எங்கள் ஊர் தெருவோரக் கடைகளில் மீல்மேக்கரை மாலை நேர ஸ்நாக்ஸாக செய்து விற்பனை செய்வதுண்டு. இதனை தனியாகவும் சாப்பிடலாம் அல்லது சப்பாத்தி, பூரி போன்றவற்றுடன் இணைத்தும் சாப்பிடலாம்.
வீட்டில் எளிய முறையில் மீல்மேக்கர் ஸ்நாக்ஸ் செய்வது பற்றிப் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
மீல்மேக்கர் – 200 கிராம்
சின்ன வெங்காயம் – 25 கிராம்
உப்பு – தேவையான அளவு
மசால் செய்ய
மல்லிப் பொடி – 1 ½ ஸ்பூன்
சீரகப் பொடி – ¾ஸ்பூன்
வத்தல் பொடி – ¾ ஸ்பூன்
கரம் மசாலா பொடி – 1 ஸ்பூன்
மஞ்சள் பொடி – சிறிதளவு
தேங்காய் – ¼ மூடி (நடுத்தரமானது)
தாளிக்க
கடுகு – ½ ஸ்பூன்
கருவேப்பிலை – ஒரு கொத்து
நல்ல எண்ணெய் – 5 ஸ்பூன்
செய்முறை
முதலில் மீல்மேக்கர் நன்கு மூழ்குமளவு தண்ணீரை எடுத்து கொள்ளவும். அதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க வைத்துக் கொள்ளவும். மீல்மேக்கரை கொதித்த நீரில் போட்டு மூடி வைக்கவும். மீல்மேக்கர் நன்கு கொதிநீரில் ஊறிவிடும்.
ஐந்து நிமிடம் கழித்து மீல்மேக்கரை குளிர்ந்த நீரில் போடவும். பின் இரண்டு முதல் மூன்று நிமிடங்கள் கழித்து மீல்மேக்கரை நன்கு பிழிந்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
சின்ன வெங்காயத்தை சுத்தம் செய்து நேராக வெட்டிக் கொள்ளவும். தேங்காயைத் துருவிக் கொள்ளவும். பின் மல்லிப்பொடி, சீரகப்பொடி, வத்தல்பொடி, மஞ்சள்பொடி, கரம்மசாலாபொடி, துருவிய தேங்காய், தேவையான தண்ணீர் ஆகியவற்றைச் சேர்த்து மிக்ஸியில் மசாலா தயார் செய்து கொள்ளவும்.
பின் அடுப்பில் பாத்திரத்தை வைத்து ஐந்து ஸ்பூன் நல்ல எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ளவும். அதனுடன் நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்கு வதங்கியதும் மசால் கலவை, தேவையான உப்பு ஆகியவற்றைச் சேர்த்து கொதிக்க விடவும்.
மசால் வாடை போய் கலவை சுண்டி வரும் போது மீல்மேக்கரைச் சேர்த்து நன்கு கிளறவும்.
நன்கு கெட்டியானதும் அடுப்பை அணைக்கவும். சுவையான மீல்மேக்கர் தயார்.
இதனை சப்பாத்திகளில் உள்ளே வைத்து ரோல் செய்து சாப்பிட சுவையாக இருக்கும். பயணங்களின் போது ரோல் பண்ணி எளிதாக கொண்டு போகலாம்.
குறிப்பு
மீல்மேக்கர் ஸ்நாக்ஸ் தயார் செய்ய அளவில் சிறிய மீல்மேக்கரைத் தேர்வு செய்யவும்.
விருப்பம் உள்ளவர்கள் மல்லி இலையை பொடியாக நறுக்கி இறக்கும் போது தூவலாம்.
விருப்பமுள்ளவர்கள் மல்லிப் பொடி, மிளகாய் பொடி, சீரகப் பொடி, மஞ்சள் பொடி ஆகியவற்றிற்கு பதிலாக 2¼ ஸ்பூன் மசாலா பொடி சேர்த்து மீல்மேக்கர் ஸ்நாக்ஸ் தயார் செய்யலாம்.
–ஜான்சிராணி வேலாயுதம்