கால் முளைத்த மாக்களுக்கும்
விரல் நுனியில் மைதீட்டி
பெரும்பான்மை எனதென்று
அரியணையை அலங்கரிப்பர்
இம்மாய மனிதர்…
கரை வேட்டிக் கூட்டமெல்லாம்
நரை மூப்பெய்தும் வரை
பொதுநலப் போர்வையில்
சுயநல ஜீவனாய் வாழுகின்றார்…
இவர் ஒவ்வொருவரும் நிழலையே
சூறையாடும் நிழலுலக தாதா…
வீதியுலா வரும்பொழுது இவர்கள்
கொடுக்கும் வாக்குறுதியைக் கொடைவள்ளல்
எவரேனும் கேட்டிருந்தால் அன்றே
வெட்கி விண்ணுலகம் சென்றிருப்பர்…
இவர் கட்டிய வேட்டியின் கரையை நீக்கி
வயிறொட்டிய மக்களுக்கு
வரம்பின்றிக் கொடுக்கும்
கர்ணனைக் காட்டும் காலம் வருமோ?
அறமுரைக்கும் மறைநூலை
கரமேந்திக் கற்றுணர்ந்து
பதுக்கிய செல்வமனைத்தும்
பாக்கியின்றி ஒடுக்கிய மக்களுக்கு
பக்குவமாய்ப் பகிர்ந்தளிக்கும்
பிதாமகனைக் காண்போமோ?
வினை நுட்பமாய் நிகழ
மதியைச் செலவிட்டு சதியேதுமின்றி
நிதியைச் சேமித்து நியதியை
நிலைநாட்டும் ஏகனொருவனை
எக்கணம் காண்போமோ?
இதுவும் ஓர் மீவியல் புனைவே
நினைவுகள் அனைத்தும் நிஜமானால்
புனைவும் புதுயுகம் பெறும்!
க.வடிவேலு
ஆசிரியர் பயிற்றுநர்
காட்பாடி
6374836353
மறுமொழி இடவும்