மீன் குழம்பு அசைவ சமையலில் முக்கியமானது. அசைவ பிரியர்களுக்கு மீன் ஒரு வரப்பிரசாதம் என்றே கூறலாம்.
ஏனெனில் மீனில் உள்ள ஒமேகா அமிலம் வேறு எந்த மாமிசத்திலும் கிடையாது. கூடவே மீன் நல்ல கொழுப்புச் சத்தும் உடையது.
சரி, இனி சுவையான மீன்குழம்பு எவ்வாறு செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
மீன் – 1 கிலோ
புளி – எலுமிச்சை அளவு
சின்ன வெங்காயம் – ஒரு கையளவு
சீரகம் – 2 ஸ்பூன்
மிளகாய் வற்றல் – 9
தேங்காய் துருவல் – 6 ஸ்பூன்
மஞ்சள் – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
நல்லெண்ணெய் – தேவையான அளவு
பச்சை மிளகாய் – 2 (தேவைப்பட்டால்)
மீன் குழம்பு செய்முறை
முதலில் எலுமிச்சை அளவு புளியைக் கரைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.
ஒரு கையளவு வெங்காயத்தை ஒன்றுக்குப் பாதியாக அரைத்துக் கொள்ளவும்.
மசாலா தயார் செய்வதற்கு ஒரு சிறிய கடாயில் 3 ஸ்பூன் எண்ணெய் விட்டு 2 ஸ்பூன் சீரகம், 9 காய்ந்த மிளகாய் வற்றல், 6 ஸ்பூன் தேங்காய் துருவல் இவற்றை ஒன்றன் பின் ஒன்றாக சேர்க்கவும்.
மிதமான தீயில் நன்கு வறுத்து ஆறியதும் மைய அரைத்து எடுத்துக் கொள்ளவும். (பார்க்க படம்-1).

உங்களுக்கு பிடித்த மீனை வாங்கி, நன்கு கழுவிக் கொள்ளவும்.
கடைசியாக மஞ்சள், உப்பு சேர்த்த தண்ணீரில், மீனை அலசி எடுத்துக் கொள்ளவும்.
அடி கனமான பாத்திரத்தில் மசாலா, புளிக்கரைசல், அரைத்த வெங்காயம் இவை அனைத்தையும் போட்டு நன்கு கலக்கி, தேவைக்கு ஏற்ப உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
நன்கு கொதித்து வரும்போது, ஒரு குழிக் கரண்டி அளவு நல்லெண்ணெய்யைச் சேர்க்கவும்.
இந்த நேரத்தில் உப்பு சரிபார்த்து, தேவைப்பட்டால் 2-3 பச்சை மிளகாயை நீளவாக்கில் அரிந்தும் சேர்க்கலாம்.
கடைசியாக கழுவிய மீனை சேர்த்து, மிதமான தீயில் 10 முதல் 15 நிமிடங்கள் கொதித்த உடன் இறக்கவும்.
சுவையான மீன் குழம்பு தயார்.

குறிப்பு
மீன் குழம்பிற்கு பொதுவாக, செதில் மற்றும் நடுமுள் உள்ள கடல் மீன் சுவையாக இருக்கும்.
முக்கியமாக மீன் குழம்பினைச் செய்யும்போது, அதிக நேரம் கொதிக்க வைத்தால் மீன் குழம்பின் சுவை குறைந்து விடும்.