முன்னிக் கடலைச் சுருக்கி எழுந்து உடையாள்

முன்னிக் கடலைச் சுருக்கி எழுந்து உடையாள்

முன்னிக் கடலைச் சுருக்கி எழுந்து உடையாள் என்று தொடங்கும் இப்பாடல் திருவெம்பாவையின் பதினாறாவது பாடல் ஆகும்.

திரும்பாவைப் பாடல் வாதவூரடிகள் எனப் போற்றப்படும் மாணிக்கவாசகரால் கருணை மழை பொழியும் இறைவான சிவபெருமானின் மீது பாடப்பட்டது.

கி.பி.9-ம் நூற்றாண்டில் பாடப்பெற்ற திருவெம்பாவை பாடல் இன்றைக்கும் மார்கழியில் இறைவழிபாட்டின் போது, பாடப்படுகிறது.

இறைவனின் கருணையானது எல்லோருக்கும் பயன்தரும் மழை போன்றது என்றும், மழைக்கான அறிகுறிகள் மற்றும் மழை ஆகியவற்றை இறைவியோடு ஒப்பிட்டு, இயற்கையும் இறைவனும் ஒன்றே என்பதை உணர்த்துவதாக திருவெம்பாவையின் பதினாறாவது பாடல் அமைந்துள்ளது.

“கடலின் நீரினை உறிஞ்சியதால் உமையம்மையை ஒத்த நிறத்தையுடைய மேகமே, அம்மையின் சிற்றிடை போல் மின்னி, சிலம்பொலி போல் இடித்து, புருவம் போல் வானவில்லைத் தோற்றுவித்து முந்தி வந்து அருளுகின்ற அன்னை போல் மழையை சொரிவாயாக” என்று பாவைப்பெண்கள் கூறுகின்றனர்.

இறைவன் உலக உயிர்களின் மீது காட்டுகின்ற கருணையானது மழையைப் போன்று பாரபட்சமற்றது என்று இப்பாடல் கூறுகிறது.

இனி திருவெம்பாவை பதினாறாவது பாடலைக் காண்போம்.

திருவெம்பாவை பாடல் 16

முன்னிக் கடலைச் சுருக்கி எழுந்து உடையாள்

என்னத் திகழ்ந்து எம்மை ஆளுடையாள் இட்டிடையின்

மின்னிப் பொலிந்துஎம் பிராட்டி திருவடிமேல்

பொன்னம் சிலம்பில் சிலம்பித் திருப்புருவம்

என்னச் சிலைகுலவி நந்தம்மை ஆளுடையாள்

தன்னில் பிரிவிலா எங்கோமான் அன்பர்க்கு

முன்னி அவள் நமக்கும் முன்சுரக்கும் இன்னருளே

என்னப் பொழியாய் மழையேலோர் எம்பாவாய்

 

விளக்கம்

பாவை நோன்பிருக்கும் பெண்கள், மழை பெய்யும் போது ஏற்படும் நிகழ்வுகளை இறைவியான உமையம்மையோடு ஒப்பிட்டும், மழையை இறைவனின் கருணையோடு ஒப்பிட்டும் இப்பாடலில் பாடுகின்றனர்.

“மேகமே, நீ கடலில் உள்ள நீரினை உறிஞ்சி, எம்மை உடையவளாகப் பெற்ற உமையம்மையின் நிறத்தினை ஒத்த கருமையான மழை மேகமாக மாறுகிறாய்.

எம்மை அடியவர்களாகக் கொண்ட உமாதேவியின் சிற்றிடையைப் போல மின்னி பொலிவுடன் காட்சியளிக்கின்றாய். 

எம்பெருமாட்டியின் திருவடிகளில் பொன்னாலகிய சிலம்புகளின் ஒலி போல் இடி இடித்து முழங்குகின்றாய்.

எம்மம்மையின் வளைந்த புருவங்களை ஒத்த வானவில்லை தோற்றுவித்து, தான் எப்போதும் பிரியாது இருக்கும் பெருமானின் அடியவர்களுக்கு உமையம்மை தானே முன்வந்து அருளுவதைப் போல மழையாகப் பொழிவாயாக. மழையாகப் பொழிந்து உலகம் செழித்திருக்க உதவுவாயாக.

எவருக்கும் பாராபட்சம் இன்றி பெய்யும் மழையைப் போல இறைவன் எல்லா உயிர்களுக்கும் கருணை கொண்டு அருளினை வழங்குகின்றான் என்பதை இப்பாடல் விளக்குகிறது.

 


Comments

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.