முட்டாள் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் முதல் தேதி அகில உலக அளவில் கொண்டாடப்படுகிறது.
இந்த நாளில் மக்கள் வேடிக்கையாக ஜோக்குகள் அடித்தும், மற்றவர்களை முட்டாள்களாக்கியும், விளையாடி மகிழ்வார்கள்.
ஏப்ரல் முதல் தேதி வருவதற்கு ஓரிரு நாட்கள் முன்னதாகவே, மற்றவர்களை எந்த வகையில் முட்டாளாக்கி மகிழ்வது என்பதைத் திட்டமிட்டுக் கொள்கின்றனர்.
ஏப்ரல் முதல் தேதி வந்ததும் வேலை மாற்றல் மற்றும் மற்ற நிகழ்ச்சிகள் குறித்து தவறான தகவல்களைக் கடிதம், டெலிபோன், தந்தி மூலமாக தெரிவித்து சம்பந்தப்பட்டவர்களை முட்டாள்களாக்குகின்றார்கள்.
சில சமயங்களில், தேர்வு எழுதியிருப்பவர்களுக்குத் தவறான தேர்வு முடிவுகளை அனுப்பி வேடிக்கை பார்ப்பதுண்டு. சிலர் ஒருவரைப் பற்றி மிக மோசமாக வதந்திகளைப் பரப்புவதும் வழக்கம்.
இன்னும் சிலர் இன்னார் விபத்து ஏற்பட்டு, அல்லது விபத்தில் அடிபட்டு இந்த மருத்துவமனையில் இருக்கிறார் என்றெல்லாம்கூட உறவினர்களுக்குத் தவறான செய்தி அனுப்பி மகிழ்கிறார்கள்.
இப்படிப்பட்ட வேடிக்கைகள், விளையாட்டுகள் யாவும் மற்றவர்களை முட்டாளாக்கி சிறிது நேரம் மகிழவே, எவ்வித உள்நோக்கமின்றிச் செய்யப்படுகின்றன.
மற்றவர்களை முட்டாளாக்கி மகிழ்வதில் சிறுவர்களும், குழந்தைகளும் எந்த விதத்திலும் சளைத்தவர்களில்லை.
மணிபர்ஸ் ஒன்றை எடுத்து அதன் முனை ஒன்றில் மெல்லிய நூலைக்கட்டி, சாலையில் போட்டு, நூலின் மறுமுனையைக் கையில் பிடித்துக் கொண்டு சாலை ஓரத்தில் மறைவான இடத்தில் அமர்ந்து கொள்ள, சாலையில் வருவோர், போவோர் அந்த பர்ஸை எடுக்க முயற்சிக்கையில் அவர்கள் கையில் சிக்காதபடி நூலை பின்பக்கமாக இழுத்து விளையாடி மகிழ்வார்கள்.
பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் வருகைக்குப் பின்புதான் ‘ஏப்ரல் முதல் தேதியன்று முட்டாள் தினம்’ வந்த விதம் பற்றி மேலும் சில செய்திகள் அறியப்படுகின்றன.
ஏப்ரல் முதல் தேதி, பிரான்ஸ் நாட்டில் புத்தாண்டு தினமாகக் கொண்டாடப்பட்டது என்கிறார்கள். இது ஜூலியன் நாட்காட்டியில் குறிப்பிடப்பட்டிருக்கிறதாம்.
ஒன்பதாம் சார்லஸ், 1564-ம் ஆண்டு ‘கிரெகோரியன் நாட்காட்டி’யைத் (Gregorian Calander) தயாரித்து வெளியிட்டிருக்கிறார்.
அதன்படி, ஜனவரி மாதம் முதல் தேதி புத்தாண்டு தினமாகக் கொண்டாடப்படும் வழக்கம் ஏற்பட்டிருக்கிறது.
ஏப்ரல் மாதம் முதல் தேதி புத்தாண்டு தினமாகக் கொண்டாடப்பட்ட நாட்களிலேயே, ஒருவரையொருவர் முட்டாளாக்கி மகிழ்ந்து வேடிக்கை புரிந்திருக்கிறார்கள்.
முட்டாளாக்கப்பட்டவர்களை ‘ஏப்ரல் மீன்‘ என அழைக்கும் வழக்கம் இருந்திருக்கிறது. சிலர் அவர்களை ‘குயில்’ (ஏப்ரல் குயில்) என்றும் அழைத்து வந்திருக்கின்றனர்.
குயில் ஏப்ரல் மாத காலத்தில் தவறுதலாக, தன் கூட்டில் முட்டையிடாமல் மற்ற குயில்களின் கூடுகளில் முட்டைகளையிட்டுவிடுமாதலால், ஏப்ரல் முதல் தேதி அன்று முட்டாளாகச் செயல்படுபவர்களை ‘குயில்’ என அழைத்து மகிழ்ந்திருக்கிறார்கள்.

ஜானகி எஸ்.ராஜ்
திருச்சி
கைபேசி: 9442254998
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!