரி திருவிழா நடைபெற இன்னும் பதினெட்டு மணி நேரமே உள்ளது.
ஆயிஷாவும் ஜீனத்தும் கல்லூரி இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறார்கள். தாங்கள் பயணிக்கும் பேருந்தில் மூன்று மாதங்களாக மரக்கடை அப்பாஸ்பாயின் மகன் சையது தன்னை பின் தொடர்வதை உணர்ந்தாள் ஆயிஷா.
பெரிதும் அலட்டிக் கொள்ளாமல் அதை மர்மமாக ரசிக்கவும் தன் தோழி ஜீனத்துடன் பகிரவும் செய்தாள்.
அன்று சாயங்காலம் திருவிழா தொடங்க உள்ளது. ஆயிஷா வேகமாக குளித்து விட்டு தன் வெளிறிய முகத்தில் மேலும் பவுடர் பூசிக்கொண்டு, மீன் விழிகளில் மையிட்டு புறப்பட்டாள்.
ஆயிஷாவை சுற்றாத இளவட்டம் இல்லை. உண்மையில் ஜீனத் கூறியதை போல் திட்டாஞ்சேரியில் அன்றைய உலக அழகி ஆயிஷா தான்.
நேர் முகம், மெல்லிய உடலமைப்பு, அத்தி பூத்தார் போல் என்றாவது முகத்திரை விலகினால் பேருந்து லவ்வர்களுக்கு தரிசனம்.
“ஏட்டி ஜீனத்து வாரும்! ஜிமிக்கி வாங்குவோம்.”
“எனக்கு எதுக்கு ட்டீ! ஜிமிக்கி குமுக்கிலாம். அதெல்லா உன்னைய மாதிரி அழகா இருக்கவக போடுதது, இந்த கரிவண்டு எத போட்டா என்ன? நான்லாம் திருவிழாவுல பருதாவ கழட்ட மாட்டே பாத்துக்க”
“ஏட்டி நாம போட வேணாம்னு தான பேசிணோம்? இப்போம் என்ன மாத்துத?”
“நீ சையதுக்கு உன் திருமுகத்த காட்ட போகுத, நான் எதுக்கு பன்னி கணக்கா? திருஷ்டி பொம்ம மாதிரி?”
பலமாக சிரித்தாள் ஆயிஷா.
“நீ சரியான ஜோக்கு தான் புள்ள!”
“சிரிலா சிரி! எனக்கும் ஒரு ரோமியோ நாகூரான் அனுப்புவான். கேட்டுச்சா?”
சிரித்துக்கொண்டே இருக்கையில் எதிரே சாடரென்று சையது நின்றான்.
மீன்விழி கண்கள் சிரிப்பிலிருந்து ஆச்சரியத்துக்கு மாறியது. அந்த மாற்றத்தின் போது ஆயிஷாவின் கண்களை பார்த்தால் அந்த நொடி மீண்டும் எப்பொழுது வரும் என்று தோன்றும் அளவுக்கு அழகு.
ஆயிஷா உண்மையில் தேவதை தான்.
“ஜீனத்து கொஞ்சம் அங்கிட்டு போ நான் கூப்பிடுத” என்றாள் ஆயிஷா
“ஹூம்! நடத்துங்க வே” என்று விலகினாள் ஜீனத்.
“ஊங்கிட்ட தனியா பேசனும்னு இருந்துச்சு. அதான் ரெம்ப நாளா பின்னாடியா சுத்திட்டு கிடந்தேன்” என்றான் சையது.
தரையில் கரண்டு பாய்வதை போல் கால் தரையில் இல்லாமல் துடித்தான் சையது.
“இருங்கோ. நம்ம பெரிய பள்ளிவாசல் பின்னாடி ஓரு வளவிக் கட இருக்குல்ல?”
“ஆமா”
“என் ஸ்நேகிதி கட தான், அங்குட்டு வாரும் அஞ்சு மணி போலும்.”
“சரி” என்று சென்றான் சையத்.
மூன்று மணியிலிருந்து நான்கு மணி வரை குளித்து விட்டு, ஊத் அக்தர் பூசிக்கொண்டு மணக்க மணக்க பள்ளி வாசல் முன்னால் ஆஜர் ஆனாள் ஆயிஷா, ஜீனத்துடன்.
சையது, தன் வழக்கமான கண்ணாடியுடன் யாரோ சொன்னது போல் ‘அஜித்குமார்’ போல் இருந்தான்.
இப்பொழுது கரண்ட் ஆயிஷா கால்களுக்கு போனது. சையத், ஆயிஷா மீன்விழிகளைப் பார்த்தான்.
“ஜீனத்து அங்கிட்டு போல கூப்பிடுதே”
“சரி புள்ள”
“ஆயிஷா உம்மக்கிட்ட ஒன்னு கேக்கணோ..”
“ஹூம்!” என்று வெட்டப்பட்டுக் கொண்டு மீன்விழிகள் தரைதொட்டன.
“வாப்பா கிட்ட சொல்லிடாதியும். நான் என்ன சொல்லுதனோ அதான் சட்டம்”
“ஓகோ! அதில்ல எனக்கு, எனக்கு ஜீனத்த ரொம்ப பிடிச்சிருக்கு ரொம்ப நாளா. எப்படியாச்சு நீர் தாம் எம்ம சேத்து வெக்கனும். இந்த வெள்ளி கொலுச அவகிட்ட கொடுத்துடுங்க. வரேன்” என்று விரைந்தான் சையத்.
மீன்விழி கரை ஒதுங்கியது.
ஜீனத்து வந்தாள் –
“என்ன புள்ள ஆச்சு?”
“……”
“ஏட்டி சொல்லு. கேக்குதேம்ல!”
“ஒன்னும் இல்ல ட்டீ! அவன் ஒரு பொம்பள பொறுக்கி. இனிமே அவன் பக்கம் திரும்பாத. கேட்டுச்சா? நம்ம உண்டு நம்ம சோலி உண்டு. வா கடைக்கு போவோம்”
“அப்பிடியா சொல்லுதே! நாகூரான்…”
கொலுசைப் பக்கத்துச் சாக்கடையில் தூக்கி எறிந்து விட்டு சென்றாள் ஆயிஷா.
க.சஞ்ஜெய்
சென்னை
கைபேசி: 7904308768