முதலையா? நரியா?

ஒரு பெரிய ஏரி இருந்தது. அதில் முதலை ஒன்று வசித்து வந்தது. அங்குத் தண்ணீர் குடிக்க வரும் விலங்குகளை அது பிடித்துத் தின்னும்.

ஒரு நாள் நரி ஒன்று தண்ணீர் குடிக்க ஏரியில் இறங்கியது. முதலை சட்டென்று நரியின் காலைக் கவ்வியது.

நரி
நரி

“ஆ முதலை..” நரி அதிர்ச்சி அடைந்தது. தப்பிக்க வேண்டுமே என்ன செய்வது? சிந்தித்தது.

“எனது கால் என்று நினைத்து மரத்தின் வேரைப் பிடித்துள்ளாயே” என்று நரி தந்திரமாகக் கூறியது.

“அப்படியா” என்று முதலை ஏமாந்து வாயைத் திறந்தது. உடனே நரி காலை இழுத்துக் கொண்டது. ஒரே தாவலில் கரை ஏறியது.

“என்னையா பிடிக்கப் பார்க்கிறாய்?” என்று கூறி நரி சிரித்தது.

முதலைக்குக் கோபம் அதிகமானது. நரியை எப்படியாவது பிடிக்க வேண்டுமே. ஒரு திட்டம் தீட்டியது.

மறுநாள் கரையில் கிடந்த நாவல் பழங்களைத் திரட்டிக் குவியலாக்கியது. அதனுள் தன்னை மறைத்துக் கொண்டது.

வழக்கம் போல் நரி தண்ணீர் குடிக்க ஏரிக்கு வந்தது. பழக்குவியலைப் பார்த்தது. ‘எவ்வளவு பழங்கள்’ ஆவலோடு அருகில் சென்றது.

‘பழக்குவியல் அசைகிறதே’ நரி திடுக்கிட்டது. கூர்ந்து கவனித்தது.

‘ஏதோ வெள்ளையாய்த் தெரிகிறதே, முதலையின் பற்களாய் இருக்குமோ..? இது முதலைதான்’. முதலையின் தந்திரத்தை நரி புரிந்து கொண்டது.

“முதலையே என்னையா பிடிக்கப் பார்க்கிறாய்” என்று கூறிக் கொண்டே ஓடியது.

முதலைக்கு மீண்டும் ஏமாற்றம். ‘நரியைப் பிடித்தே ஆக வேண்டும். என்ன செய்வது?’ என்று யோசித்தது.

ஒரு நாள் தூரத்தில் நரி வருவதைப் பார்த்தது. உடனே மணலில் படுத்து, இறந்தது போல் பாசாங்கு செய்தது.

நரி முதலையைப் பார்த்தது. முதலை அசையவே இல்லை.

‘அருகில் மணல் ஈரமாக இருக்கிறதே. சற்று முன்னர்தான் முதலை நீரிலிருந்து வந்திருக்க வேண்டும். என்னைப் பிடிக்கத்தான் இறந்தது போல் நடிக்கிறது’. நரி ஒரு தந்திரம் செய்தது.

“இறந்து போன முதலை தன் வாலை ஆட்டுமே” என்று உரக்கக் கூறியது.

இதைக் கேட்ட முதலை உடனே தன் வாலை வேகமாக ஆட்டியது. நரி கலகல எனச் சிரித்தது.

“இறந்து போன பிறகு காது கேட்குமா? வாலைத்தான் ஆட்ட முடியுமா?” என்று கூறியது.

முதலைக்கு எல்லையில்லாத கோபம். நரியைப் பிடிக்கப் பாய்ந்தது.

“என்னை உன்னால் பிடிக்க முடியாது” என்று கூறிக்கொண்டே நரி தப்பி ஓடியது.

முதலையும் நரியும் இப்படி மாற்றி மாற்றித் தந்திரம் செய்து கொண்டே இருந்தன.

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.