முட்சங்கன் – மருத்துவ பயன்கள்

முட்சங்கன் முடக்கு வாதம் மற்றும் கீல் வாதத்தை குணமாக்கும். இலை, உடல் பலத்தை அதிகரிக்கும். வேர் கோழையகற்றும்; இருமல் தணிக்கும். மேலும் கண் பார்வையை அதிகரிக்கும். இரத்தத்தை விருத்தியாக்கும்.

முட்சங்கன் இருமலைப் போக்கும்; உற்சாகம் தரும்; வெப்பம் உண்டாக்கும்; சிறு நீர் பெருக்கும்; எரிச்சலைத் தணிக்கும்; காய்ச்சலைக் குறைக்கும்.

முழுத் தாவரமும் கைப்புச் சுவையும், வெப்பத் தன்மையும் கொண்டது. இது புதர் செடி வகையைச் சார்ந்தது. இலைகள் எதிர் அடுக்கில் அமைந்தவை. நீள் முட்டை வடிவமானவை. தடித்தவை. பளபளப்பானவை. இலை நுனியில் கூர்மையான முள் காணப்படும். கணப்பகுதியில் இலைக் கோணத்தில் உள்ள பசுமையான கூரான 4 முட்கள் காணப்படும்.

இதன் பூக்கள் சிறியவை. கணுக்களில் அமைந்தவை. பழுப்பு நிறம். கனி வெள்ளை அல்லது பழுப்பு நிறமானவை. உருண்டையானவை. சதைப் பற்றுடையவை. கனியில் இரண்டு விதைகள் காணப்படும்.

முட்சங்கு, சங்கன், செடிச் சங்கன், சங்கமுள் செடி ஆகிய மாற்றுப் பெயர்களும் உண்டு. இலை, வேர் போன்றவை மருத்துவத்தில் பயன்படுபவை.

காயம் சொரி சிரங்கு குணமாக இதன் இலையை அரைத்து பூச வேண்டும்.

காணாக்கடி, மற்றும் பூச்சிக் கடிகளின் விஷம் குணமாக முட்சங்கன் வேர் 2 கிராம் அளவு நன்கு கழுவி சுத்தம் செய்து கொண்டு, 4 மிளகுடன் சேர்த்து நீர் விட்டு அரைத்து பாலில் கலந்து குடித்து வர வேண்டும். தினமும் இரண்டு வேளைகள் 3 நாட்களுக்குச் சாப்பிட வேண்டும்.

சளி வெளியாக முட்சங்கன் இலை, தூதுவேளை இலை, இரண்டையும் ஒரு பிடி அளவு அரைத்து நெல்லிக்காய் அளவு 1 டம்ளர் பசும் பாலுடன் சேர்த்து கலக்கி குடிக்க வேண்டும்.

அம்மை கொப்புளங்கள் மறைய இலையை அரைத்து அம்மைப் புண்களின் மேல் பூச வேண்டும்.

அடிபட்ட வீக்கம் சரியாக வேர்ப்பட்டையை அரைத்து வீக்கத்தின் மீது பூசிவர வேண்டும்.