முகவாதம் என்பது, மூளையிலிருந்து வரும் முக நரம்பு பாதிப்படைவதால் முகத்தின் ஒரு பகுதி செயலிழந்து போவதாகும்.
இந்த நரம்பு பாதிப்பினால் குறிப்பாக முகத்தசைகள்,கண்ணீர்ச் சுரப்பிகள், உமிழ்நீர்ச்சுரப்பிகள்,உட்செவித்தசைகள், நாக்கின் சுவை மொட்டுக்கள் மிகவும் பாதிப்படைகின்றன.
இதுவும் ஒருவகையான வாத பாதிப்பு என்றாலும் கை மற்றும் கால்களில் ஏற்படும் வாதநோய் போன்று அல்லாமல் முற்றிலும் குணப்படுத்தக்கூடிய ஒன்றே.
முகவாதத்திற்கான முக்கிய காரணங்கள் இதுவரை துல்லியமாக கண்டறியப்படவில்லை.
எனினும் வைரஸ் தொற்று (ஹெர்பஸ் வைரஸ்), குளிர்காற்று காதிற்குள் சென்று நரம்பை பாதிப்பது, கடுமையான தலைவலி, உட்செவியில் ஏற்படும் நோய்த்தொற்று உள்ளிட்டவைகள் காரணமாக இந்நோய் ஏற்படலாம்.
உயர் இரத்தஅழுத்தம், சர்க்கரை நோய், முகம் மற்றும் மூளையில் ஏற்படும் கட்டிகள் மற்றும் புற்றுநோய், விபத்தினால் மண்டையோட்டில் ஏற்படும் எலும்பு பாதிப்புகள் போன்றவைகளும் இதற்கு காரணங்களாக அமைகின்றன.
பெரும்பாலும் குளிர் காலங்களில் வயது வித்தியாசமின்றி அனைத்து வயதினரையும் பாதிக்கும் நோயாக முகவாதம் இருக்கிறது.
முகவாதம் பாதிப்பிற்குண்டான அறிகுறிகள்
ஒருபக்க முகத்தசைகள் வலுவிழத்தல், கண் இமை மூடாதிருத்தல், நாக்கின் சுவையரும்புகள் பாதிப்படைவதால் சுவையைக் கண்டறிவதில் சிரமம், காதின் பின்புறத்தில் வலி, உண்ணுவதில் சிரமம், தலைவலி, வாய் ஒருபக்கமாக கோணியிருத்தல் போன்றவையாகும்.
மருத்துவர்களின் ஆலோசனைப்படி இரத்தம், CT ஸ்கேன், MRI ஸ்கேன் பரிசோதனைகள் தேவைப்பட்டால் செய்ய வேண்டி வரும். அது மட்டுமில்லாமல் மருத்துவர்களின் பரிந்துரைகளின்படி மருந்துகளும் எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கும்.
முகவாதத்திற்கு மிக முக்கியமாக இயன்முறை சிகிச்சை எனப்படும் பிசியோதெரபி சிகிச்சையானது மிகுந்த பலனைக் கொடுக்கும்.
முகவாதத்தினால் பாதிப்படைந்த ஒருவர் முதலில் தனக்கு ஏற்படும் தேவையில்லாத பயத்தையும், குழப்பங்களையும் கைவிட்டு மருத்துவரை அணுகி தெளிவு பெற வேண்டும்.
அத்துடன் இயன்முறை மருத்துவரை அணுகி நோய் தீர ஆலோசனையும் சிகிச்சையும் பெறுவது நல்லது. அதனடிப்படையில் இயன்முறை மருத்துவர் முகவாத்திற்குண்டான, ஏற்ற சிகிச்சை முறைகளை மேற்கொள்வார்.
பாதிக்கப்பட்ட நரம்பின் தன்மையை ஆராய்ந்து பிசியோதெரபி முறையில் தசைகளுக்கு சிறிய அதிர்வுகளுடன் கூடிய மின்தூண்டுதல் சிகிச்சை, முகத்தசைகளை இயக்குவதற்கு முகப்பயிற்சி, மசாஜ் போன்ற இயன்முறை மருத்துவ சிகிச்சைகள் மேற்கொள்ளப்படும்.
தொடர்ந்து பிசியோதெரபி சிகிச்சை தடங்கல் இல்லாமல் எடுத்துக்கொண்டால் மூன்றிலிருந்து ஆறு வாரங்களுக்குள் முற்றிலும் முகவாத பாதிப்பிலிருந்து விடுபடலாம்.
முகவாதம் நோய் பாதிப்பின்போது, பாதிக்கப்பட்டவர்கள் வீட்டிலேயே மருத்துவர்கள் மற்றும் பிசியோதெரபி மருத்துவர்களின் ஆலோசனைப்படி,கண் பாதிப்பிற்கு திரவ மருந்து மற்றும் சில எளிய முறைப் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
எக்காரணம் கொண்டும் உரிய மருத்துவ ஆலோசனை இல்லாமல் மருந்துகளோ அல்லது முகப் பயிற்சிகளோ கண்டிப்பாக மேற்கொள்ளக்கூடாது.
முகவாதத்தால் பாதிப்படைந்தவர்கள் பயணத்தின்போது கண்டிப்பாக கண்ணுக்கு கண்ணாடி அணிய வேண்டும். இதன் மூலம் இமைகள் திறந்திருப்பதால் கண்களில் குளிர் காற்று படுவதையும்,தூசு மற்றும் அழுக்குகள் படுவதையும் தடுக்க முடியும்.
அதேபோல் குளிர்காற்று பட்டு பாதிப்படையாமல் இருப்பதற்கு காதில் பஞ்சு வைத்துக்கொள்வது பலன்தரும். உணவை மெல்லப் பயன்படும் தசைகள் வலுப்பெற சூயிங்கம் மெல்வது உதவும்.
க.கார்த்திகேயன் அவர்கள்தமிழ்நாடு இயன்முறை மருத்துவர்கள் நலச்சங்கத்தின் மாநிலத் தலைவர். ஆர். கே. இயன்முறை மருத்துவமனை மற்றும் புனர்வாழ்வு மையத்தின் நிர்வாக இயக்குநர். அண்ணாமலைப் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரியில் 2007 ஆம் ஆண்டிலிருந்து 2012 ஆம் ஆண்டுவரை உதவி விரிவுரையாளராகப் பணியாற்றியவர். அண்ணாமலைப் பல்கலைக் கழகம் – ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் இளையோர் இயன்மருத்துவப் பட்டம் (Bachelor of Physiotherapy), முதுநிலை உளவியல் ஆற்றுப்படுத்துதல் பட்டம்(M.S.,(Psychotherapy) படித்தவர். விளையாட்டு மருத்துவம் (Sports Medicine & Rehabilitation) ), மூட்டுவலிக்கான சிறப்பு சிகிச்சை (Ligament Injuries & Rehabilitation) ஆகிய சான்றிதழ் படிப்புகளையும் படித்தவர். முகவரி:
க.கார்த்திகேயன்
46 ,மேலத்தெரு
வீரான நல்லூர் ,
காட்டுமன்னார் கோயில் -608301
கைபேசி: 9894322065
|
Comments
“முகவாதம் – முற்றிலும் குணப்படுத்த முடியும்” மீது ஒரு மறுமொழி
உதடு வீக்கம் திடீர் வருது முதல் தடவை