முந்திரிப் பருப்பு வறுவல் சிற்றுண்டியாகவும் கொறித்து உண்ணக் கூடியதாகவும் உள்ள உணவாகும். இதனுடைய லேசான இனிப்பு கலந்த காரமான சுவை மற்றும் மொறு மொறுப்பு எல்லோரையும் கவர்ந்திழுக்கும்.
குழந்தைகளுக்கு திண்பண்டமாக இதனை பள்ளிகளுக்கும் கொடுத்து அனுப்பலாம்.
மழை மற்றும் குளிர் காலங்களில் சூடான டீ மற்றும் காப்பியுடன் இதனை சேர்த்து உண்ணலாம்.
கடைகளில் முந்திரிப் பருப்பு வறுவல் விலை சற்று அதிகம். ஆதலால் நாம் இதனை வீட்டிலேயே எளிதாக சுவையாக தயார் செய்யலாம். வாருங்கள் முந்திரிப் பருப்பு வறுவல் செய்முறை பற்றிப் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
முழு முந்திரிப் பருப்பு – 250 கிராம்
நெய் – 8 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
மிளகு – 25 எண்ணம்
செய்முறை
முதலில் வாணலியை அடுப்பில் வைக்கவும். அதில் நெய்யை ஊற்றவும். நெய் உருகியதும் அடுப்பினை சிம்மில் வைக்கவும்.
பின் அதனுடன் சிறிதளவு முந்திரிப் பருப்புகளைச் சேர்க்கவும்.
முந்திரிப் பருப்புகளை அடிக்கடி கிளறி விடவும்.
முந்திரிப் பருப்புகள் நிறம் மாறத் தொடங்கியதும் தனியே கொட்டி விடவும்.
இவ்வாறாக எல்லா முந்திரிப் பருப்புகளையும் வறுக்கவும்.
மிளகினை மிக்ஸியில் போட்டு தூளாக்கிக் கொள்ளவும்.
சூடான வறுத்த முந்திரிப் பருப்புகளுடன் தேவையான உப்பு மற்றும் மிளகுத் தூளைத் தூவவும்.
பின் எல்லா இடங்களிலும் உப்பு மற்றும் மிளகுத் தூள் பரவும் படி நன்கு குலுக்கி விடவும்.
சுவையான முந்திரிப் பருப்பு வறுவல் தயார்.
இதனைச் செய்வதற்கு குறைவான நேரமே பிடிக்கும். இதனை பார்டிகளிலும் விருந்தினர் வருகையின் போதும் விழாக் காலங்களிலும் செய்து அசத்தலாம்.
குறிப்பு
விருப்பமுள்ளவர்கள் நெய்க்குப் பதிலாக எண்ணெயைப் பயன்படுத்தி வறுக்கலாம்.
முந்திரி வறுவலுக்கு முழு முந்திரியைத் தேர்வு செய்யவும்.
விருப்பமுள்ளவர்கள் சிறிதளவு சீனியை பொடித்து மிளகு மற்றும் உப்புடன் சேர்த்து சூடான வறுத்த முந்திரிப் பருப்புகளில் சேர்க்கலாம்.
விருப்பமுள்ளவர்கள் மல்லி விதை, சீரகம், சோம்பு ஆகியவற்றை வெறும் வாணலியில் வறுத்து பொடித்து உப்பு, மிளகுத் தூளுடன் மல்லிக் கலவையும் சேர்த்து ஒரு சேரத் தூவி முந்திரிப் பருப்பு வறுவல் தயார் செய்யலாம்.
–ஜான்சிராணி வேலாயுதம்
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!