முந்திய முதல்நடு இறுதியும் ஆனாய்

முந்திய முதல்நடு இறுதியும் ஆனாய் என்று தொடங்கும் இப்பாடல், திருவாசகத்தில் இடம் பெற்றுள்ள திருப்பள்ளியெழுச்சியின் எட்டாவது பாடலாகும்.

முக்தி எனப்படும் ஆரமுதத்தை வழங்கும் இறைவனான சிவபெருமானின் மீது, அரிமர்தன பாண்டியனின் அமைச்சரான மாணிக்கவாசகர் திருவாசக திருப்பள்ளியெழுச்சிப் பாடல்களைப் பாடினார்.

மார்கழி மாத இறைவழிபாட்டின் போது திருவெம்பாவை பாடல்கள் 20, திருப்பள்ளியெழுச்சி பாடல்கள் 10 சேர்த்து மொத்தம் 30 பாடல்கள் பாடப்படுகின்றன.

தமிழின் தொண்ணூற்றாறு பிரபந்தங்களின் வகைகளுள் திருப்பள்ளியெழுச்சியும் ஒன்று. உயிரினங்களைப் போன்று இறைவனும் இரவில் உறங்கிக் கொண்டிருப்பதாகக் கருதி, துயில் எழுப்புவதாக இப்பாடல்கள் அமையப் பெற்றுள்ளன.

அதாவது நம் உள்ளத்தில் உறங்கிக் கொண்டிருக்கும் இறைஞானத்தை தட்டி எழுப்ப எனப் பொருள் கொள்ளலாம்.

பொதுவாக திருப்பள்ளியெழுச்சிப் பாடல்களில், அதிகாலைப் பொழுதில் சுற்றுப்புறத்தில் நிகழும் நிகழ்ச்சிகள் இடம் பெற்றுள்ளன.

திருப்பெருந்துறையில் இருக்கும் சிவபெருமானின் மீது மாணிக்கவாசகர் பாடிய திருப்பள்ளியெழுச்சிப் பாடல்களும், ரங்கநாதப் பெருமானின் மீது தொண்டரடிப்பொடி ஆழ்வார் பாடிய திருப்பள்ளியெழுச்சிப் பாடல்களும் புகழ் பெற்றவை.

உயிர்களுக்கு அருள் செய்வதையே கடமையாகக் கொண்டுள்ள இறைவா, திகட்டாத முக்தி இன்பத்தின் வடிவினனே, அருளுவாயாக என்று மாணிக்கவாசகர் இறைவனிடம் வேண்டுகிறார்.

எல்லாவற்றிற்கும் பழமையாகவும், முதல், நடு, இறுதியாக விளங்குகின்ற இறைவா, உன்னை மும்மூர்த்திகளும் அறியாத போது மற்றவர்கள் எப்படி அறிந்து கொள்வர்.

.ஆனால் உன்னுடைய அடியவர்கள் எளியவராகினும் அவர்களின் இல்லங்களாகிய உள்ளத்தில் குடிகொண்டு இருக்கின்றாய். திகட்டாத இன்பமாகிய முக்தியின் வடிவினனே, பள்ளியிலிருந்து எழுந்தருளுவாயாக என்று இறைவனை மாணிக்கவாசகர் வேண்டுகிறார்.

மும்மூர்த்திகளாலும் அறிந்து கொள்ள முடியாத இறைவன், தன்னுடைய அடியவர்கள் எளியவர்களாயினும் அவர்களின் உள்ளங்களில் எழுந்தருளுவார் என்பதை இப்பாடல் உணர்த்துகிறது.

இனி திருப்பள்ளியெழுச்சி எட்டாவது பாடலைக் காண்போம்.

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

முந்திய முதல்நடு இறுதியும் ஆனாய்

மூவரும் அறிகிலர் யாவர் மற்று அறிவார்

பந்தணை விரலியும், நீயும்நின் அடியார்

பழங்குடில் தொறும் எழுந்தருளிய பரனே

செந்தழல் புரைதிரு மேனியும் காட்டித்

திருப்பெருந்துறை உறை கோயிலும் காட்டி

அந்தணன் ஆவதும் காட்டிவந்து ஆண்டாய்

ஆரமுதே பள்ளி எழுந்தருளாயே

விளக்கம்

இறைவனின் தன்மைகளும், அவரின் கருணையும் இப்பாடல் எடுத்துரைக்கிறது.

உலகில் உள்ள எல்லாவற்றிற்கும் முற்பட்டவனே, முதலும், நடுவும், முடிவும் ஆனவனே, படைப்பின் கடவுள் பிரம்மன், காத்தல் கடவுள் திருமால், அழித்தல் கடவுள் உருத்திரன் ஆகிய மூவரும் உன்னை அறிய முடிந்தவர் அல்லர். வேறு யார் அறிவர்?

இத்தகைய தன்மையை உடைய நீ, உன்னுடைய அடியவர்கள் எளியவர்களாயினும், அவர்களின் இல்லங்களாகிய உள்ளங்களில் வந்து, அணைகின்ற விரல்களை உடைய உமையம்மையோடு எழுந்தருளுகின்றாய்.

பரம்பொருளே, சிவந்த தழல் போன்ற உன் திருமேனிக் காட்சி தந்து, திருப்பெருந்துறையில் நீ அமர்ந்த திருக்கோயிலையும் காட்டி, என்னுடைய குருமூர்த்தியாக அந்தண வேடத்தையும் காட்டி, வலிய வந்து என்னை அடியவனாக ஏற்றுக் கொண்டாய்.

திகட்டாத முக்தி இன்பத்தின் வடிவினனே, பள்ளி எழுந்தருள்வாயாக.

தன்னுடைய அடியவர்கள் எளியவர்களாயினும் அவர்களின் உள்ளங்களில் மும்மூர்த்திகளாலும் அறிந்து கொள்ள முடியாத இறைவன், எழுந்தருளுவார் என்பதை இப்பாடல் உணர்த்துகிறது.

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.