முகக்கவசம் ‍- சிறுகதை

நான் வீட்டிற்கு நடந்து வந்து கொண்டிருக்கையில் சட்டென்று அவரைப் பார்த்த போது எனக்கு மிகவும் சங்கடமாகவும் பயமாகவும் இருந்தது. இது இரண்டாவது முறை, நான் அவரிடம் மாட்டிக் கொள்வது.

எதற்கெல்லாம் பயம் கொள்வது என்ற வரையறையே இல்லாது, போயும் போயும் இந்த பக்கத்து வீடு துக்காராம் அங்கிளுக்கு போய் பயப்பட வேண்டியதாய் போயிற்று. அதுவும் பெரிதாய் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு பெரிய காரணம் ஒன்றும் கிடையாது.

இன்றும் முகக் கவசத்தை மறந்து விட்டேன்; அவ்வளவு தான்.

அவ்வளவு தான் என்று நான் சாதரணமாக என்னும் அளவிற்கு அவர் எண்ண மாட்டார். போன முறையே கொரொனா நோய்த்தொற்று பற்றி அரை மணி நேரம் லெக்சர் எடுத்து என்னை வதைத்து விட்டார். இன்றும் அதே ஏகமங்களந்தான் என்று யூகித்து கொண்டேன்.

“ஹே தம்பி, என்னப்பா படிச்சவங்கோ தான நீங்க; மாஸ்க் போடாம வெளியவே வராதீங்கோ பா; ரொம்ப தப்பு பா” என்று அலுத்து முடித்து கொண்டு வேகமாய் கிளம்பி விட்டார். அவருக்கு ஏதோ அவசர வேலை போலும்.

அப்பாடா என்று ஆகி விட்டது எனக்கு. இன்று தப்பித்தேன். ஆனால் எனக்கு என்னவோ இந்த முகக்கவசம் போட்டுக் கொள்வது சிறை தண்டனை அனுபவிப்பது போல இருந்தது.

வியாதி வந்தாலும் வந்து தொலையட்டும்; நான் முகக்கவசம் போடுவதாய் இல்லை என்று சங்கற்பம் எடுத்துக் கொண்டிருந்தேன்.

இந்த சமயத்தில் என் அக்காவிடம் இருந்து எனக்கு ஃபோன் வந்தது. “டேய், மாமாவுக்கு ஒடம்பே சரியில்லடா, என்னாலயும் இந்த வயசான மாமியாரயும் ஒன்னர வயசு கொழந்தயயும் வெச்சிக்கிட்டு மாமாவ பாத்துக்கவே முடியல. ரொம்ப சோந்து சோந்து இருக்காங்க. மூச்சு விட கூட கஷ்டமா இருக்குனு சொல்றாங்க…. கொஞ்சம் நீயும் அம்மாவும் கெளம்பி இங்க வாங்கடா” என்று அழுது கொண்டே ஃபோனை வைத்தாள்.

பின்ன என்ன செய்வது? என் அக்காவின் வாழ்க்கை ஆயிற்றே; நாங்கள் சென்று தான் ஆக வேண்டும். மாமா ரொம்ப ஜாலியாக ஊரையே சுற்றி வருவார். இப்படி படுத்துக் கொண்டே இருக்கிறார் என்று எங்களால் நம்பவே இயலவில்லை.

என் அம்மா ஒன்றும் வைத்திய நிபுணர் அல்ல; ஆனாலும் மற்றவர்கள் சொல்வது, புத்தகத்தில் படிப்பது, மொபைலில் பார்ப்பது என்று தெரிந்தது எல்லாம் செய்து பார்த்தாயிற்று. ஜுரம் நின்றதே ஒழிய மூச்சு சீரான பாடில்லை.

நோய் தொற்றிற்கான டெஸ்ட்டும் எடுத்தாயிற்று. ரிஸல்ட் ஒன்றும் நமக்குப் பாதகமாக வரவில்லையென்றாலும் அதற்கான எல்லா அறிகுறிகளும் இருந்ததாக தான் என் மரமண்டைக்கு புலனாயிற்று. இதிலும் நாங்கள் டெஸ்ட் எடுத்தது அரசு மருத்துவமனையில் வேறு.

நாளுக்கு நாள் என் மாமாவின் நிலைமை மிகவும் இற்றுப் போயிற்று. வீட்டு வைத்தியம் பலனளிக்க இயலாத பிராயத்தில் நாங்கள் மருத்துவமனையை ஒவ்வொன்றாக அணுகத் தொடங்கினோம்.

ஆக்ஜிஸன் தேவை உள்ள நபர் என்றால் எல்லா ஆஸ்பத்திரிகளும் கும்பிடு போடாத குறையாக அட்மிஷன் இல்லை என்று அனுப்பு விடுகின்றனர்.

கடைசியாக, கிருத்துவ மருத்துவ கல்லூரியில் எப்படியோ தாஜா செய்து நாங்கள் சீட் வாங்கி கேஷுவாலிட்டி பிரிவில் சேர்த்தோம். அங்கு முழுவதும் என் முகத்தில் முகக்கவசம் போட வேண்டியதாய் போயிற்று.

நான் என் மாமா கூட இந்த வார்டிலேயே இருக்க அக்காவும் அவள் குழந்தையும் என் அம்மாவும் எதிர்க்க ஒரு லாட்ஜில் ரூம் போட்டு இருக்க வேண்டியதாய் போயிற்று.

இங்கேயும் ஒரு முக்கால் நாள் மாமாவிற்கு ஆக்ஜிஸன் ஏற்றி தேவையான நோய் தொற்று டெஸ்ட் உட்பட எல்லா டெஸ்டும் எடுத்து விட்டார்கள்.

மறுநாள் டெஸ்டில் ரிஸல்ட் பாசிடிவ் என்று வந்தது. எங்களுக்கு தூக்கி வாரி போட்டது. மீண்டும் இந்த காரணத்தை வைத்து எல்லா ஆஸ்பத்திரிகளுக்கும் அலைந்து திரிந்தோம்.

ஃபோன்கள் பறந்தன. உறவினர்கள் மாறி மாறி கருத்து தெரிவிக்க ஆரம்பித்து விடுகின்றனர். பின், சிஎம்சி ஆஸ்பத்திரியில் இருந்து எனக்கு ஃபோன் வந்தது.

“ராகவேந்திரன் எங்கிற பேஷன்டிர்க்கு பாசிடிவ் வந்திருக்கு. நீங்க ஹாஸ்பிடல் போறீங்களா, இல்ல ஹோம் க்வாரன்டைன் இருக்க போறீங்களா?”, என்றார்கள்.

நான் ஹாஸ்பிடல் போகனும் என்கிறேன்.

அவர்களும், “சரி, உங்களுக்கு பெட் இருந்தா நாங்க ஃபோன் பன்றோம்”, என்றார்கள்.

அவர்கள் எப்போது ஃபோன் பண்ணுவது, நாங்கள் எப்போது என் மாமாவை சரி படுத்துவது என்று எண்ணி நாங்கள் வண்டியை சிஎம்சி நோக்கி நோய் தொற்றில் சேர்க்க நுழைந்தோம். அவர்கள் மாமாவை செக் செய்து
சீட் கிடைக்க ஒருவரை அங்கேயே வெய்ட் பண்ண சொன்னார்கள்.

காலை ஒன்பது மணி முதல் இரவு ஏழரை மணி வரை காத்திருந்ததன் பலனாக என் மாமாவிற்கு பெட் கிடைத்தது. என் மாமாவின் வார்டிற்கு அவரை அழைத்து சென்றேன்.

அந்த வார்டில் அட்டெண்டர் யாவருக்கும் அனுமதி இல்லை. நான் வெளியே நின்று பார்க்கிறேன். கிட்ட தட்ட இருபத்தைந்து பேர் கஷ்டமான நிலையில் இருந்தனர்.

ஒரு நர்ஸ் என் மாமாவின் டீடைல்ஸ் கேட்ட போது, நான் முழுவதும் அவிழ்க்காத மாஸ்க்கை சிறிது விலக்கினேன். அதற்கு போய், அந்த நர்ஸிற்கு கோவம் வந்துவிட்டது.

“தம்பி, மொதல்ல மாஸ்க்க போடு. இந்த சாதாரண மாஸ்க் எத்தன பேர் வாழ்க்கைய மாத்திருக்கு தெரியுமா; உள்ள பாரு. என்ன மாறி என்ன நர்ஸ், எத்தன டாக்டர்ஸ்; இவுங்க எல்லாரும் இங்க இந்த பேஷன்ட் கிட்ட எந்த பயமும் இல்லாம நெருங்குறாங்கனா அது இந்த மாஸ்க்கால தான்…. இந்த மாஸ்க உனக்காக மட்டும் நீ போடல.

இதோ, இங்க இப்போ படுத்துட்டு இருக்காங்களே இவுங்களுக்காகவும், இதுக்கு முன்னாடி இருந்தவங்களுக்காகவும், இனிமே வரப்போறவங்களுக்காகவும் போடு. இனிமே இங்க யாரும் வரக்கூடாதுன்னு நெனச்சி போடு.” என்று என் மாமாவின் டீடைல்ஸ் எழுதியவாரே அந்த நர்ஸ் ஏக வசனம் பேசினார்.

எனக்கு செருப்பை எடுத்து அடித்தாற் போல ஆயிற்று.

“சரி, இவர் எங்க போனாலும் மாஸ்க் போடுவாரா?” என்று அந்த நர்ஸ் கேட்ட கேள்விக்கு நாம் என்ன பதில் சொல்வேன். ஏனெனில் இவர் என்னை விட மோசம். மாஸ்க் என்பது இவர் அகராதியிலேயே கிடையாது.

அதன் பின், அவர் அங்கு ஒரு ஐந்து நாள் இருந்தார். நான் தினமும் இரண்டு வேளை அவரை சென்று பார்த்துக் கொள்வேன்.

சிஎம்சியில் பெட் கிடைப்பது பெரிய சமுத்திரத்தை ஒரே குதியில் தாண்டுவதை ஒத்தது என்று அனைவரும் கூறினர். தாண்டினால் கவலை எங்கிற பேச்சுக்கே இடமில்லை. ஆனாலும் தினமும் நான் டாக்டரிடம் விசாரிப்பேன்.

இப்போது நான் சென்னை வந்துவிட்டேன். என் மாமா பூரண குணமடைந்து விட்டார்.

இதையெல்லாம் நினைத்தவாறே நான் கடைக்கு சென்றுக் கொண்டிருந்தேன். மீண்டும் துக்காராம் அங்கிளை சந்தித்தேன். இப்போதெல்லாம் அவரைப் பார்த்து நான் பயம் கொள்வதே இல்லை.

எங்கள் இருவர் முகமும் முகக்கவசம் கொண்டு மூடப்பட்டிருக்கும். அவர் என்னைப் பார்த்து புன்னகை பூத்தார்.அந்த சிரிப்பு ஒன்றும் எனக்கு தெரியவில்லை என்றாலும், அவர் என் மீது கொண்ட அன்பும் சமூகம் மீது கொண்ட அக்கறையும் நன்றாக தெரிந்தது.

கவின்ராஜ் கிருஷ்ணமூர்த்தி
சென்னை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.