ஏதேனும் நேரலாம்
எனும் எண்ணம்
பரவியும் படர்ந்தும்
பயந்திருக்கும் பிம்பம்
தினம் கடக்கும்!
பல நேரம்
எதிர்வினையாற்றுதலின் தாமதம்
இளமை முடிந்ததென
அறிவிக்கும்!
மறைத்துக் கொண்ட
வழுக்கையில் முளைத்த
வெள்ளை கருப்பானதில்
வெறும் ஒப்பனைக்குள்
ஒளிந்து கொண்டது நிஜம்!
சுருங்கிய
மணிக்கட்டின் தோலும்
கழுத்து மடிப்பும்
கட்டியம் இயம்பின
வயதேறியதாய்!
மறுத்தலின்
தாத்பரியம்
எற்புடையதல்ல எனும்
இயற்கையின் நியதி
பொதுவானது!
பசுங்கிளை விரிக்கும்
இளமைக்கால
இனிமை நினைவொன்றின்
நிழலில் இளைப்பாறி
சற்றே மறக்கலாம்
சரேலென ஏறும் வயதை!
மறுக்கவோ தடுக்கவோ
அளிக்கப்படவில்லை
சலுகைகள் ஏதும்!
நேர்ந்தே தீர்பவைகள்
நிகழ்ந்து முடிதலும்
அவ்வாறே ஆகும்!
எஸ்.மகேஷ்
சிட்லப்பாக்கம்
சென்னை – 600064
கைபேசி: 9841708284
மின்னஞ்சல்: mahicen@yahoo.com
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!