முட்டை பற்றிய முழுமையான தகவல்கள்

முட்டை சத்தான உணவு என்பது உங்களுக்குத் தெரியும். முட்டை பற்றிய முழுமையான தகவல்கள் தெரிந்து கொள்ளத் தொடர்ந்து படியுங்கள்.

சிறுவர்கள் தினமும் ஒரு முட்டையை உண்டால் ஆரோக்கியமான உடல் வளர்ச்சியைப் பெறலாம் என்று பெரியவர்கள் தங்களின் அனுபவத்தில் கூறுவர்.

இன்றைய நவீன மருத்துவமும் அதைத்தான் கூறுகிறது. மிகவும் குறைவான விலையில் அதிக ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ள உணவுப் பொருள் முட்டையாகும்.

விலங்கிலிருந்து பெறப்பட்டு அதிகளவு பயன்படுத்தப்படும் உணவுப் பொருள்களில் முட்டையானது முதலிடம் பெறுகிறது.

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே முட்டையை உணவாகக் கொள்ளும் வழக்கம் இருந்து வருகிறது.

மீன்கள், ஊர்வன, பறவைகள் போன்றவை முட்டைகளை இட்டு குஞ்சு பொரித்து தங்களுடைய இனங்களைப் பெருகச் செய்கின்றன.

பெரும்பாலும் பறவைகளின் முட்டைகளே உணவாக உட்கொள்ளப்படுகின்றன. குறிப்பாக கோழியின் முட்டைகள் அதிகளவு பயன்படுத்தப்படுகின்றன.

உலகின் சில இடங்களில் மீன்களின் முட்டைகளை உண்ணும் வழக்கம் உள்ளது.

முட்டையினைப் பற்றிய வரலாறு

சுமார் அறுபது லட்சம் ஆண்டுகளுக்கு முன்னரே முட்டையைப் பயன்படுத்தும் பழக்கம் இருந்துள்ளது.

ஆதிமனிதன் காட்டுப்பறவைகளின் கூடுகளிலிருந்து முட்டைகளைக் கைபற்றி உண்ணத் தொடங்கி இருக்க வேண்டும். ஏனெனில் முட்டைகளை எடுக்கும்போது அவை எந்தவித எதிர்ப்பினையும் அவனிடம் காட்டவில்லை.

கிமு 7000-ஆம் ஆண்டில் இந்தியா மற்றும் சீனாவில் கோழிகளை வளர்த்து அவற்றின் முட்டைகளைப் பயன்படுத்த தொடங்கினர். இதனால் காட்டுப் பறவைகளின் முட்டைகளை வேட்டையாட வேண்டிய அவசியம் இல்லாமல் போனது.

எனினும் கிமு 800 வரை மேற்கு ஆசியா, ஐரோப்பா, எகிப்து ஆகிய நாடுகளில் கோழிமுட்டை பயன்படுத்தப்படவில்லை. அதன்பின்பு மேற்கு ஆசியா மற்றும் ஐரோப்பாவில் முட்டைகளுக்காக வாத்துகள் வளர்க்கப்பட்டன.

கிமு 300-ல் எகிப்து மற்றும் சீனா நாடுகளில் கோழி வளர்ப்பவர்கள் களிமண் அடுப்புகளைப் பயன்படுத்தி கோழிக்குஞ்களை முட்டைகளிலிருந்து பொரிக்க வைக்கும் முறையினை அறிந்தனர்.

இதனால் கோழிகள் அடைகாத்து குஞ்சு பொரிப்பது அவசியமில்லாமல் போனது. எனவே கோழிகள் ஓர் ஆண்டில் இடும் முட்டைகளின் எண்ணிக்கை அதிகரித்தது. இதனால் முட்டையானது விலை குறைவாகவும் அதிகமாகவும் பயன்படுத்தப்பட்டது.

முதலில் ஆதிமனிதன் முட்டைகளை அப்படியே பச்சையாக பயன்படுத்தினான். நெருப்பு கண்டுபிடிக்கப்பட்ட பின் முட்டையானது வறுத்து உண்ணப்பட்டது. சக்கரம் கண்டுபிடிக்கப்பட்ட பின்பு அவித்த முட்டைகள் பயன்பாட்டுக்கு வந்தன.

முட்டையில் உள்ள பாகங்கள்

 

முட்டையை உடைத்ததும்
முட்டையை உடைத்ததும்

 

முட்டையில் முட்டைஓடு, காற்றுசெல், வெள்ளைக்கரு, சலாஜா எனப்படும் மெல்இழைமம், மஞ்சள்கரு எனப்படும் ஐந்து பாகங்கள் உள்ளன.

முட்டை ஓடு

முட்டையின் வெளிப்புறத்தில் கடினமாக இருக்கும் பகுதி முட்டைஓடு ஆகும். இது முட்டையின் உள்ளிருக்கும் பொருள்களை கெட்டுபோகாமலும், உடையாமலும் பாதுகாக்கிறது.

இது கால்சியம் கார்பனேட்டால் ஆனது. மொத்த முட்டையின் எடையில் 12 சதவீதத்தை முட்டைஓடு கொண்டுள்ளது.

முட்டைஓட்டின் மேற்பரப்பு எண்ணற்ற நுண்துளைகளால் ஆனது.
முட்டையின் மேற்பரப்பானது இயற்கையாகவே மெல்லிய பூச்சால் பூசப்பட்டு நுண்துளைகள் அடைக்கப்பட்டுள்ளன. இதனால் பாக்டீரியாக்கள் உள்ளே நுழைவது தடைசெய்யப்படுகிறது.

முட்டையின் வயது அதிகரிக்கும்போது மேற்பூச்சு அழிந்து காற்று உள்ளே நுழைந்து காற்று செல்லின் அளவு அதிகரிப்பதோடு முட்டையின் ஈரப்பதம் குறைகிறது. மேலும் பாக்டீரியாக்கள் உள்ளே நுழைந்து முட்டையை கெட்டுவிடச் செய்கின்றன.

முட்டைஓட்டின் தடிமன் மற்றும் பலமானது கோழியின் வயது மற்றும் அதற்கு அளிக்கப்படும் உணவின் வகையைப் பொறுத்து இருக்கும்.

கால்சியம், விட்டமின் டி மற்றும் பாஸ்பரஸ் உள்ள உணவுகளை உண்ட கோழியின் முட்டைஓடு ஆரோக்கியமானதாக இருக்கும்.

காற்று செல்

கோழியானது முட்டையை இட்டவுடன் முட்டையின் உட்பாகங்கள் குளிர்ச்சியடைகின்றன. இதனால் முட்டைஓட்டின் கீழே உள்ள இருசவ்வுகளுக்கிடையே காற்று உட்புகுந்து கொள்கிறது. இக்காற்றானது முட்டையைச் சுற்றிலும் காற்று செல்லை உருவாக்குகிறது.

முட்டையின் தரம் அதிலிருக்கும் காற்று செல்லின் அளவினைப் பொறுத்து பிரிக்கப்படுகிறது.

குறைந்த காற்று செல்லைக் கொண்டுள்ளவை அதிக தரமுடையவையாகவும், அதிக காற்று செல்லைக் கொண்டுள்ளவை குறைந்த தரமுடையவையாகவும் பிரிக்கப்படுகின்றன.

முட்டையின் வயது அதிகரிக்கும்போது காற்று செல்லின் அளவு அதிகரிக்கும்.

முட்டையை நீரில் போடும்போது மிதந்தால் முட்டை கெட்டிருக்கும். இதற்கு காரணம் இம்முட்டையில் ஈரப்பதம் குறைந்து காற்று செல்லின் அளவு அதிகரிப்பதே ஆகும்.

வெள்ளைக்கரு

வெள்ளைக்கரு முட்டைத்திரவத்தில் மூன்றில் இரண்டு பங்கினைக் கொண்டுள்ளது. மேலும் இது முட்டையின் பாதியளவு புரதச்சத்தினைக் கொண்டுள்ளது.

இதில் கொழுப்புச்சத்து இருப்பதில்லை. இதில்தான் மஞ்சள்கரு மிதந்து கொண்டிருக்கிறது. இது மஞ்சள்கருவினைச் சுற்றிலும் நான்கு அடுக்குகளாக உள்ளது.

சலாஜா எனப்படும் மெல்இழைமம்

முட்டையின் வெள்ளைக்கருவில் காணப்படும் தடித்த சரம் போன்ற அமைப்பு சலாஜா எனப்படும். இது அடர்த்தியான வெள்ளைக்கருவின் மையத்தில் மஞ்சள்கருவினை பாதுகாப்பாக வைக்க நங்கூரமாகச் செயல்படுகிறது.

மஞ்சள்கரு

மஞ்சள் கருவின் திரவ உள்ளடக்கம் வைட்டினம் சவ்வின் மூலம் இணைக்கப்பட்டுள்ளது. இது மஞ்சள் கரு சிதைவுறாமல் பாதுகாக்கிறது.

நாள்பட்ட முட்டையில் வைட்டினம் சவ்வு வலுவிழந்து விடுவதால் மஞ்சள்கரு சிதைவடைகிறது. முட்டையின் ஊட்டச்சத்தின் பெரும்பகுதி மஞ்சள்கருவில் அடங்கியுள்ளது.

துத்தநாகம், விட்டமின் ஏ,டி,இ ஆகியவை முட்டையின் மஞ்சள்கருவில் காணப்படுகின்றன. முட்டைத்திரவத்தில் மூன்றில்
ஒருபங்கினை மஞ்சள்கரு கொண்டுள்ளது.

முட்டையின் பாதியளவு புரதத்தினையும், கொழுப்புச்சத்தினையும் இது பெற்றிருக்கிறது.

முட்டையில் உள்ள ஊட்டச்சத்துக்கள்

முட்டையில் விட்டமின் பி2(ரிபோஃப்ளோவின்), பி5(பாக்டாதெனிக் அமிலம்), பி6(பைரிடாக்ஸின்), பி9(ஃபோலேட்டுகள்), பி12 (கோபாலமைன்) ஏ ஆகியவை அதிகளவு காணப்படுகின்றன. மேலும் இதில் விட்டமின் பி1(தயாமின்), பி3(நியாசின்), டி, இ,கே போன்றவைகளும் உள்ளன.

இதில் கால்சியம், இரும்புச்சத்து, மெக்னீசியம், மாங்கனீசு, பொட்டாசியம், செலீனியம், செம்புச்சத்து, பாஸ்பரஸ், துத்தநாகம், சோடியம் போன்ற தாதுஉப்புக்கள் காணப்படுகின்றன.

இதில் நீர்த்சத்து, கொழுப்புச்சத்து, புரதச்சத்து, கார்போஹைட்ரேட் ஆகியவையும் இருக்கின்றன. மேலும் இதில் லுடீன் ஸீஸாக்தைன், சோலைன், அமினோ அமிலங்கள் போன்றவையும் காணப்படுகின்றன.

முட்டையின் மருத்துவப்பண்புகள்

முட்டையானது தனித்துவமான உயர்தர புரதச்சத்தினைக் கொண்டுள்ளது.

ஆரோக்கியமான வளர்ச்சிக்கு

முட்டையில் காணப்படும் புரதம் உள்ளிட்ட ஊட்டச்சத்துகள் உடலின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு வழிகோலுவதுடன் ஆயுள் முழுவதும் ஆரோக்கியத்துடன் வாழ காரணமாகிறது.

இதில் உள்ள புரதச்சத்தானது செல்களின் உற்பத்திக்கு காரணமாவதுடன் செல்களின் மறுவளர்ச்சி மற்றும் மறுசீரமைப்பிலும் முக்கியமானதாக விளங்குகிறது.

வாழ்நாள் முழுவதும் ஆரோக்கியமாக வாழ முட்டையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

இதய நலத்திற்கு

முட்டையானது கொழுப்பினைக் கொண்டிருந்தபோதிலும், இதனை உண்ணும்போது உடலில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவினைக் குறைத்து நல்ல கொழுப்பின் அளவினை அதிகரிக்கச் செய்கிறதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

எனவே இதனை உண்ணும்போது பக்கவாதம், மாரடைப்பு உள்ளிட்ட இதய நோய்கள் வராமல் தடுக்கப்படுகின்றன.

ஆரோக்கியமான உடல்எடை குறைப்பிற்கு

முட்டையினை உண்ணும்போது அது வயிறு நிரம்பிய உணர்வினை ஏற்படுத்துகிறது. எனவே அடுத்த சிலமணி நேரங்களுக்கு உணவு உண்பது அவசியமில்லாதது ஆகிறது.

அதேநேரத்தில் முட்டையில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உடலுக்குத் தேவையான ஆரோக்கியத்தை வழங்குகின்றன.

முட்டையை உட்கொள்ளும்போது அதிகப்படியான கலோரிகளை உட்கொள்வதைத் தவிர்த்து ஆரோக்கியமான உடல்எடை இழப்பினைப் பெறலாம்.

அறிவாற்றல் திறனை மேம்படுத்த

முட்டையில் உள்ள சோலைன் அறிவாற்றல் திறனை மேம்படுத்துகிறது. சோலைன் மூளைக்குச் செல்லும் சிக்கலான நரம்புகளின் உற்பத்தி மற்றும் செயல்திறனுக்கு மிகவும் அவசியமான ஒன்றாகும்.

முழு முட்டையானது அதிகளவு சோலைனை நமக்கு வழங்குகிறது. எனவே முட்டையினை ஒண்டு அறிவாற்றலை மேம்படுத்தலாம்.

கண்களின் பாதுகாப்பிற்கு

வயதோதிகம் ஏற்படும்போது கண்புரை நோய் மற்றும் கண் தசை அழற்சி நோய் உண்டாகிறது. முட்டையானது விட்டமின் ஏ, லடீன், ஸீஸாக்தைன் ஆகியவற்றை அதிகளவு கொண்டுள்ளது.

இவை கண்ணின் ரெக்டினா உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இதனால் முட்டையை உண்ணும்போது கண்புரை நோய், கண்தசை அழற்சி நோய் ஏற்படாமல் பாதுகாக்கிறது.

சருமம் மற்றும் கேச ஆரோக்கியத்திற்கு

முட்டையில் உள்ள விட்டமின்கள், தாதுஉப்புக்கள், அமினோ அமிலங்கள் சருமம் மற்றும் கேசத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன.

முட்டையை பற்றிய எச்சரிக்கை

ஹைப்போகொலஸ்ட்ரலோமியா நோயால் அவதிப்படுபவர்கள் முட்டையை தவிர்ப்பது நலம். அதிகப்படியான முட்டை உண்பது டைப் 2 சர்க்கரை நோயை அதிகப்படுத்துவதாக ஆய்வுகள் கூறுகின்றன.

முட்டையை தேர்வு செய்து பாதுகாப்பது

முட்டையை தேர்வு செய்யும்போது புதிதானதாக இருக்க வேண்டும். கீறிய, உடைந்த முட்டைகளை தவிர்ப்பது நலம். முட்டையை நீரில் போடும்போது மிதந்தால் அது கெட்டது என்பதை அறியலாம்.

முட்டையினை ஒரு மாதம் வரை குளிர்பதனப் பெட்டியில் வைத்திருந்து பயன்படுத்தலாம்.

ஒரு வாரத்திற்கு ஒரு டஜன் முட்டை வரை உண்ணலாம்.

ஆரோக்கியமான உணவினை உண்டு இயற்கை சூழலில் வாழும் கோழியிலிருந்து பெறப்படும் முட்டையே அதிக சத்துக்களை உடையது. ஆதலால் இயற்கை சூழலில் வளரும் கோழி முட்டை வாங்கி உபயோகிப்பதே சிறந்தது.

குறைந்த விலையில் விலைமதிப்பிலா ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ள முத்தான முட்டை உண்டு சத்தான வாழ்வு வாழ்வோம்.

வ.முனீஸ்வரன்

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.