முத்தான மாப்பிள்ளை - சிறுகதை

முத்தான மாப்பிள்ளை – சிறுகதை

“சங்கரி, இந்த தடவையாவது ரேணுவையும் மாப்பிள்ளையையும் தீபாவளிக்குக் கண்டிப்பாய் வரச்சொல்லு. நானும் மாப்பிள்ளைக்குத் தனியாக போன் பேசிச் சொல்றேன்.”

“நான் சொல்வதைவிட நீங்களும் என்னோட வந்து நேரிலே அவங்களை அழைச்சா நன்னாயிருக்குமேன்னு பார்த்தேன்”‘

“இதோ பார் சங்கரி, அரையாண்டு கணக்கு முடிக்கிற நேரம்; பாங்கில் ரொம்ப டைட் ஒர்க் எனக்கு. அதனாலதான் நீ மட்டும் போயிட்டு வான்னு சொல்றேன்.”

“நாம என்னதான் சொன்னாலும், வற்புறுத்தி அழைச்சாலும் உங்க மாப்பிள்ளை கேட்கவா போகிறார்? இதோட எத்தனை தடவை கூப்பிட்டிருப்போம்?

நேரிலேயும் போய் பலமுறைக் கூப்பிட்டும் இந்த அஞ்சு வருஷத்துல எந்தப் பண்டிகைக்காவது அவங்க எட்டிப் பார்த்திருக்காங்களா?”

“ரேணுவைத் தனியாக் கூப்பிட்டு என்ன ஏதுன்னு கேளு. மாப்பிள்ளை மனசுல எதையாவது நினைச்சுக்கிட்டிருந்தார்னா, சொல்லச் சொல்லு சங்கரி. அவர்களுக்கு என்ன கோபம்னு கேட்டுடு. ஓண்ணுமே புரியலையே?”

“அவங்க வர்றது ஒருபுறம் இருக்கட்டும். அக்கம் பக்கத்துல இருக்கிறவங்களுக்குப் பதில் சொல்லியே மாளலை.’
‘ரேணுவும் மாப்பிள்ளையும் ஏன் வரதேயில்லைன்னு கேட்கறாங்களா?”

“அப்படிக் கேட்டாத்தான் பரவாயில்லையே. என்ன சங்கரி! பெண்ணுக்குக் கல்யாணம் செஞ்சு வைச்சு அஞ்சு ஆறு வருஷம் ஆகப் போகுது. பேரன், பேத்தின்னு எதையுமே காணோமே.

டாக்டர்கிட்டே போய் குறை யாருகிட்ட இருக்குன்னு இன்னும் தெரிஞ்சுக்கலையா?ன்னு வக்கீலாத்து மாமி கேட்கிறாள்.”

சற்றே துணக்குற்ற நரசிம்மன், குழப்பம் மேலிட, என்ன பேசுவது எனத் தெரியாமல் மவுனமாக இருக்க,

ரேணுவின் தங்கை பானு, “அப்பா, நீ இல்லாமல் அம்மா மட்டும் போய்க் கூப்பிட்டால், அக்காவும் அத்திம்பேரும் ஏதாவது நினைச்சுக்கப் போறாங்க. இந்தத் தடவை நான் ரேணுவிடம் பேசிப் பார்க்கிறேன். பாங்க் வேலை முடிந்ததும் அம்மாவும் நீயும் போய் நேரில் கூப்பிட்டு வாங்களேன்” என்றாள்.

“பானு சொல்றதும் சரிதான் சங்கரி. இப்போ எதுக்கு நீ தனியாப் போகணும்? பானு, ரேணுவுக்குப் போன் பண்ணி விஷயத்தைத் தெரிஞ்சுக்கட்டும். அப்புறமா நாம் போகலாம்” என்றார் நரசிம்மன்.

அன்று மாலையே பானு போனில் ரேணுவைத் தொடர்பு கொண்டாள்.

“என்ன ரேணு, எப்படியிருக்கீங்க நீயும் அத்திம்பேரும்? இந்த வருஷமாவது நீங்க ரெண்டு பேரும் தீபாவளிக்கு வருவீங்களா? அம்மா அங்கே வர்றதா இருந்தது. திடீர்னு அப்பாவை ஹாஸ்பிட்டல்ல அட்மிட் பண்ணும்படி ஆயிடுத்து. அதனால்தான் நான் பேசறேன்.”

பானு இப்படிச் சொன்னதும், ரேணு பதட்டமானாள். “என்ன சொல்ற பானு? அப்பாவுக்கு என்ன?” எனக் கேட்க,

“முதலில் நீ உடனே புறப்பட்டு வா. அப்பாவையும் பார்த்து விட்டு, தீபாவளியையும் முடிச்சிட்டுப் போகலாம். நேரில் வந்து எல்லாவற்றையும் பேசிக்கலாம்” எனக் கூறி முடித்தாள் பானு.

மறுநாள் மாலை ஐந்து மணியளவில் ரேணுவும் ராஜசேகரும் ஆட்டோவில் வந்து இறங்கியதும் சங்கரிக்கு வியப்பும், மகிழ்ச்சியும் ஒருசேரத் தோன்றின.

“வாங்க மாப்ளே, உங்களுக்கும் ரேணுவுக்கும் இப்போதான் வழி தெரிந்ததா?” என்றதும்,

“அப்பா எப்படியிருக்கிறார் அம்மா? அப்பாவுக்கு என்ன உடம்புக்கு?” எனக் கேட்டாள் ரேணு.

அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே நரசிம்மன் உள்ளே நுழைந்தவாறே,

“வாங்க மாப்பிள்ளை, வாம்மா ரேணு” என அழைத்ததும் ரேணு அப்பாவை வியப்புடன் நோக்கி,

“என்னப்பா, உங்களுக்கு? பானு போன்ல ஹாஸ்பிட்டல்ல அட்மிட் செஞ்சிருக்கிறதா சொன்னா!” என்று கேட்க,

“பாங்க்ல வேலை டைட்டும்மா. சரியா சாப்பிடாம, தூங்காமல் ஒரே டென்ஷன். லைட்டா ஜூரம். அதுக்காக ஹாஸ்பிட்டல் போயிருந்தேன். பானு உனக்கும் போன் பண்ணி, தீபாவளிக்கு உங்களை அழைப்பதாகச் சொன்னாள்.

நாங்க ரெண்டு பேரும் இன்னும் ரெண்டு நாள்ல நேரில் வந்து கூப்பிடறதா இருந்தோம். அம்மா கிளம்பிக்கிட்டுதான் இருந்தாள். எனக்கு ஜூரம் என்றதும், பிரயாணத்தைக் கேன்சல் செஞ்சுட்டா” என்றார் நரசிம்மன்.

ரேணு பானுவை நோக்கி முறைக்க, பானு புன்னகைத்தவாறே,

“எத்தனை வருஷம் ஆச்சு? நாங்களெல்லாம் உங்களைப் பார்த்து? அப்பாவுக்கு விசேஷமா ஒண்ணுமில்லேன்னு சொல்லியிருந்தா, நீ வந்திருப்பியா? அதனாலதான் விவரமா எதுவும் சொல்லலே…” என்றவள்,

“யூ…யூ…” என விளையாட்டாகக் கையை ஓங்கியவாறே அவளை நோக்கி ஓடிய ரேணு, திடீரென மயங்கிக் கீழே சாய்ந்தாள். உடனே வீடு அல்லோலகல்லோலப்பட,

ராஜசேகர் “பயப்படாதீங்க யாரும். ரேணு கொஞ்ச நாட்களாய் இப்படித்தான். அடிக்கடி மயக்கம் வரும்.” என்றான்.

ரேணுவின் மற்றொரு தங்கையான வசந்தி உடனே ஓடிச் சென்று, அருகிலிருந்த லேடி டாக்டரைக் கையோடு அழைத்து வர, ரேணுவைப் பரிசோதித்த டாக்டர்,

“மிஸ்டர் நரசிம்மன், நீங்க தாத்தாவாகப் போறீங்க. ரேணு கர்ப்பமாயிருக்கா” என்றார்.

பானுவும் வசந்தியும் ராஜசேகர் கைகளைப் பிடித்து ‘கங்கிராட்ஸ் அத்திம்பேர்’ என வாழ்த்த, நரசிம்மன், அவர் மனைவி சங்கரி கண்களில் ஆனந்தக் கண்ணீர். மகிழ்ச்சியில் அவர்களுக்கு பேச நா எழவில்லை.

அவர்கள் மனதை அரித்துக் கொண்டிருந்த சந்தேகக் குழப்பங்களில் ஒன்று தீர்ந்து மனம் நிம்மதி அடைந்தது.

நிதானமாக மாப்பிள்ளை ராஜசேகரை நோக்கி, “என்ன மாப்பிள்ளை, தலை தீபாவளிக்கு வந்துட்டுப் போனதோடு சரி.

அஞ்சு வருஷத்துக்குப் பிறகு இப்பத்தான் எங்களையெல்லாம் பார்க்கணும்னு தோனித்தா? என்ன மாப்பிள்ளை இப்படி இருந்திட்டீங்க. எங்க மேலே ஏதாவது கோபமா?” எனக் கேட்க, ராஜசேகர் அமைதியாகச் சொன்னார்.

“மாமா நீங்க நினைக்கிற மாதிரி எல்லாம் எதுவுமில்லை. உங்க நிலைமையைப் புரிஞ்சுகிட்டுத்தான் இப்படி நடந்துக்கிட்டேன். ரேணு கல்யாணத்தை நடத்த ரொம்பச் சிரமப்பட்டுட்டீங்க.

இன்னும் ரெண்டு பெண்கள் கல்யாணத்திற்கு இருக்கிறப்போ மேற்கொண்டு உங்களுக்கு செலவு வைக்கக்கூடாதுன்னுதான் ரேணுவும், நானும் பேசி முடிவெடுத்து எங்கள் வரவைத் தவிர்த்துக் கிட்டோம்.

நாங்கள் வந்தால் உங்களுக்குச் செலவு தானே? மாப்பிள்ளையை நல்லா கவனிக்கனும்னு நினைப்பீங்க. கடன் வாங்கிச் செலவு செய்வீங்க.

கல்யாணமான கையோடு வளைகாப்பு, சீமந்தம், பிரசவம், ஆயுஷ்ஹோமம் என உங்களுக்குச் செலவு வைக்க வேண்டாமேன்னுதான் எங்களை நாங்களே கட்டுப்படுத்திக் கொண்டோம். ஆறு வருஷத்துக்குப் பிறகு இப்போதுதான் முதன்முதலாய் ரேணு தாய்மை அடைஞ்சிருக்கா.

இந்த ஆறு வருஷத்துல பானும், வசந்தியும் வேலைக்குப் போய் சம்பாதித்துக் கொண்டு வந்த பணம், உங்க வருமானம் எல்லாமே அவங்களோட திருமணத்துக்குப் பயன்படும் இல்லையா?

நாங்க வந்து போய்க்கிட்டிருந்தா, ரேணு உடனே தாய்மை அடைஞ்சிருந்தா, பானு வசந்தியோட கல்யாணத்துக்கு நீங்க சேமித்திருக்க முடியுமா?

ராஜசேகர் பேசப்பேச அவர்களின் மற்றொரு சந்தேகமும் தவிடு பொடியாகிக் கொண்டிருந்தது. ஏதோ தெய்வத்தைப் பார்ப்பதைப் போலத் தங்கள் மாப்பிள்ளையை மெய்மறந்து பார்த்துக் கொண்டு நின்றனர் நரசிம்மன்-சங்கரி தம்பதியினர்.

‘மாப்பிள்ளை அமைவதெல்லாம் கூட இறைவன் கொடுத்த வரம்’ என அவர்கள் மனதில் தோன்ற, ராஜசேகரின் கைகளைப் பிடித்தவாறே கண்களில் நீர் மல்க, “நீங்க எங்களுக்கு மூத்த மாப்பிள்ளை மட்டுமில்லே. முத்தான மாப்பிள்ளையும் கூட” என்றார் நரசிம்மன்.

ஜானகி எஸ்.ராஜ்
திருச்சி
கைபேசி: 9442254998


Comments

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.