முட்டைகோஸ்

முட்டைகோஸ்

முட்டைகோஸ் விரத சமையலில் இருந்து விருந்து சமையல் வரை எல்லாவற்றிலும் இடம் பெற்றிருக்கும் முக்கிய காய் வகையாகும்.

முட்டைகோஸ் குறைந்த விலையில் அதிக அளவு சத்துக்களைக் கொண்டுள்ளது.

முட்டைக்கோஸில் நாம் உணவாகப் பயன்படுத்தும் பகுதி இலைப்பகுதியாகும். எனவே இதனை கீரை என்றும் சொல்லலாம்.

முட்டைக்கோஸ் குறுகிய தண்டினையும், மிகநெருக்கமாக ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்குகளாக உள்ள இலைகளையும் கொண்டுள்ளது.

 

முட்டைகோஸ் தாவரம்
முட்டைகோஸ் தாவரம்

 

இக்காயில் உட்புறத்தில் உள்ள இலைகள் மென்மையாகவும், வெளிப்புறத்தில் உள்ளவை கடினமானவையாகவும் இருக்கும்.

இது பச்சை, இளம்பச்சை, கருஊதா (வைலட்), சிவப்பு உள்ளிட்ட வண்ணங்களில் கோளவடிவில் காணப்படுகிறது.

பொதுவாக முட்டைக்கோஸ் ½ கிலோ கிராம் முதல் 4 கிலோ கிராம் எடையளவில் காணப்படுகிறது.

இக்காயின் தாயகம் இதுதான் என்று வரையறுத்து கூற இயலவில்லை. எனினும் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இது ஐரோப்பாவில் பயன்படுத்தப்பட்டது.

முட்டைக்கோஸானது விதைகளின் மூலம் பயிர் செய்யப்படுகிறது. இது ஈராண்டு வாழும் இருவித்திலை தாவர வகையாகும்.

 

முட்டைகோஸ் தோட்டம்
முட்டைகோஸ் தோட்டம்

 

பயிர் செய்த முதல் வருடத்தில் முட்டைகோஸ் அறுவடை செய்யப்படுகிறது. அடுத்த ஆண்டு பூ பூத்து விதைகளை உற்பத்தி செய்கிறது.

 

முட்டைகோஸ் பூ
முட்டைகோஸ் பூ

 

முட்டைக்கோஸானது குளுமையான தட்பவெப்பத்தில் (4 முதல் 24 டிகிரி செல்சியஸ்) நல்ல வடிகால் வசதியுள்ள வளமையான மண்ணில் நன்கு விளைகிறது.

சீனா, இந்தியா, ஜப்பான், ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் உலக அளவில் முட்டைகோஸை அதிகளவு உற்பத்தி செய்கின்றன.

முட்டைக்கோஸின் அறிவியல் பெயர் ப்ராசிகா ஒல்லேரியா என்பதாகும். கிழக்கு மற்றும் மத்திய ஐரோப்பாவில் முட்டைகோஸ் முக்கிய உணவுப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது.

 

முட்டைகோஸில் உள்ள சத்துக்கள்

முட்டைகோஸில் விட்டமின் சி மற்றும் கே அதிகளவு காணப்படுகின்றது. மேலும் இதில் விட்டமின் ஏ, பி1(தயாமின்), பி2(ரிபோஃப்னோவின்), பி3(நியாஸின்), பி5(பான்டாதெனிக் அமிலம்), பி6(பைரிடாக்ஸின்), ஃபோலேட்டுகள் ஆகியவையும் காணப்படுகின்றன.

முட்டைக்கோஸில் தாதுஉப்புக்களான கால்சியம், இரும்புச்சத்து, மக்னீசியம், மாங்கனீசு, பாஸ்பரஸ், துத்தநாகம், பொட்டாசியம் போன்றவைகளும் காணப்படுகின்றன.

மேலும் இதில் பைட்டோநியூட்ரியன்களான ஆல்பா கரோடீன், பீட்டா கரோடீன், லுடீன் ஸீஸாக்தைன் போன்றவைகளும் காணப்படுகின்றன.

 

முட்டைக்கோஸின் மருத்துவப் பண்புகள்

விட்டமின் சி குறைபாட்டினைப் போக்க

முட்டைக்கோஸ் அதிகஅளவு விட்டமின் சி-யைக் கொண்டுள்ளது. ஆரஞ்சில் இருப்பதைவிட அதிகஅளவு விட்டமின் சி முட்டைக்கோஸில் உள்ளது.

விட்டமின் சி-யானது அல்சர், சிலவகை புற்றுநோய்கள், மனஅழுத்தம், நோய் எதிர்ப்பு சக்தி இன்மை, ஸ்கர்வி ஆகியவற்றிற்கு சிறந்த மருந்தாகும்.

மேலும் இது தசைகளில் ஏற்படும் காயங்களை விரைவாக சரிசெய்வதுடன், அல்சீமைர் உள்ளிட்ட நரம்பு மண்டல நோய்களை சரிசெய்து சீரான நரம்பு மண்டல செயல்பாட்டிற்கும் வழிவகை செய்கிறது.

 

நல்ல செரிமானத்திற்கு

முட்டைகோஸ் அதிகளவு நார்சத்தினைக் கொண்டுள்ளது. இதனால் செரிமானம் நன்கு நடைபெறுவதோடு உடலானது சத்துக்களை உறிஞ்சவும் தூண்டுகிறது. குடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறவும் நார்சத்து உதவுகிறது. எனவே முட்டைகோஸினை உண்டு நல்ல செரிமானத்தைப் பெறுவதோடு மலச்சிக்கலைத் தவிர்க்கலாம்.

 

புற்றுநோய் ஏற்படுவதைத் தடுக்க

முட்டைகோஸானது விட்டமின் சி உள்ளிட்ட ஆன்டிஆக்ஸிஜென்ட்டுகளைக் கொண்டுள்ளது. அவை உடலின் வளர்சிதை மாற்றத்தால் வெளியிடப்படும் ப்ரீ ரேடிக்கல்களின் செயல்பாடுகளை தடை செய்து புற்றுநோய் வராமல் தடுக்கிறது.

மேலும் இக்காயில் புற்றுநோய் எதிர்ப்பு பொருட்களான லுபியோல், சினிகிரின், சல்ஃரோபேன் ஆகியவை காணப்படுகின்றன. இவை புற்றுஎதிர்ப்பு நொதிகளை சுரக்கச் செய்கின்றன.

முட்டைகோஸை அடிக்கடி உணவில் சேர்ப்பதால் அது புற்றுநோய் வளர்ச்சியைத் தடைசெய்வதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

 

நோய் அழற்சி எதிர்ப்பு பண்புகள்

முட்டைக்கோஸானது நோய் அழற்சி எதிர்ப்பு பண்புள்ள குளுட்டாமைனில் என்பதனை அதிகம் கொண்டுள்ளது. இதனால் வீக்கம், ஒவ்வாமை, எரிச்சல், மூட்டுவலி, காய்ச்சல் மற்றும் பல்வேறு தோல் நோய்கள் போன்றவற்றிலிருந்து நம்மை முட்டைக்கோஸ் பாதுகாக்கிறது.

 

கண்களின் நலத்திற்கு

முட்டைக்கோஸில் அதிகளவு பீட்டா கரோடீன் உள்ளது. இது கண் தசை அழற்சி நோய், கண்புரை நோய் உள்ளிட்டவற்றிலிருந்து நமக்கு பாதுகாப்பு அளிக்கிறது. எனவே முட்டைக்கோஸினை அடிக்கடி உணவில் சேர்த்து கண்களைப் பாதுகாக்கலாம்.

 

ஆரோக்கியமான உடல்எடை குறைப்பிற்கு

முட்டைக்கோஸில் அதிக அளவு நார்ச்சத்தும், நுண்ஊட்டச்சத்துக்களும், குறைந்த அளவு எரிசக்தியும் உள்ளன. எனவே இதனை உண்ணும்போது வயிறு நிறைந்த உணர்வு ஏற்படுவதோடு குறைந்த அளவு எரிசக்தியே கிடைக்கிறது.

இதனால் உடல் எடை குறைவதோடு உடல்நலம் பாதிக்கப்படுவதில்லை. எனவே உடல் எடை குறைக்க விரும்புவோர் முட்டைகோஸினை உட்கொண்டு ஆரோக்கியத்தையும் பெறலாம்.

 

மூளையின் நலத்திற்கு

முட்டைக்கோஸில் உள்ள ஆந்தோசையனின் மற்றும் விட்டமின் கே ஆகியவை மூளை நினைவாற்றலை அதிகப்படுத்தி நன்கு செயல்பட தூண்டுகோலாக அமைகிறது.

மேலும் விட்டமின் கே-வானது நரம்புகளைச் சுற்றியுள்ள மிலலின் உறையான ஸ்பிங்கோலிப்பிடுகளின் உற்பத்திக்கு காரணமாக உள்ளது. இந்த மிலலின் உறையானது நரம்பு செல்களை சிதைவிலிருந்தும், அழிவிலிருந்தும் பாதுகாக்கிறது.

மேலும் விட்டமின் கே-வானது டிமென்சியா, நரம்பு சீர்குலைவு நோய், அல்சீமர்ஸ் உள்ளிட்ட நரம்புகளின் பாதிப்பால் உண்டாகும் மூளை சம்பந்தமான நோய்கள் ஏற்படாமல் பாதுகாக்கிறது. எனவே முட்டைக்கோஸினை அதிகம் உண்டு மூளையின் நலத்தினைப் பாதுகாக்கலாம்.

 

 

எலும்புகளின் பாதுகாப்பிற்கு

முட்டைக்கோஸில் கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம் போன்ற தாதுஉப்புக்கள் காணப்படுகின்றன. இவை எலும்புகளின் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

எனவே முட்டைக்கோஸினை உணவில் சேர்த்துக் கொண்டு ஆஸ்டியோபோரோஸிஸ் உள்ளிட்ட எலும்பு குறைபாடு நோய்களை தவிர்த்து ஆரோக்கியமான எலும்பினைப் பெறலாம்.

 

சருமப் பாதுகாப்பிற்கு

முட்டைக்கோஸில் விட்டமின் சி, ஆந்தோசையனின், கந்தகம் உள்ளிட்ட ஆன்டிஆக்ஸிஜென்டுகள் உள்ளன. இவை சருமத்தில் புள்ளிகள், சுருக்கங்கள் ஏற்படாமல் பாதுகாக்கின்றன.

வயதோதிகத்தால் சருமத்தில் ஏற்படும் சுருக்கங்களையும் தடை செய்கின்றன. எனவே முட்டைகோஸினை உணவில் சேர்த்துக் கொண்டு சருமத்தினைப் பாதுகாக்கலாம்.

 

நச்சினை நீக்க

முட்டைகோஸில் உள்ள விட்டமின் சி மற்றும் கந்தகம் ஆகியவை உடலில் உள்ள நச்சினை நீக்கி இரத்தத்தை சுத்தப்படுத்துகின்றன. இதனால் நச்சின் காரணமாக ஏற்படும் கீல்வாதம், தோல்நோய்கள் போன்றவை ஏற்படாமல் முட்டைக்கோஸ் உடலினைப் பாதுகாக்கின்றது.

 

 

முட்டைக்கோஸினைப் பற்றிய எச்சரிக்கை

முட்டைக்கோஸினை அதிகஅளவு உணவில் எடுத்துக் கொள்ளும்போது தைராய்டு சுரபியில் வீக்கத்தை உண்டாக்கி தைராய்டு சுரப்பினை குறைத்து விடுகிறது. தைராய்டு குறைபாடு உள்ளவர்கள் இக்காயினை தவிர்ப்பது நலம் ஆகும்.

 

முட்டைக்கோஸினைத் தேர்வு செய்யும் முறை

முட்டைக்கோஸினைத் தேர்வு செய்யும் போது புதிய உறுதியான நடுத்தர அளவிலான கைகளில் தூக்கும் போது கனமானதாக இருக்க கூடியதைத் தேர்வு செய்யவும்.

முட்டைக்கோஸின் மேற்பரப்பானது சிதைவுற்று அரிக்கப்பட்டிருந்தால் அதனை தவிர்த்து விட வேண்டும்.

முட்டைக்கோஸினை புதிதாக இருக்கும்போது பயன்படுத்துவது நலம். இதனை குளிர்பதனப் பெட்டியில் ஒருவாரம் வரை வைத்திருந்தும் பயன்படுத்தலாம்.

 

முட்டைக்கோஸினைப் பயன்படுத்தும் முறை

முட்டைக்கோஸில் பூச்சிகளைத் தடைசெய்யும் பொருட்டு பூச்சிகொல்லி மருந்து பயன்படுத்தப்படுவதால் இதனை தண்ணீரில் நன்கு கழுவி உப்பு கலந்த நீரில் ஊற வைத்து அலசி பயன்படுத்தவும்.

முட்டைக்கோஸானது பச்சையாகவோ, வேகவைத்தோ பயன்படுத்தப்படுகிறது. ஊறுகாய், சாலட்டுகள் மற்றும் சூப் ஆகியவை தயார் செய்ய இக்காய் உபயோகப்படுத்தப்படுகிறது.
சத்துக்கள் நிறைந்த முட்டைக்கோஸினை அடிக்கடி உணவில் சேர்த்து நலம் பெறுவோம்.

– வ.முனீஸ்வரன்

 


Comments

“முட்டைகோஸ்” அதற்கு 2 மறுமொழிகள்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.