முல்லை வனம் என்ற அழகிய காடு ஒன்று இருந்தது. அதில் மஞ்சளாறு என்ற ஆறு ஒன்று அக்காட்டினை வளப்படுத்தியது.
அவ்வாற்றின் கரையில் நாவல் மரம் ஒன்று இருந்தது. அம்மரத்தில் குரங்கு குப்பன் வசித்து வந்தது.
மஞ்சள் ஆற்றின் நடுப்பகுதியில் முதலை முத்து வாழ்ந்து வந்தது.
குரங்கும், முதலையும்
ஒருநாள் நாவல் மரத்தின் பழங்களை குரங்கு குப்பன் தின்று கொண்டிருந்தது. அப்போது நாவல் பழங்கள் மரத்தின் கீழே ஆற்றின் கரையில் நின்றிருந்த முதலையின் மீது விழுந்தது.
முதலை முத்து கீழே விழுந்த நாவல் பழங்களை தின்றது. அதற்கு அப்பழத்தின் ருசி பிடித்துப் போகவே குரங்கு குப்பனிடம் தனக்கு நாவல் பழங்ளை பறித்து கீழே போடுமாறு முதலை முத்து கேட்டது.
குரங்கு குப்பனும் அதற்கு சம்மதித்து நாவல் பழங்களை பிடுங்கிப் போட்டது. இந்நிகழ்விலிருந்து அவர்கள் இருவரும் நண்பர்களாயினர்.
அதன்பின் தினந்தோறும் குரங்கு குப்பன் முதலை முத்துவுக்கு நாவல் பழங்களைப் பறித்துப் போடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தது.
ஒருநாள் முதலை முத்து நாவல் பழங்களை ஆற்றின் நடுவில் தன்னுடைய வீட்டிற்கு நாவல் பழங்களைக் கொண்டு சென்று தனது மனைவியான முதலை முப்பியிடம் கொடுத்தது.
முதலை முப்பிக்கு நாவல் பழங்களின் ருசி பிடித்துப்போகவே தனது கணவன் முதலை முத்துவிடம் “நாவல் பழங்களின் ருசி அபாரமாக உள்ளது.தினமும் நாவலை தின்று கொண்டிருக்கும் குரங்கு குப்பனின் ஈரலை உண்ண ஆசையாக உள்ளது.
ஆதலால் நீங்கள் குரங்கு குப்பனை நமது வீட்டிற்கு விருந்துண்ண அழைத்து வாருங்கள். நாம் குரங்கு குப்பனின் ஈரலை உண்ணுவோம்” என்றது. முதலை முத்துவும் அதற்கு சம்மதித்தது.
மறுநாள் குரங்கு குப்பனை சந்தித்த முதலை முத்து “நண்பரே நீங்கள் தினந்தோறும் நாவல் பழங்களை உண்ணத் தருகிறீர்கள்.
ஆதலால் உங்களை எங்கள் வீட்டிற்கு அழைத்துச் சென்று விருந்து வைக்க நானும் என் மனைவியும் தீர்மானித்திருக்கிறோம். நீங்கள் நாளைக்கு எங்கள் வீட்டிற்கு வாருங்கள்” என்று பாசத்துடன் அழைத்தது.
குரங்கு குப்பன் “எனக்கும் உன்னுடன் வர ஆசைதான். ஆனால் உங்கள் வீடு நதியின் நடுவில் உள்ளது. எனக்கு நீந்தத் தெரியாது. எவ்வாறு உன் வீட்டிற்கு வருவேன்?” என்று கேட்டது.
அதற்கு முதலை முத்து குரங்கு குப்பனை முதுகில் சுமந்து செல்வதாகக் கூறியது. குரங்கு குப்பனும் அதற்கு சமம்மதித்தது.
மறுநாள் முதலை முத்து குரங்கு குப்பனை முதுகில் சுமந்து கொண்டு தன்வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தது.
முட்டாள் முதலை
அப்போது குரங்கு குப்பனிடம் “நீ கொடுக்கும் நாவல்பழங்களின் சுவை மிகவும் அற்புதமாக உள்ளது. தினந்தோறும் அதனைத் தின்று கொண்டிருக்கும் உன்னுடைய ஈரல் மிகவும் சுவையுடையதாக இருக்கும். ஆதலால் உன்னுடைய ஈரலை உண்பதற்கு உன்னை என் மனைவி அழைத்து வரச்சொன்னாள்” என்று கூறியது.
உடனே குரங்கு குப்பன் முதலை முத்துவிடம் “அடடா நீ முதலில் சொல்லாமல் விட்டுவிட்டாயே. நான் நேற்றுதான் என்னுடைய ஈரலை மரத்தில் துவைத்து காயவைத்தேன்.
நீ முதலில் சொல்லியிருந்தால் நான் அதனை எடுத்து கொண்டு வந்திருப்பேன். சரி நீ இப்போது என்னை மரத்திற்கு அருகில் விடு. நான் சென்று மரத்தில் காயவைத்த ஈரலை எடுத்துக் கொண்டு வருகிறேன்” என்று கூறியது.
குரங்கு குப்பன் சொன்னதை நம்பிய முதலை முத்து அதனை நாவல் மரத்தின் அருகில் கொண்டு வந்து விட்டது.
மரத்தின்மீது ஏறிய குரங்கு குப்பன் பாதுகாப்பான இடத்தில் அமர்ந்து கொண்டு “முட்டாள் முதலை, ஈரலை வெளியே எடுத்தால் என்னால் உயிர் வாழ இயலுமா?.
நான் தினந்தோறும் உனக்கு கொடுத்த நாவல் பழத்திற்கு நீ செய்யும் கைமாறு இதுவா?.நம்முடைய நட்பை நீ கொச்சைப்படுத்தி விட்டாய். நீ என்னுடைய நண்பன் அல்ல. இங்கிருந்து சென்றுவிடு.” என்று கூறியது. முதலை முத்து தன்னுடைய முட்டாள்தனத்தை எண்ணி வருந்தியது.
நம்மில் பலர் இந்த முதலைகளைப் போல் சுயநலமிக்கவர்களாக இருக்கின்றனர். ஆதலால் அவர்களிடம் நாம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!