முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே என்ற இப்பாடல் திருவெம்பாவையின் ஒன்பதாவது ஆகும்.
திருவெம்பாவைப் பாடல் அரிமர்த்தன பாண்டியனின் அமைச்சராக விளங்கிய சிவனடியாரான மாணிக்கவாசகரால் முதலும் முடிவும் இல்லாத இறைவரான சிவபெருமான் மீது பாடப்பட்டது.
மாணிக்க வாசகர் திருவெம்பாவையை கிபி 9-ம் நூற்றாண்டில் பாடினார். காலங்கடந்து நிற்கும் இப்பாடலானது இன்றைக்கும் மார்கழியில் இறை வழிபாட்டின் போது பாடப்படுகிறது.
பாவை நோன்பு நோற்கும் பெண்கள், சிவனடியார்களே தங்களின் கணவர்களாக வேண்டும் என்ற தங்களின் விருப்பத்தினை நிறைவேற்றித் தருமாறு இறைவனிடம் வேண்டுவதாக திருவெம்பாவையின் ஒன்பதாவது பாடல் அமைந்துள்ளது.
“பழமையான பொருட்களுக்கு பழமையாகவும், புதுமைக்கு புதுமையாகவும் விளங்கும் இறைவரை தலைவனாகக் கொண்ட அடியவர்கள் நாங்கள்.
ஆதலால் உன்னுடைய தொண்டர்களின் திருவடிகளை வணங்குவோம். அவர்களின் உரிமையாவோம். அத்தொண்டர்களை கணவர்களாகக் கொண்டு அவர்கள் ஏவும் பணிகளைச் செய்து சிவப்பணி ஆற்றுவோம்.
இப்படிப்பட்ட வாழ்க்கையை எங்களுக்கு வழங்கினால் நாங்கள் குறை ஏதும் இல்லாதவர்கள் ஆவோம்.” என்று பெண்கள் இறைவனை வேண்டுகின்றனர்.
இறைவனுக்கு தொண்டு செய்வதைவிட அவருடைய அடியார்களுக்கு தொண்டு செய்தால் உய்நிலை கிட்டும் என்பதை இப்பாடல் உணர்த்துகிறது.
இனி திருவெம்பாவை ஒன்பதாவது பாடலைக் காண்போம்.
திருவெம்பாவை பாடல் 9
முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே
பின்னைப் புதுமைக்கும் போர்த்துஅப் பெற்றியனே
உன்னைப் பிரானாகப் பெற்றஉன் சீரடியோம்
உன்னடியார் தாள் பணிவோம் ஆங்குஅவர்க்கே பாங்கு ஆவோம்
அன்னவரே எங்கணவர் ஆவார் அவர் உகந்து
சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணிசெய்வோம்
இன்ன வகையே எமக்கு எம்கோன் நல்குதியேல்
என்ன குறையும் இலோம் ஏலோர் எம்பாவாய்
விளக்கம்
பாவை நோன்பு நோற்கும் இளம்பெண்கள் இறைவனிடம் சிவனடியாராகத் தொடர சிவனடியார்களையே தங்களின் கணவராக தந்தருளும் படி வேண்டுவதாக அமைந்தது இப்பாடல்.
பாவை நோன்பு நோற்கும் பெண்கள் இறைவனான சிவபெருமானிடம்
“உலகில் உள்ள பழமையான பொருட்களுக்கு எல்லாம் பழமையான பொருளாக விளங்கும் ஆதிப் பரம்பொருளே!
இனிவரும் காலங்களில் தோன்ற இருக்கும் எல்லா புதுமைகளுக்கும் புதுமையாக விளங்கும் தன்மை உடையே சிவபெருமானே!
உன்னை இறைவனாகக் கிடைக்கப் பெற்ற நாங்கள் உன் அடியவர்களின் திருவடிகளை வணங்கி நிற்போம். உன் அடியவர்களே எங்களுக்கு கணவனான வாய்க்கும் தகுதி வாய்ந்தவர்கள்.
நாங்கள் அவ்வடியவர்களுக்கே உரிமைப் பொருளாவோம். அவர்கள் கூறும் ஏவல்களை மிகுந்த விருப்பத்துடன் ஏற்று அவர்களது கட்டளைகளைக் கடமையாகக் கருதி நிறைவேற்றுவோம்.
உன் அடியவர்களுக்கு உரிமையாகி தொண்டு செய்யும் வாழ்க்கையை எங்களுக்கு நீ அருளினால் எந்த விதமான குறையும் இன்றி வாழ்வோம்” என்று வேண்டுதல் செய்கின்றனர்.
இறைவனை அடைய எளிமையான வழி இறைவனுடைய அடியவர்களுக்கு தொண்டு செய்தல் என்பதை இப்பாடல் விளக்குகிறது.
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!