மீன் இனத்தில் பெற்றோர் பாதுகாப்பு என்பது முட்டைகளும், இளம் உயிரிகளும் பெற்றோர்களால் பராமரிக்கப்படுவதைக் குறிக்கிறது.
பெற்றோர் பாதுகாப்பு என்பது பாலூட்டி இனத்திற்கே உரிய சிறப்பான பண்பு ஆகும்.
பறவைகள் தமது குஞ்சுகளைக் குறிப்பிட்ட காலம்வரை பராமரிக்கின்றன.
மீன் இனங்களில் சந்ததி பராமரிப்பு பல்வேறு முறைகளில் நடைபெறுகிறது.
சில இன மீன்கள் குறைந்த எண்ணிக்கையில் முட்டைகளை இடுகின்றன. இவை தம் முட்டைகள் அழிந்து விடாமல் பேணி குஞ்சுகளைப் பொரிக்கச் செய்கின்றன.
சில மீன்கள் கூடுகட்டி முட்டையிட்டுப் பாதுகாக்கின்றன.
வேறு சில மீன்கள் தமது முட்டைகளை வாய்க்குழியில் அடைகாத்துப் பாதுகாக்கின்றன.
சில மீன்கள் நீர்பரப்பில் நீர்குமிழிகளை ஏற்படுத்தி முட்டைகளைப் பாதுகாக்கின்றன.
கௌராமி மீன், கறி மீன், ஆப்பிரிக்க நுரையீரல் மீன், ஸ்டிக்கிள்பேக், நன்னீர் கெளுத்தி ஆகிய மீன் இனங்கள் கூடு கட்டுகின்றன.
மீன் இனத்தில் பெற்றோர் பாதுகாப்பு முறைகள் பற்றி விரிவாகக் காண்போம்.
கௌராமி மீன்
கௌராமி மீன் அலங்கார மீன்களில் ஒன்று. இது குளத்தின் கரை ஓரம் வந்து, அரை மீட்டர் ஆழத்தில் ஓர் இடத்தைத் தேர்ந்தெடுக்கிறது.
புல், இலை, களிமண் ஆகியவற்றை வாய்குழியில் சேகரித்து வந்து ஒரு தாவரத் தண்டுடன் இணைத்து, 10 முதல் 15 நாள்களில் கோளவடிவில் கூடுகட்டுகின்றது.
இக்கூட்டினுள் பெண்மீன் முட்டைகளை இட, ஆண்மீன் அவற்றைக் கருவுறச் செய்கிறது. பிறகு புற்களை எடுத்து முட்டைகளை மூடிப் பாதுகாக்கிறது.
மூன்று நாட்கள்வரை தன் வாலினால் நீரைச் சிதறடித்துக் கருவை வளர்க்கிறது. குஞ்சுகள் வெளிவந்த பிறகு மூன்று வாரங்கள்வரை பெற்றோரால் பாதுகாக்கப்படுகின்றன.
ஸ்டிக்கிள் பேக்
ஸ்டிக்கிள் பேக் என்னும் முதுகுஒட்டி இனத்தில் பெற்றோர் பாதுகாப்பு புதுமையானது. இவ்வினத்தில் ஆண்மீன்களே குஞ்சுகளைப் பேணிப் பாதுகாக்கின்றன.
ஆண்மீன் தகுந்த இடத்தில் ஒரு குழியை உண்டாக்குகிறது. பாசி அல்லது தாவரத் தண்டுகளால் அப்பரப்பை நிரப்புகிறது.
தன் சிறுநீரகத்திலிருந்து சுரக்கும் மெல்லிழைகளால் கூட்டிலுள்ள தாவரத் தண்டுகளை இணைக்கிறது.
பெண்மீன் இட்ட முட்டைகளை ஆண்மீன் கருவுறச் செய்கிறது.
குஞ்சுகள் கூட்டத்திலிருந்து விலகிச் செல்லும்போது ஆண்மீன் வாயினால் கவ்வி கூட்டத்தோடு சேர்க்கிறது.
நன்னீர் சன்பிஷ்
நன்னீர் சன்பிஷ் சென்ட்ரார்க்கிடே குடும்பத்தைச் சார்ந்தது. இவ்வகை ஆண்மீன் நீரடி நிலப்பரப்பிலுள்ள கூழாங்கற்களைத் தாடையினால் நகர்த்தி மணல் பரப்பில் குழி ஒன்றை ஏற்படுத்துகிறது.
குழியின் பரப்பினைச் சிறிய கற்கள், நுண்மணல் கலந்த கலவையினால் மென்மையாக்குகிறது.
அக்குழியில் பெண்மீன்கள் இடும் முட்டைகளைக் குஞ்சு பொரிக்கும்வரை ஆண்மீன் பாதுகாக்கிறது.
கறிமீன்
கறிமீன் பொதுவாக ‘பியர்ல் ஸ்பாட்’ என அழைக்கப்படுகிறது. இந்த மீன்வகையில் ஆண், பெண் மீன்கள் இணைந்து நீரின் அடி நிலப்பரப்பில் தாடைகளினால் கிண்ணவடிவில் குழியை ஏற்படுத்துகின்றன. முட்டையின் கருவைப் பெண்மீன் வளர்ச்சியடையச் செய்கிறது.
பீட்டா மீன்
சண்டையிடும் பீட்டா மீன், மேக்ரா போடஸ் மீன் இனங்கள் நீர்க்குமிழிகளால் கூடுகட்டி அதில் முட்டையிட்டு பாதுகாக்கின்றன.
கூடு கட்டும் பணியில் ஈடுபடும் ஆண்மீன் நீர்குமிழிகளையும், பசை போன்ற திரவத்தையும் வாய் வழியே மேல்நோக்கி வெளியேவிட்டு நீர்குமிழியிலான கூட்டை ஏற்படுத்துகிறது.
பின்பு பெண்மீனை முட்டையிடச் செய்து அம்முட்டைகளை தன் வாயில் சேகரித்து நீர்க்குமிழிக் கூட்டில் ஒட்ட வைக்கிறது.
முட்டைகளில் ஒன்று விலகினாலும் ஆண்மீன் விரைந்து வாயில் கவ்வி, கூட்டினுள் சேர்க்கிறது.
மேக்ரோ போடாஸில் ஆண், பெண் இரண்டும் தங்கள் முட்டைகளைப் பேணிப் பாதுகாக்கின்றன.
திலாபியா மீன்
சிக்சிலிடே குடும்பத்தைச் சார்ந்த திலாபியா மீன் முட்டைகளையும் குஞ்சுகளையும் வாயில் வைத்தே அடைகாக்கிறது.
இனப்பெருக்க காலத்தில் ஆணும் பெண்ணும் தரையில் ஒரு குழியை ஏற்படுத்தி, பெண் மீன் முட்டையிட ஆண்மீன் கருவுறச் செய்கிறது.
கருவுற்ற முட்டைகளைப் பெண்மீன் வாய்குழியில் வைத்துப் பாதுகாக்கிறது. மூன்று முதல் ஐந்து நாட்களுக்குள் குஞ்சு வெளிவந்த பின்னரும், தாயின் வாயிலேயே 10 முதல் 15 நாட்கள்வரை தங்குகின்றன.
முட்டைகளையும், குஞ்சுகளையும் வாயில் வைத்திருக்கும்போது தாய்மீன் உணவு உட்கொள்ளாது. குஞ்சுகளுக்கு ஆபத்து நேர்ந்தால் பெண்மீன் விரைந்து குஞ்சுகள் அனைத்தையும் வாய்க்குள் ஏற்றுக் காப்பாற்றுகிறது.
கடற்குதிரை
கடற்குதிரை, குழல்மீன்கள் தங்களது முட்டைகளையும் குஞ்சுகளையும் கங்காரு போல் அடிவயிற்றிலுள்ள பை போன்ற அமைப்பில் வைத்து பாதுகாக்கின்றன.
இனப்பெருக்க காலத்தில் ஆண் கடற்குதிரையின் அடிவயிற்றுப்பை தடித்து இரத்த செறிவு மிக்க பகுதியாகக் காணப்படும். இப்பையினுள் பெண் முட்டையிட்ட பின்னர் கருவுறுதல் நடைபெறுகிறது.
முட்டையிலிருந்து குஞ்சு வெளிவரும்வரை அடிவயிற்றுப் பையில் வைத்துப் பாதுகாக்கப்படுகிறது.
முழுவளர்ச்சி பெற்றபின் இளம் உயிரிகள் பையில் தோன்றும் நுண்துளை வழியே வெளியேறுகின்றன.
ஆண் குழல்மீனும் கடற்குதிரை போலவே வயிற்றுப்பையில் முட்டைகளைச் சுமக்கின்றது.
பிட்டர்லின் மீன்
சிப்பிரினிடே என்னும் குடும்பத்தின்கீழ் வரும் பிட்டர்லின் மீன் மத்திய ஐரோப்பா பகுதியில் காணப்படுகின்றது.
இவற்றில் இனப்பெருக்கத்தின்போது பெண்மீனின் அண்டத்தில் இருந்து நீண்ட குழல் உருவாகி அதன் வழியே முட்டைகள் உயிருள்ள நன்னீர் ஆளியின் சிப்பியினுள் இடப்படுகிறது.
சிப்பிகளில் இடப்பட்ட முட்டைகளை ஆண்மீன் கருவுறச் செய்கிறது. முட்டை கருவளர்ச்சிக்குத் தேவையான காற்றை நன்னீர் ஆளியின் செயல் மூலம் பெறுகிறது. (உணவு உட்கொள்ளும் பேர்தும், சுவாசிக்கும் போதும், நீரினை தன் சிப்பிக்குள் உறிஞ்சும்போதும்).
நன்னீர் ஆளி தன்னுள் இருக்கும் கருவை நீரில் மிதக்க விடுகிறது. இந்தக் கருக்கள் இவ்வகை மீன்களின் செவுள்களில் தங்கி ஆரம்பகால வளர்ச்சியைப் பெறுகின்றன. இவ்வாறு இவை ஒன்றுக்கொன்று உதவுவதன் மூலம் பெற்றோர் பாதுகாப்பினைப் பேணுகின்றன.
பட்டர் மீன்
25 செமீ நீளம் உடைய பட்டர் மீன் வெற்றுச் சிப்பியிலோ, பாறைக் குழிகளிலோ தங்கி முட்டைகளை இடுகின்றது.
மீண்டும் அம்முட்டைகள் எல்லாம் சேர்த்து பந்து வடிவ அமைப்பை உருவாக்குகிறது. அவற்றைச் சுற்றித் தன் உடலைச் சுருள்வில்போல் அமைத்துப் பாதுகாக்கிறது. இவ்வினத்தில் ஆண்மீனும் பெண்மீனும் மாறி மாறித் தம் முட்டைகளைப் பாதுகாக்கின்றன.
மீன் இனத்தில் பெற்றோர் பாதுகாப்பு முறைகள் மனித இனத்திற்கே சிறந்த வழிகாட்டியாக அமைகின்றன.