முகம் அழகு பெற‌

அழகு என்பது எப்போதும் எல்லோராலும் விரும்பப்படும் ஒன்றாகவே உள்ளது. இன்றைய சூழ்நிலையில் எல்லோரும் அழகைப் பெறவே விரும்புகின்றனர்.

அழகு நிலையங்களுக்குச் சென்று மக்கள் தங்களை அழகு படுத்துவதில் உள்ள ஆர்வம் அதிகரித்து உள்ளது. கிரீம்கள் மற்றும் செய்கைப் பொருட்களைப் பயன்படுத்துவதால் தோலுக்கு பாதிப்பு ஏற்படுவதோடு அழகும் கெட்டுவிட வாய்ப்பு உள்ளது.

எனவே இந்தப் பகுதியில் எளிமையான முறையில் வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டு முகத்தை அழகுறச் செய்வதைப் பற்றி விளக்கியுள்ளேன்.

நீங்களும் இதனைச் செயல்படுத்தி முக அழகுடன் தன்னம்பிக்கையையும் பெறுங்கள்.

 

1. முகம் பளிச்சிட

தேவையான பொருட்கள்

தேன் – ஒரு ஸ்பூன்

காய்ச்சாத பால் – ஒரு ஸ்பூன்

 

செய்முறை

தேன், காய்ச்சாத பால் இரண்டையும் கலந்து முகத்தில் பூசி 20 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவும். இதனால் முகம் பளிச்சிடும்.

 

 

2. கருவளையம் மறைந்து முகம் புத்துணர்ச்சிபெற

தேவையான பொருட்கள்

உருளைக்கிழங்கு – 1 (சிறியது)

எலுமிச்சை – 1

 

செய்முறை

உருளைக்கிழங்கை தோலுரித்துக் கொள்ளவும். எலுமிச்சையை சாறு பிழிந்து கொள்ளவும். உரித்த உருளைக்கிழங்கை அரைத்துக் கொள்ளவும். அதனுடன் எலுமிச்சை சாற்றைக் கலந்து முகத்தில் பூசவும்.

15 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவ வேண்டும். இவ்வாறு செய்தால் கண்ணைச் சுற்றியுள்ள கரு வளையம் மறைந்து முகம் புத்துணர்ச்சி பெறும்.

 

 

3. முகச்சுருக்கம் மறைய

தேவையான பொருட்கள்

பப்பாளிப் பழம் – 1 (சிறியது)

தேன் – 1 ஸ்பூன்

 

செய்முறை

பப்பாளிப் பழத்தை நன்கு மசித்து கூழாக்கிக் கொள்ளவும். அதனுடன் தேனை ஒன்று போலக் கலந்து கொள்ளவும். இந்தக் கலவையை முகத்தில் பூசவும்.

20 நிமிடம் கழித்து முகத்தை குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இவ்வாறு செய்தால் முகத்தில் உள்ள சுருக்கங்கள் மறைவதோடு முகமும் பளிச்சிடும். இந்த செய்முறையில் நன்கு பழுத்த பப்பாளிப் பழத்தை தேர்வு செய்யவும்.

 

 

4. பருக்கள் மறைந்து முகம் அழகு பெற

தேவையான பொருட்கள்

மஞ்சள் பொடி – 1 ஸ்பூன்

கடலை மாவு – 1 ஸ்பூன்

பால் – சிறிதளவு

 

செய்முறை

மஞ்சள் பொடி, கடலை மாவு, பால் ஆகிய மூன்றையும் நன்றாகக் கலந்து முகத்தில் பூசவும். 15 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரினால் முகத்தைக் கழுவ வேண்டும். இதனால் பருக்கள் மறைந்து முகம் பளிச்சிடும்.

– நந்தினி இளையராஜா

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.