முட்டைக் குழம்பு செய்வது எப்படி?

முட்டையைக் கொண்டு பல வகை உணவுகள் தயார் செய்தாலும் முட்டைக் குழம்பு என்பது முதன்மையானது. முட்டையில் புரதச்சத்து, கொழுப்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து ஆகியவை மிகுந்துள்ளன.

குழந்தைகளின் வளர்ச்சியில் புரதச்சத்து முக்கிய பங்கு வகிப்பதால் தினமும் அவர்களுக்கு ஒரு முட்டை கொடுக்கலாம். முட்டையை அவித்து உண்பதே ஆரோக்கியமானது.

முட்டை சத்து நிறைந்தது என்பதுடன் மற்ற சத்து நிறைந்த உணவுப் பொருட்களுடன் இதனை ஒப்பிடும் போது விலையும் குறைவு. முட்டையை அவித்து அதனைக் கொண்டு முட்டைக் குழம்பு தயார் செய்வது எப்படி என்பதனைப் பார்ப்போம்.

 

தேவையான பொருட்கள்

முட்டை – 2

சின்ன வெங்காயம் – 100 கிராம்

நல்லெண்ணெய் – தேவையான அளவு

மல்லி இலை – சிறிதளவு

 

மசால் செய்ய

தேங்காய் – ¼ மூடி

மல்லிப்பொடி – 1½ ஸ்பூன்

சீரகப்பொடி – 3/4 ஸ்பூன்

வத்தல் பொடி – 1 ஸ்பூன்

மஞ்சள் பொடி – சிறிதளவு

 

தாளிக்க

கடுகு – ½ ஸ்பூன்

கருவேப்பிலை – ஒரு கொத்து

 

செய்முறை

முதலில் சின்ன வெங்காயத்தை சதுரம் சதுரமாக படத்தில் காட்டியவாறு வெட்டிக் கொள்ளவும். முட்டை வேக வைத்து ஓட்டினை நீக்கி வைத்துக் கொள்ளவும். மல்லி இலையைச் சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும். தேங்காயை துருவி மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். அரைத்த தேங்காய் விழுதுடன் மல்லிப் பொடி, சீரகப் பொடி, வத்தல் பொடி, மஞ்சள் பொடி ஆகியவற்றைச் சேர்த்து மசால் தயார் செய்யவும்.

 

முட்டைக் குழம்பு செய்ய‌ தேவையான பொருட்கள்
முட்டைக் குழம்பு செய்ய‌ தேவையான பொருட்கள்

 

வாணலியை அடுப்பில் வைத்து தேவையான அளவு நல்லெண்ணெய் சேர்த்து கடுகு, கருவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ளவும். பின் நறுக்கிய சின்ன வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும்.

 

சின்ன வெங்காயத்தை வதக்கும்போது
சின்ன வெங்காயத்தை வதக்கும்போது

 

வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கி பின் அதனுடன் தயார் செய்த மாசாலாவைச் சேர்த்து அதனுடன் தேவையான அளவு தண்ணீர், உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.

 

முட்டைக் குழம்பு கொதிக்கும் தருவாயில்
முட்டைக் குழம்பு கொதிக்கும் தருவாயில்

 

நன்கு கொதித்து மசால் வாடை போன பின்பு அதனுடன் அவித்து வைத்துள்ள முட்டைகளை சேர்த்து ஒரு நிமிடம் அடுப்பில் வைத்து நறுக்கிய கொத்த மல்லி இலைகளை தூவி இறக்கி விடவும். சுவையான முட்டைக் குழம்பு தயார்.

 

தயார் நிலையில் முட்டைக் குழம்பு
தயார் நிலையில் முட்டைக் குழம்பு

 

குறிப்பு

முட்டையை வேக வைக்கும் போது தண்ணீருடன் சிறிதளவு உப்பைச் சேர்த்து வேக வைத்தால் முட்டை ஓடு கீறாமல் நன்கு வெந்துவிடும்.

முட்டைக் குழம்பிற்கு மசால் தயார் செய்யும் போது சிறிதளவு கரமசால் பொடி சேர்த்து தயார் செய்யலாம்.

முட்டை குழம்பு நல்லெண்ணெய் சேர்த்து தயார் செய்யும் போது சுவை கூடுவதோடு ஆரோக்கியமானதும் ஆகும்.

விருப்பமுள்ளவர்கள் மிளகாய் தூள், மல்லித் தூள், மஞ்சள் தூள், சீரகத் தூள் ஆகியவற்றிற்கு பதில் மசாலா பொடி (2½ ஸ்பூன்) யைப் பயன்படுத்தி இக்குழம்பினை தயார் செய்யலாம்.

– கோகுலவாணி பிரபு

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.