முனையடுவார் நாயனார் – போரிட்ட வருவாயால் சிவனடியார்களுக்கு தொண்டு செய்தவர்

முனையடுவார் நாயனார் போரிட்ட வருவாயால் சிவனடியார்களுக்கும் சிவாலயங்களுக்கும் தொண்டுகள் செய்த‌ வேளாளர். இவர் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர்.

முனையடுவார் நாயனார் பண்டைய சோழ நாட்டில் திருநீடூரில் வசித்த வேளாளர். திருநீடூர் தற்போது மயிலாடுதுறைக்கு அருகே உள்ளது.

பண்டைய காலத்தில் வீரத்தில் சிறந்தவர்கள் தம்மோடு மற்ற பல வீரர்களையும் சேர்த்துக் கொண்டு சிறுபடையை உருவாக்கி வைப்பர்.

மன்னர்களுக்கிடையே போர்நிகழும் சமயத்தில், அம்மன்னர்களுள் எவரேனும் இவர்களின் உதவியை வேண்டினால், அம்மன்னனுடன் சேர்ந்து போர் செய்து உதவி நாடிய மன்னனுக்கு வெற்றி கிடைக்கும்படி செய்வர்.

போரில் வென்ற மன்னனும் தனக்கு உதவிய படையுடை பெரும்வீரனுக்கு பல பரிசுகளையும் பொன்னையும் பொருளையும் வழங்கி சிறப்பிப்பர்.

கடையேழு வள்ளல்களுள் ஒருவராக வைக்கப்பட்ட மலையமான் திருமுடி காரி இத்தகைய படையைக் கொண்டிருந்த பெரும்வீரன்.

ம‌லையமான் திருமுடி காரி எந்த அரசனுக்கு துணையாக நின்று போர் புரிகிறானோ, அம்மன்னன் உறுதியாக போரில் வெற்றி பெறுவான் என்ற எண்ணம் அக்கால மக்களிடத்தில் நிலவியது.

சங்க நூல்களில் பாண்டியனுக்கு உதவிய பெரும்படை வீரன் பாண்டியன் மறவன் என்றும், சோழனுக்கு உதவிய பெரும்படை வீரன் சோழ மறவன் என்றும் குறிப்பிடப்படுகின்றனர்.

வீரத்தில் சிறந்த முனையடுவார் நாயனாரும் தம்முடன் பல வீரர்களைச் சேர்த்துக் கொண்டு பெரும்படை வீரராகத் திகழ்ந்தார்.

தம் உதவியை நாடிவரும் மன்னனின் சார்பாகப் போர் புரிந்து அம்மன்னனுக்கு பெரும் வெற்றியை ஈட்டி தந்தார்.

மன்னர்களும் பெரும்படை வீரரான முனையடுவாருக்கு பொன்னையும் பொருளையும் பரிசில்களையும் வழங்கினர்.

பல உயிர்களைக் கொல்லும் கொடிய தொழிலான போர்த்தொழிலைச் செய்தாலும், முனையடுவார் சிவனாரிடத்தும் சிவனடியவர்களிடத்தும் பேரன்பினைக் கொண்டிருந்தார்.

ஆதலால் போர் தொழிலால் கிடைத்த பொருட்கள் முழுவதையும் சிவனடியார்களுக்கு திருத்தொண்டுகள் புரிவதற்கும், சிவாலயங்களுக்கு தொண்டுகள் புரிவதற்கும் பயன்படுத்தினார்.

சிவனடியார்களை வரவேற்று அறுசுவை உண்டியளித்து, அவர்கள் வேண்டுபவற்றை முகம் காணாது வழங்கி திருதொண்டு புரிந்தார்.

போர்முனையில் எதிரிகளை அடுவதைத் தொழிலாக கொண்டிருந்ததால், இவரின் இயற்பெயர் மறைந்து முனையடுவார் என்று அழைக்கப்பட்டார். இதில் முனை என்பது போர் முனையைக் குறிக்கும்.

போரிட்டு வந்த ஊதியத்தால் சிவனடியார்களுக்குத் தொண்டுகள் செய்த முனையடுவார் நாயனார், 63 நாயன்மார்களில் ஒருவராக வைக்கப்படும் சிறப்பினைப் பெற்றார்.

முனையடுவார் நாயனார் குருபூஜை பங்குனி மாதம் பூசம் நட்சத்திரத்தில் கடைப்பிடிக்கப்படுகிறது.

முனையடுவார் நாயனாரை சுந்தரர் திருத்தொண்டத் தொகையில்அறைகொண்டவேல் நம்பி முனையடுவார்க் கடியேன்‘ என்று போற்றுகிறார்.

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.