தமிழ் கடவுளாம் முருகனின் வேறு பெயர்கள் விளக்கத்துடன் இக்கட்டுரையில் காண்போம்.
முருக பக்தரான கிருபானந்த வாரியார் முருகக் கடவுளின் வேறு பெயர்களை விளக்கத்துடன் எடுத்துக் கூறியுள்ளார். அவரின் பார்வையில் முருகனின் மற்ற பெயர்களைத் தெரிந்து கொள்வோம்.
முருகன்
முருகு என்றால் அழகு என்பது பொருள் ஆகும். ஒப்பற்ற பேரழகை உடையவன் ஆதலின் முருகன் என்று அழைக்கப்படுகிறான்.
ஆறுமுகன்
ஈசானம், தத்புருஷம், வாமதேவம், அகோரம், சத்யோஜாதகம் என்ற சிவனின் ஐந்து முகங்களோடு அதோமுகமும் சேர்ந்து ஆறுமுகங்களானது. ஆறுமுகங்களைக் கொண்ட தமிழ் கடவுள் ஆறுமுகன் என்றழைக்கப்படுகிறார்.
குகன்
குறுஞ்சி நிலத்தின் தெய்வமாம் முருகப் பெருமான் மலைக் குகைகளில் கோவில் கொண்டதால் குகன் என்றும் அழைக்கப்படுகிறார். பக்தர்களின் மனகுகையிலும் இவர் வீற்றிருப்பதால் குகன் என்றும் போற்றப்படுகிறார்.
குமரன்
இளமையை எப்போதும் உடையவன், பிரம்மச்சாரி ஆனவன், மிகவும் உயர்ந்தவன்.
குருபரன்
கு –அஞ்ஞான இருள், ரு – நீக்குபவன், ஆன்மாக்களின் அறியாமை என்ற அஞ்ஞான இருளை அகற்றுபவன்.
சிவனுக்கும், அகத்தியருக்கும், அருணகிரிக்கும் குருவாய் நின்று பிரணவத்தை உபதேசிப்பவன் குருநாதன்.
காங்கேயன்
கங்கையில் தோன்றியதால் கங்கையின் மைந்தன் காங்கேயன் என்று முருகப் பெருமான் அழைக்கப்படுகிறான்.
கார்த்திகேயன்
கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்டவன் ஆதலின் கார்த்திகைப் பெண்களின் மைந்தன் கார்;த்திகேயன்.
கந்தன்
கந்து யானை கட்டும் தறியைக் குறிக்கும். கந்தன் என்பவன் ஆன்மாக்களை கட்டும் தறியாய், அவர்களுக்கு பற்றுக்கோடாய் இருப்பவன்.
பகைவர்களின் வலிமையை அழிப்பவன் ஸ்கந்தன். தோள் வலிமை மிக்கவன். ஆறு திருமேனியும் ஒன்றானவன்.
கடம்பன்
கடம்ப மலர்களை அணிந்தவன் ஆதலால் கடம்பன் என்று அழைக்கப்படுகிறான்.
சரவண பவன்
சரம் என்றால் நாணல், வனம் என்றால் காடு, பவன் என்றால் தோன்றியவன் என்பது பொருளாகும்.
நாணல் மிகுந்த தண்ணீர் உள்ள காட்டில் தோன்றியவன் சரவண பவன் என்றழைக்கப்படுகிறான்.
சுவாமி
ஸ்வம் என்றால் சொத்து. எல்லா உலகங்களையும், எல்லா உயிர்களையும் சொத்தாக உடையவன். சுவாமி என்ற பெயர் முருகனுக்கு மட்டுமே உரியது. சுமாமி உள்ள மலை சுவாமி மலை.
சுரேஷன்
தேர்களின் தலைவன் சுரேஷன்
செவ்வேள்
செம்மையான நிறத்தினை உடையவன். ஞானச் செம்மையை உடையவன் செவ்வேள்.
சேந்தன்
செந்தழல் பிழம்பாய் இருந்தவன். அதாவது சிவனின் நெற்றிக்கண்ணிலிருந்து தோன்றிய போது செந்தழல் பிழம்பாய் இருந்தவன் சேந்தன்.
சேயோன்
சேய் என்றால் குழந்தை என்பது பொருளாகும். குழந்தை வடிவான முருகன் சேயோன் என்றழைக்கப்படுகிறான்.
விசாகன்
விசாக நட்சத்திரத்தில் ஒளியாய் உதித்தவன்.
வேலவன், வேலன்
வேலினை உடையவன் வேலன். வேலானது எதனையும் வெல்லும் ஆற்றல் உடையது.
அறிவாகவும், ஞானத்தின் வடிவமாகவும் விளங்கும் வேல், கூர்மை, அகலம், ஆழம் என்னும் மூன்றும் உடையது.
முத்தையன்
முத்தானது இயற்கையாகவே ஒளிரும் தன்மையுடையது. மற்ற மணிகள் பட்டை தீட்டினால்தான் ஒளிரும். முத்தினைப் போல் இயற்கையாகவே ஒளிர்பவன் முத்தையன்.
சோமாஸ்கந்தன்
சிவன் உமை முருகனின் வடிவம் சோமாஸ்கந்தன். உலக நாயகர்களாம் அம்மைக்கும், அப்பனுக்கும் இடையில் முருகன் அமர்ந்த திருக்கோலம். சோமாஸ்கந்தன் ஆனந்தத்தின் வடிவம்.
சுப்பிரமணியன்
சு என்பது மேலான, பிரம்மம் என்பது பெரிய பொருளிலிருந்து, நியம் தோன்றி ஒளிர்வது, மேலான பெரிய பிரம்மத்திலிருந்து தோன்றி ஒளிர்பவன் சுப்ரமணியன்.
வள்ளற்பெருமான்
முருகன், மண்ணுலகில் அவதரித்த வள்ளியாகிய இச்சா சக்தி மூலம் இக நலன்களை வழங்குகிறான். அவன் விண்ணுலக மங்கையான தெய்வயானையாகிய கிரியா சக்தி மூலம் பரலோக நன்மைகளை வழங்குகிறான்.
தன்னுடைய வேலான ஞானசக்தி மூலம் முக்தியையும் வழங்குகிறான். இவ்வுலக உயிர்கட்கு தேவையானவற்றை வழங்குவதால் வள்ளற்பெருமான் என்று அழைக்கப்படுகிறான்.
ஆறுபடை வீடுடையோன்
நம்முடைய உடலில் உள்ள ஆறு ஆதாரங்களான மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி, ஆக்ஞை ஆகியவற்றின் வடிவாக ஆறுபடை வீடுகளாய் கொண்டுள்ளார்.
ஆறுபடை வீடுகளைப் பெற்றுள்ளதால் ஆறுபடை வீடுடையோன் என்றழைக்கப்படுகிறார்.
மயில்வாகனன்
ஆணவத்தின் வடிவமான மயிலினை அடக்கி வாகனமாகக் கொண்டதால் மயில்வாகனன் என்றழைக்கப்படுகிறார். முருகப் பெருமான் ஆணவத்தின் வடிவமான மயிலையும், கன்மத்தின் வடிவமான யானையையும், மாயையின் வடிவமாக ஆட்டினையும் அடக்கி வாகனமாக் கொண்டவர்.
தமிழ்தெய்வம்
தமிழின் வடிவம் முருகன் ஆவான். தமிழ் மொழியின் 12 உயிரெழுத்துக்களும் முருகப்பெருமானின் 12 தோள்களைக் குறிப்பிடுகின்றன.
18 மெய்எழுத்துக்கள் முருகனின் 18 கண்களைக் குறிக்கின்றன. அதாவது முருகப் பெருமான் சிவனின் நெற்றிக் கண்ணிலிருந்து தோன்றியவர் ஆதலால் இவருக்கும் நெற்றியில் கண் உண்டு. ஆதலால் ஆறு முகங்களிலும் முகத்திற்கு மூன்று வீதம் மொத்தம் 18 கண்களை உடையவர்.
தமிழின் இனஎழுத்துக்கள் ஆறும் இவருடைய 6 முகங்களைக் குறிக்கின்றன. ஃ என்ற ஆயுத எழுத்து வேலினைக் குறிக்கிறது. இதனால் முருகன் தமிழ்தெய்வம் என்று போற்றப்படுகிறார்.
எல்லா வல்ல பரம்பொருளான முருகக்கடவுளை வழிபட்டு வாழ்வின் நன்மைகள் அனைத்தும் பெறுவோம்.