முதலை – ஊர்வன அரசன்

முதலை என்றதும் அதனுடைய விரிந்த வாயும் கோரமான பற்களுமே ஞாபகத்திற்கு வரும். ஊர்வன வகையைச் சார்ந்த இவ்விலங்கு அபார தாக்கும் திறனும் வலிமையான கடிக்கும் திறனும் கொண்டுள்ளதால் ஊர்வன அரசன் என்று அழைக்கப்படுகிறது.

முதலையினம் சுமார் 24 கோடி ஆண்டுகளாக இப்பூமியில் வசித்து வருகின்றது. அதாவது டைனோசர்கள் வாழ்ந்த மெசோசோயிக் சகாப்தத்திலிருந்து முதலைகள் இப்புவியில் வாழ்ந்து வருகின்றன.

உலகின் வெப்பம் மற்றும் மிதவெப்ப மண்டலங்களில் இவை வாழ்கின்றன. ஐரோப்பா, அன்டார்டிக்கா தவிர ஆசியா, அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலிய கண்டங்களில் இவ்விலங்குகள் உள்ளன.

தற்போது உலகெங்கும் சுமார் 23 வகையான முதலையினங்கள் இருக்கின்றன. அவற்றுள் பல‌ அருகி வருகின்றன. முதலைகள் குறைந்த வேகமுடைய ஆறுகள், குளங்கள், ஏரிகள் உள்ளிட்ட நன்னீர் வாழிடங்கள், கழிமுகங்கள் உள்ளிட்ட உப்புநீர் இடங்கள் மற்றும் சதுப்பு நிலங்கள் போன்ற இடங்களில் வாழ்கின்றன.

ஊர்வன வகையைச் சார்ந்திருந்தாலும் பறவைகள் மற்றும் டைனோசர்களே இவர்களுடைய நெருங்கிய உறவினர் ஆவர். உலகில் உள்ள ஊர்வன உயிரினங்களில் முதலையே மிகப்பெரியது.

முதலையினங்களில் மிகப்பெரியதாக ஆஸ்திரேலியாவின் உப்புநீர் முதலையும், நைல் நதி முதலையும் கருதப்படுகிறது. இது சுமார் 6 மீட்டர் நீளமும், 1000 கிலோகிராம் எடையும் கொண்டது.

குள்ள முதலை எனப்படும் கருமுதலை முதலையினங்களில் மிகச்சிறியது. இது சுமார் 1.5 மீட்டர் நீளமும், 80-100 கிலோகிராம் எடையும் கொண்டது.

முதலைகளின் வாழ்க்கை முறை

முதலையானது நீரிலும், நிலத்திலும் வாழ்கிறது. எனினும் அதிக நேரத்தை நீரிலேயே செலவிடுகிறது. முதலைக்கு கண்கள், காதுகள், நாசி ஆகியவை முகத்தின் மேற்புறத்திலேயே அமைந்திருக்கின்றன.

முதலையானது கூர்மையான பார்வைத்திறனும், நன்கு கேட்கும் திறனும், திறமையான முகர்திறனும் கொண்டது. இத்திறன் மிகுந்த புலன்களே அதனை சிறந்த வேட்டையாளியாக உருவாக்கியுள்ளன.

பெரும்பாலான முதலையினங்கள் இரவில் உணவு தேடுபவையாக இருக்கின்றன. இருட்டில் அதன் கண் மற்றும் இதர புலன்கள் மிகவும் சிறப்பாக இயங்கும். மனிதர்களின் புலன்கள் இருட்டில் மிகவும் மோசமாக இயங்கும். அதனால்தான் அந்தக் காலத்தில் இரவு நேரத்தில் ஆறு, குளம் போன்ற நீர்நிலைகளுக்குச் செல்லக் கூடாது என்று பெரியவர்கள் கூறுவார்கள்.

உலகிலே சக்தி மிகுந்த கடியைக் கொடுப்பவை முதலைகளே. இதனுடைய கடியின் சக்தி சுமார் ஒரு சதுர இன்ச்சுக்கு 5000 பவுண்டுகள் ஆகும். இது சிங்கம், புலி போன்ற நிலவேட்டையாடிகளின் கடிக்கும் திறனைப் போல் மூன்று மடங்கு அதிகம்.

உலகிலேயே சக்தி வாய்ந்த கடிக்கும் திறனைப் பெற்றிருந்த போதிலும் இதனுடைய தாடைகளின் தசைகள் வலிமை குறைந்தவை. ஆதலால் முதலைகளால் சிறிய சக்தியினை எதிர்த்து எளிதாக வாயைத் திறக்க இயலாது. அதாவது முதலையின் தாடைகளை மூடி சிறிய கயிற்றினால் கட்டிவிட்டால் அவற்றால் அக்கட்டை விடுவிக்க இயலாது.

முதலைகள் இரையைப் பிடித்தது நசுக்கி துண்டுகளாக அப்படியே விழுங்கி விடுகின்றன. காரணம் நம்மைப் போல் அவற்றால் தாடைகளை சுற்றிலும் இயக்க இயலாது. மேலும் அதனுடைய நாக்கினையும் அசைக்க இயலாது.

முதலைகள் விழுங்கிய உணவினை செரிப்பதற்காக கற்களை விழுங்குகின்றன. உணவோடு கற்கள் உராய்ந்து உணவினை சிறுதுண்டுகளாக மாற்ற உதவுகின்றன.

முதலைகளின் ஆயுட்காலம் சுமார் 60-70 வருடங்கள் ஆகும். தற்போதைய முதலைகளைவிட அதனுடைய முன்னோர்கள் அளவிலும், எடையிலும் பெரியவைகளாக இருந்ததாக ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

முதலைகளின் வாய் அடிக்கடி திறந்த வண்ணமே இருக்கிறது. ஏனென்றால் அதற்கு வியர்வைச் சுரப்பிகள் கிடையாது. தன்னுடைய உடலின் வெப்பத்தை சீராக வைக்கவே வாயை திறந்து வைக்கிறது.

முதலைகள் உணவினை விழுங்கும்போது அதிகப்படியான காற்றை உள்ளிழுக்கின்றன. இக்காற்று கண்ணீரை வரவழைக்கும் லாக்ரிமால் சுரப்பியை அழுத்துகிறது. ஆதலால் முதலைகள் உணவினை விழுங்கும்போது அதனுடைய கண்களிலிருந்து கண்ணீர் வழிகிறது.

இதனையே பண்டைய நாட்களில் மக்கள், முதலையானது தன்னுக்கு உணவாகும் உயிரினை எண்ணி கண்ணீர் வடித்தபடி உண்ணுகிறது என்று கூறினர். எனவே முதலை கண்ணீர் நயவஞ்சகத்திற்கு உவமையாக இன்றும் சொல்லப்படுகிறது.

முதலைகளின் இனப்பெருக்கம்

முதலையானது மணற்பாங்கான இடத்தில் குழி தோண்டி 60-100 முட்டைகளை இடுகிறது. முட்டைகளில் இருக்கும் குஞ்சுகள் வெளிவரும் சமயத்தில் ஒருவிதமான ஒலியை எழுப்புகின்றன.

இந்த ஒலியைக் கேட்டதும் பெண்முதலை அவ்விடத்திற்கு விரைந்து வந்து, மணலிலிருந்து முட்டைகளை வெளியே எடுத்து குஞ்சுகள் வெளிவர உதவுகின்றன. மேலும் பொரித்த குஞ்சுகளை வாயில் கவ்வி நீர்நிலைகளில் கொண்டு சென்று பெற்றோர்கள் விடுகின்றனர்.

எனினும் இம்முதலைக்குஞ்சுகளில் 99 சதவீதம் பேர் ஓராண்டைக்கூட தாண்டுவதில்லை. பறவைகள், விலங்குகள், மீன்கள் மற்ற முதலைகள் இக்குஞ்சுகளை இரையாக்கி விடுகின்றன. சிறிய முதலைகளின் உயிர் பிழைத்திருக்கும் திறன் மிகக்குறைவாகவே உள்ளது.

முதலை வாயின் உணர்திறன் மனிதர்களின் கைவிரலின் உணர்திறனைவிட அதிகம். ஆதலால்தான் முதலை உணவினை கெட்டியாகவும், தன்னுடைய குஞ்சுகளை மெல்லிதாகவும் பிடித்துக் கொள்கிறது.

முதலைகள் குளிர் ரத்தப் பிராணிகள். அதாவது இவற்றால் தானாகவே உடலில் வெப்பத்தை உண்டாக்க இயலாது. மேலும் இவற்றின் உடலின் வளர்ச்சிதை மாற்றம் மிகவும் மெதுவாகவே நடைபெறுகிறது. எனவே இவற்றால் நீண்ட நாட்கள் உணவில்லாமல் உயிர் வாழ இயலும்.

மேலும் இவ்விலங்கு நீண்ட வறண்ட கோடையின் போது ஆற்றில் குழிதோண்டி ஈரபதம் மிகுந்த இடத்தில் வேனில் உறக்கத்தை மேற்கொள்கிறது. கோடைகாலம் முடிந்து தகுந்த சூழ்நிலை வரும்போது வெளியே வருகிறது.

முதலைகள் தண்ணீரில் நன்கு நீந்தும். மேலும் தண்ணீருக்குள் ஒரு மணி நேரத்திற்கு மேலாக இதனால் முழுவதுமாக மூழ்கி இருக்க இயலும். தண்ணீரில் இதனுடைய வேகம் மணிக்கு 35 கிமீ ஆகும்.

முதலைகள் உயிர் வாழ பற்கள் மிகவும் அவசியம். ஆதலால் இவற்றிற்கு பற்கள் விழுந்ததும் உடனே முளைத்து விடும். ஒரு முதலைக்கு சராசரியாக தன்னுடைய வாழ்நாளில் 8000 பற்கள் முளைக்கும்.

சுற்றுசூழலுக்கு முதலை அவசியமா?

முதலை சுற்றுசூழலுக்கு மிகவும் அவசியமான ஒன்று.

முதலைகள் ஆரோக்கியமான மீன்களைவிட, நோய்வாய்ப்பட்ட மற்றும் இறந்த மீன்களையே அதிகம் உண்பதாக‌ ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் முதலைகள் வசிக்கும் நீர்நிலைகள் நோயில்லாத ஆரோக்கியமான மீன் வளத்தைக் கொண்டிருக்கின்றன.

முதலைகள் இருக்கும் நீர்நிலைகளில் உயிர் சமநிலை செய்யப்படுகிறது. ஏதேனும் ஒருகுறிப்பிட்ட வகை மீனினம் பெருகுவதை முதலைகள் தடைசெய்வதே இதற்கு காரணம்.

மேலும் முதலைகளின் எச்சம் மீன்களுக்கு சிறந்த சத்துணவாகத் திகழ்கிறது. எனவே மீனின் பெருக்கம், வளர்ச்சிக்கு முதலைகள் நீர்நிலைகளுக்கு அவசியமாகிறது.

முதலைகள் முற்றிலும் அழிய நேரிட்டால் நீர்நிலைகளின் சுற்றுசூழல் அமைப்பு சேதம் அடைவதாக சூழியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

1970 முதல் 1980 வரை ஆசியாவில் உள்ள நீர்நிலைகள் நீர்மாசுபாடு, அணைகள் கட்டுதல், பூச்சிகொல்லிகள், மின்சாரம் தயாரித்தல், அதிகப்படியான மீன்பிடித்தல் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டன.

ஆதலால் இப்பகுதிகளில் வசித்த முதலைகள் உணவின்றி பட்டினியால் இறந்தும், வேறு இடங்களுக்கு குடிபெயர்ந்தும் சென்றன. அதன் பின்னர் ஆசிய நீர்நிலைகளில் மீன்வளம் குறைந்து மக்களின் பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது.

1990-ல் மக்களிடையே முதலைகளின் கழிவுகள் சிறந்த உரமாகவும் மீனுணவாகவும் திகழ்கிறது என்பதை எடுத்துக்கூறி முதலைகளை பாதுகாக்கும் நடவடிக்கைகள் அப்பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டன.

முதலைகளின் செரிமான மண்டலம் மிகவும் கடுமையானது. முதலைகள் விழுங்கும் விலங்குகளின் கொம்புகள், குளம்புகள், பறவைகளின் இறகுகள் ஆகியவற்றை செரித்துவிடும்.

பாக்டீரியாக்கள், வைரஸ்கள், நுண்ணுயிரிகள் ஆகியவற்றை எதிர்க்கும் அதிகப்படியான நோய் தடுப்பாற்றலை செரிமான மண்டலம் முதலைகளுக்கு வழங்குகிறது.

இந்த அதிகப்படியான நோய் எதிர்ப்பாற்றால் இறந்த விலங்குகளை இவை உண்ணும்போது அவற்றைப் பாதுகாக்கின்றன.

நீர்நிலைகளில் இறந்த விலங்குகளை உண்டு, நோய்த் தொற்றைத் தடுத்து, நீர்நிலைகளின் துப்புறவாளர்களாக இவை செயல்படுகின்றன.

உணவுச்சங்கிலியில் முதன்மை விலங்கான முதலையானது தன்னுடைய வாழிடத்தில் மீன்கள் மற்றும் ஏனைய நீர்வாழ் உயிரினங்களின் வளர்ச்சியையும், பெருக்கத்தையும் கட்டுப்பாட்டுடன் வைத்து உயிர்சூழலைப் பாதுகாக்கிறது.

வறண்ட காலங்களில் முதலைகள் முக்கியமான நீர்நிலைகளை தரைவாழ் விலங்குகளிடமிருந்து பாதுகாத்து, நீர்வாழ் உயிரினங்களின் மீளுருவாக்கத்திற்கும், கடல் வாழ்வைப் பாதுகாக்கவும் உதவுகின்றன.

பலநாடுகளில் முதலைகள் அவற்றின் தோலுக்காகவும், கறிக்காவும் பண்ணைகளில் வளர்க்கப்படுகின்றன.

முதலைகளின் தோல்களிலிருந்து காலணிகள், தோள் பைகள், பர்சுகள், பெல்ட்டுகள் தயாரிக்கப்படுகின்றன.

ஆஸ்திரேலியா, தாய்லாந்து, வியட்நாம், தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளில் முதலைக்கறி விசேசமாக உண்ணப்படுகிறது.

வலிமையான நோய் தடுப்பாற்றலைக் கொண்டுள்ள முதலைகள் மனிதன் பயன்படுத்தும் உரங்கள், பூச்சிகொல்லிகள், மாசுபடுத்திகளால் பெரிதும் பாதிப்படைகின்றன.

இன்றைக்கு வாழிடம் அழிக்கப்படுதல், கால்நடைகளின் பாதுகாப்பிற்காக முதலைகள் அழிக்கப்படுதல் போன்றவற்றால் முதலைகளின் எண்ணிக்கை அருகி வருகின்றன.

நீர்நிலைகளின் உயிர்சூழலை பாதுகாக்க முதலைகள் அவசியமானவை. மீன்வளத்தை நம்பியுள்ள மக்களின் பொருளாதாரத்திற்கும் இவை முக்கியமானவை.

ஆதலால் முதலைகளின் முக்கியத்துவம் குறித்து மக்களுக்கு விளக்கி அவற்றைப் பாதுகாத்து வளமான நீர்உயிர்சூழலை உருவாக்குவோம்.

வ.முனீஸ்வரன்