ஒரு காட்டில் பெரிய புதர் ஒன்று இருந்தது. அதில் காட்டுக்கோழி ஒன்று பல காலமாக வாழ்ந்து வந்தது.
ஒரு நாள் இரை தேடி வெகு தொலைவுக்கு சென்று விட்டது. அங்கே நெல் வயல் ஒன்றைக் கண்டது. அந்த வயலில் நெற்கதிர்கள் நன்கு விளைந்திருந்தன.
காட்டுக் கோழி நெற்கதிர்களை வயிறு நிறையத் தின்றது. நெல்வயலின் அருகேயே நெடுநாட்கள் தங்கி விட்டது.
காட்டுக் கோழி புதருக்கு நெடுநாட்கள் வராததால் முயல் ஒன்று அப்புதரில் வசிக்கத் தொடங்கியது.
நெல் வயலில் அறுவடைக்காலம் முடிந்ததும் காட்டுக் கோழி தனது பழைய வசிப்பிடத்திற்கு திரும்பியது.
அங்கு முயல் இருப்பதைப் பார்த்தவுடன் காட்டுக் கோழிக்கு கோபம் வந்தது. உடனே அது முயலிடம் “இது எனது இடம் நீ இந்த இடத்தை விட்டு வெளியே போ” என்றது.
அதனைக் கேட்ட முயல் “நான் நெடு நாட்களாக இங்கே இருக்கிறேன். இந்த இடம் எனக்கே உரியது” என்றது.
புதர் யாருக்குச் சொந்தம் என்பதை முடிவு செய்ய இரண்டும் நடுவர் ஒருவரைத் தேடிச் சென்றன. அவை வயதான பூனை ஒன்றைக் கண்டன.
பூனை பசியால் களைத்து உட்கார்ந்து இருந்தது. பூனையிடம் கேட்டால் தங்களுக்கு நீதி கிடைக்கும் என்று முயலும் காட்டுக் கோழியும் தங்களுக்குள் பேசிக் கொண்டன.
இருவரும் பேசிக் கொண்டதை பூனை கேட்டது. தேடாமலேயே நமக்கு உணவு கிடைத்து விட்டது என மகிழ்ந்தது. கண்களை மூடி மந்திரம் கூறுவதைப் போல் முணுமுணுத்தது.
இதனைப் பார்த்த முயலுக்கும் காட்டுக் கோழிக்கும் பூனையிடம் நம்பிக்கை ஏற்பட்டது. இரண்டும் பூனையிடம் சென்று வணக்கம் கூறின.
கண் விழித்த பூனை “நீங்கள் யார்? உங்களுக்கு என்ன வேண்டும்?” என்று கேட்டது.
இரண்டும் நடந்ததைக் கூறி நீதி கேட்டன. வஞ்சக எண்ணம் கொண்ட பூனை “எனக்கு வயதாகிவிட்டது. காது சரியாகக் கேட்டகவில்லை. கொஞ்சம் என் அருகில் வந்து பேசுங்கள்” என்று கூறியது.
காட்டுக் கோழியும் முயலும் பூனையின் அருகில் சென்றன. பூனை இரண்டையும் கவ்விப் பிடிக்க முயன்றது.
ஆபத்தை உணர்ந்த முயல் அதனிடமிருந்து தப்பி விரைவாக ஓடியது. காட்டுக் கோழி சட்டெனப் பறந்து தப்பித்தது.
“நல்ல வேளை தப்பிப் பிழைத்தோம். இனிச் சண்டை இல்லாமல் ஒன்றுபட்டு இருப்போம்” என்று அவை இரண்டும் கூறிக் கொண்டன.
முயலும் காட்டுக் கோழியும் அதுமுதல் ஒற்றுமையாக புதரில் வசித்து வந்தன.
குழந்தைகளே! “நல்லவர்கள் போல் நடிப்பவர்களைப் பார்த்து நாம் ஏமாந்து விடக்கூடாது” என்பதை மேலே உள்ள கதையின் மூலம் தெரிந்து கொண்டீர்கள் தானே.
மறுமொழி இடவும்