முதலீட்டாளர்கள் மாநாடு

முதலீட்டாளர்கள் மாநாடு – 2015

இலட்சம் ரூபாய் என்பதை அதிசயமாகப் பார்க்கும் மக்கள் கோடிக் கணக்கில் இருக்கும் தமிழ்நாட்டில் இலட்சம் கோடி ரூபாய் முதலீடு பெற  முதலீட்டாளர்கள் மாநாடு நடத்துவது என்பது பாராட்டுக்குரியது.

தமிழ்நாடு தொழிலில் முன்னேறிய மாநிலமாக இருந்தாலும் தொடர்ந்து முன்னிலை வகிக்க முதலீடுகளை நாம் ஈர்த்துக் கொண்டே இருக்க வேண்டும். அதற்கான எல்லா முயற்சிகளையும் நாம் எடுக்க வேண்டும். முதலீட்டாளர்கள் மாநாடு நடத்துவது என்பது  அதில் ஒன்று.

பல வருடங்களுக்கு முன்பே பிற மாநிலங்கள் முதலீடுகளைப் பெறுவதற்குத் தீவிர முயற்சிகள் எடுக்க ஆரம்பித்துவிட்ட நிலையில் நாம் ஒன்றும் செய்யாமல் வேடிக்கை பார்பவர்களாக இருந்துவிடக் கூடாது.

முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு இரண்டுமுறை நேரம் குறித்துத் தள்ளிப் போடப்பட்டு ஒருவழியாக இப்போது செப்டம்பர் மாதம் நடைபெற்றது என்றாலும் விடாமுயற்சியோடு இதை நடத்திக் காட்டிய அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் பாராட்டுக்குரியவர்கள்தான்.

மிகப்பெரிய வெற்றி என்று அரசுத்தரப்பிலும், மிகைப்படுத்தப்பட்ட தொகை என எதிர்தரப்பிலும் அறிக்கைகள் வந்து கொண்டிருக்கும் நேரத்தில் ஒரு பெரிய மாநாட்டை, முதலீட்டினை ஈர்ப்பதற்காக ஆரம்பித்து வைத்திருப்பதை ஒரு வெற்றியாகவேக் கருத வேண்டும்.

ஆனால் இந்த முதலீட்டாளர்கள் மாநாடு ஓர் ஆரம்பம்தான் என்கின்ற புரிதல் நம் எல்லோருக்கும் வேண்டும். மாநாட்டிலே பல நிறுவனங்கள் முன்வைத்த திட்டங்களை நாம் எப்படி சாத்தியமாக்கப் போகிறோம் என்பதுதான் முக்கியம்.

தமிழ்நாடு தொழில் செய்வதற்கு ஏற்ற இடம என்று முதலீட்டோடு வருபவர்களை அலைக்கழிக்காமல் அவர்கள் வேண்டுவதை உடனுக்குடன் செய்து கொடுத்து தொழில் வளர்ச்சிக்குப் பாடுபடவேண்டும்.

தொழில் வளர்ச்சியில் பின்தங்கியுள்ள தென்தமிழகத்திற்கான அறிவிப்புகள் இந்தமுறையும் வெறும் அறிவிப்புகளாகவே போய்விடக்கூடாது; செயல்படுத்தப்பட வேண்டும். அவ்வாறு செய்தால் பல்வேறு சமூகப் பிரச்சினைகளுக்கு மறைமுகமாய்த் தீர்வு கிடைக்கும் என்பதை அரசு அறிய வேண்டும்.

வெளியிலிருந்து வரும் முதலீடுகளை மட்டும் நம்பியிராமல் உள்ளுர்த் தொழில் அதிபர்களையும் ஊக்கப்படுத்தி அவர்கள் தொழில் சிறக்கவும் அரசு வழி செய்ய வேண்டும்.மேலும் புதிதாக வரும் முதலீடுகள் சுற்றுச்சூழலுக்குத் தீங்கு விளைவிக்காத வண்ணம் இருக்குமாறும் பார்த்துக் கொள்ள வேண்டும்.

புதிதாகத் தொழில் தொடங்குபவர்களுக்காக விவசாயிகள் போன்ற நலிந்த பிரிவினர் நிலம் போன்ற தங்கள் வாழ்வாதாரங்களை சொற்பத் தொகைக்கு இழந்து விட்டுக் கஷ்டப்படுவது போன்ற சூழ்நிலையை அரசு உருவாக்கிவிடக்கூடாது.

வளர்ச்சி என்பது அனைவரையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்பதை அறிந்து அதற்கேற்ற வண்ணம் செயல்படவேண்டும். வளர்ச்சி என்பது நிலையானதாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்படவேண்டும்.

வளர்ச்சியின் ஓர் அங்கமாக நமது அடையாளத்தை நாம் முன்னிறுத்துவதையும் அரசு செய்ய வேண்டும். உதாரணமாக ‘Tamil Nadu Global Investors Meet’ என்று மேடையின் பின்புறத்தில் ஆங்கிலத்தில் எழுதிய இடத்தில் தமிழிலும் எழுதியிருக்கலாம். தமிழக அரசு முன்னிறுத்தாத தமிழை வேறு யார் தாங்கிப் பிடிக்க முடியும்?

ஒட்டுமொத்தத்தில் முதலீட்டாளர்கள் மாநாடு என்பது நல்ல துவக்கம். மாநாட்டின் அறிவிப்புகளைச் செயல்வடிவம் கொடுக்க அனைவரும் உழைக்க வேண்டும். அடுத்தடுத்து வரும் ஒவ்வொரு மாநாடும் முந்தைய மாநாட்டை விடச் சிறக்கவும் தமிழ்நாடு இந்தியாவில் முதலிடம் பெறவும் தங்களுக்குள் இருக்கும் வேறுபாடுகளை மறந்து அரசியல்வாதிகளும், அதிகாரிகளும், தொழில் அதிபர்களும் பொதுமக்களும் உழைக்க வேண்டும்.

இதுவே இன்றைய இளைஞர்களுக்கும் குழந்தைகளுக்கும் நாம் கொடுக்கும் உண்மையான பரிசாக இருக்க முடியும்.

– வ.முனீஸ்வரன்