முருகன் பக்தி பாடல்கள்

முருகன் பக்தி பாடல்கள் நம் மனதிற்கு நிம்மதியும் மகிழ்ச்சியும்  தருபவை. முருகன் பக்தி பாடல்கள் சிலவற்றைக் கீழே காணுங்கள். அவற்றைப் பாடி மகிழுங்கள்!

வேல் வேல் வடிவேல் வேதாந்த வடிவேல்

 

வேல் வேல் வடிவேல் வேதாந்த வடிவேல்

நாதாந்த முடிமேல் நான்மறைகள் போற்றும் வேல்

தேவியவ‌ள் தந்த வேல் தேவர் மூவர் போற்றும் வேல்

குழந்தைக் குமாரவேல் குன்று தோறுமாடும் வேல்

 

பாலகனின் கைவேல் பாவவினை தீர்க்கும் வேல்

கந்தன் கதிர்வேல் கவலைகளைப் போக்கும் வேல்

வேல் வேல் வெற்றிவேல் தேவர்சிறை மீட்ட வேல்

வாரி வழங்கும் வேல் வள்ளல் குணம் கொண்ட வேல்

 

ஆடும்பரிவேல் ஆபரணம் தரித்த வேல்

அழகன் முருகன் வேல் அள்ளியள்ளித் தந்த வேல்

மின்னும் கதிர்வேல் சண்முகன் சதுர்வேல்

சங்கடங்கள் தீர்க்கும் வேல் சத்ருசங்கார வேல்

முத்துக்குமார வேல் முன்னின்று காக்கும் வேல்

வானோர் தொழுத வேல் ஞானம் அருளும் வேல்

 

அழைக்கட்டுமா அழைக்கட்டுமா!

 

அழைக்கட்டுமா!

சாமி அழைக்கட்டுமா! – அந்த

ஆறுமுக வேலவனை

அழைக்கட்டுமா!

 

ஆறுபடை வீட்டோனை அழைக்கட்டுமா!

சாமி அழைக்கட்டுமா! – அந்த

ஆனைமுகன் தம்பியை

அழைக்கட்டுமா!

 

இனிய வடிவேலவனை அழைக்கட்டுமா!

சாமி அழைக்கட்டுமா!

அந்த இடும்பாயுதனை

அழைக்கட்டுமா!

 

ஈராறு கையனை அழைக்கட்டுமா!

சாமி அழைக்கட்டுமா! – அந்த

ஈசனுமை பாலகனை

அழைக்கட்டுமா!

 

உள்ளங்கவர் கள்வனை அழைக்கட்டுமா!

சாமி அழைக்கட்டுமா! – அந்த

உல்லாச குமரனை

அழைக்கட்டுமா!

 

ஊமைக்குபதேசித் தோனை அழைக்கட்டுமா!

சாமி அழைக்கட்டுமா! – அந்த

ஊனமெல்லாம் அழிப்போனை

அழைக்கட்டுமா!

 

எட்டுக்குடி வேலவனை அழைக்கட்டுமா!

சாமி அழைக்கட்டுமா! – அந்த

எங்கும் நிறை இறைவனை

அழைக்கட்டுமா!

 

ஏறுமயில் வாகனனை அழைக்கட்டுமா!

சாமி அழைக்கட்டுமா! – அந்த

ஏழைப்பங்காளனை

அழைக்கட்டுமா

 

ஐயங்கரணுக்கிளைவனை அழைக்கட்டுமா!

சாமி அழைக்கட்டுமா! – அந்த

அன்பர்கள் நேயனை

அழைக்கட்டுமா!

 

ஒப்பில்லா மணியை அழைக்கட்டுமா!

சாமி அழைக்கட்டுமா! – அந்த

ஒய்யார நாதனை

அழைக்கட்டுமா!

 

ஓங்காரப் பொருளோனை அழைக்கட்டுமா!

சாமி அழைக்கட்டுமா! – அந்த

ஓம் என்ற மந்திரத்தை

அழைக்கட்டுமா!

 

ஒளவைக்கு உபதேசித்தோனை அழைக்கட்டுமா!

சாமி அழைக்கட்டுமா! – அந்த

ஆவினன்குடியோனை

அழைக்கட்டுமா!

 

கண்கண்ட தெய்வத்தை அழைக்கட்டுமா!

சாமி அழைக்கட்டுமா! – அந்த

கருணைக் கடலை

அழைக்கட்டுமா!

 

சிங்கார வேலவனை அழைக்கட்டுமா!

சாமி அழைக்கட்டுமா! – அந்த

சிவகுருநாதனை

அழைக்கட்டுமா!

 

பக்தர்கள் அனைவரும் அழைக்கட்டுமா!

சாமி அழைக்கட்டுமா! – அந்த

பழநியம் பதியோனை

அழைக்கட்டுமா!

 

 மயில்

 

மயில் வந்து ஆடுது மலைமேலே

குயில் வந்து பாடுது சிலைபோலே

வேல் வந்து மின்னுது கண்ணெதிரே – என்

வேலனைக் காணேனோ என்னெதிரே?

 

திருப்புகழ் பாடியே கைதொழுதேன்

கருப்புகல் நீக்கிட மெய்தொழுதேன்

விருப்புடன் வேண்டியே பாடுகிறேன்

விராலிமலை நோக்கி ஓடுகிறேன்!

 

சோலையில் வந்தால் குறைதீரும் -அந்த

சுந்தரப் புன்னகை நிறைவாகும்

மாலையில் மயங்கியே வாடுகிறேன்

மையலில் உன்னையே தேடுகிறேன்.

 

வள்ளிக்கு வாய்த்த வடிவழகா!

அள்ளிட ஆவி துடிக்குதப்பா

சொல்லிச் சொல்லி என்ன பயன்?

நில்லு நில்லு என்கண்ணெதிரே!

 

ஓம் முருகா ஓம் ஓம்

 

ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் ஓம்

ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் ஓம்

 

தேவியை மணந்த இடம் பரங்கிரியாம் தேசம்

அது தேவ கைலாசம் அங்கு

சிறக்குதையா மார்பினிலே செண்பகத்தின் வாசம்

 

கந்தனவன் வென்ற இடம் கடல்பாடும் தேசம்

அது கருணைக் கைலாசம் அங்கு

கமழுதையா மார்பினிலே கடம்பமலர் வாசம்

 

பழத்துக்காகப் போட்டியிட்டது தென்பழனி தேசம்

அது பக்தர் கைலாசம் அங்கு

பகட்டுதய்யா மார்பினிலே பாரிஜாத வாசம்

 

ஆசானாய் வந்த இடம் சுவாமிமலை தேசம்

அது அறிவுக் கைலாசம் அங்கு

அடிக்குதய்யா மார்பினிலே அல்லிமலர் வாசம்

 

குன்று தோராடுவது குமரனது தேசம்

அது கோடிக் கைலாசம் அங்கு

கொஞ்சுதய்யா மார்பினிலே குறிஞ்சுமலர் வாசம்

 

பாலகுமாரன் பாவலர் தோழன்

 

வேல் முருகா வேல் முருகா

வேல் முருகா வேல்

வேல் முருகா வேல் முருகா

வேல் முருகா வேல்

வேல் முருகா வேல் முருகா

வேல் முருகா வேல்

 

வேல் முருகா மாப்பழனி

வேல் முருகா வேல்

பழனிமலை மேலே ஒரு

பால குமாரன்

பாலகுமாரன் முருகன்

பாவலர் தோழன்

அழகு மயில் மேலேவரும்

ஆனந்த ரூபன்

தானெங்கள் ஈசன் (வேல் முருகா)

 

குடம்குடமாய்ப் பால்குளிக்கும்

பாலகன் அவனே – ஒரு

குறத்திப்பெண்ணைத் துரத்திச்சென்ற

வாலிபன் அவனே

இடம்வலமாய் மாறிமாறி

வேலுடன் நமையே – தினம்

இரவு பகல் பாதுகாக்கும்

காவலன் அவனே (வேல் முருகா)

 

பூ அளந்த கைகளுக்குப்

பொன்னை அளப்பான்

பொன்னளந்து தந்தவர்க்குப்

புகழை வளர்ப்பான்

நானளந்த அளப்பையெல்லாம்

நாளும் சகிப்பான் -அது

தேனளந்த கவிதை என்று

சிந்தை களிப்பான் (வேல்முருகா)

 

 

பழனிமலை நடந்து செல்வோம்

 

முருகா முருகா வேல்முருகா

முருகா முருகா வேல்முருகா

 

நல்ல தமிழ்ச் சொல் லெடுத்து நாளும் பாடு

நம் தலைவன் முருகனையே நாடி ஓடு

வல்ல கதிர் வேலவனும் வள்ளி யோடு

வந்து நலம் தந்தருள்வான் வாகை யோடு

 

அஞ்சு வகைக் கனியெடுத்து அமுது செய்வோம்

ஆறுமுகன் மேனியிலே தொழுது பெய்வோம்

கொஞ்சு மெழில் குமரனுக்கு பூக்கள் கொய்வோம்

கூறுதமிழ்ச் சொல்லெடுத்து பாக்கள் நெய்வோம்

 

தண்ணாரும் பழநி மலை நடந்து செல்வோம்

சாலை வழித் துன்பமெல்லாம் கடந்து செல்வோம்

கண்ணான முருகனையே கொஞ்சி மகிழ்வோம்

கருணை மழை பொழிகவெனக் கொஞ்சிக் கேட்போம்

 

கல்லழுத்தித் தாரரித்துத் தோலுந் தேயும்

காலிரண்டும் கொப்புளித்து கன்றிப் போகும்

வெல்ல மெனும் கந்தனவன் பேரைக் கூவ

வேதனைகள் தீர்ந்து நடை வேகங்கூடும்

 

கந்தனையே சொந்தமென எண்ணும் போது

கவலையெனும் கடலதுவும் வற்றிப் போகும்

சிந்தனையிற் தெளிவு வரும் செல்வஞ் சேரும்

செரு முனையில் பகையழிந்து வெற்றி கூடும்.

 

அண்ணனுக்கும் யானையெனு மாறுதலை

அப்பனுக்கும் கங்கையெனு மாறுதலை

சண்முகனாம் கந்தனுக்கு மாறுதலை

தந்தருள்வான் எந்தனுக்கு மாறுதலை.

 

 

தேனால் அபிஷேகம்

 

தேனால் அபிஷேகம் நான் செய்ததின் பலனாலோ

தானாக பாமாலை உன் மீதே பாடுகிறேன்

 

வானாதி தேவர்களும் பல வரம் பெற்ற முனிவர்களும்

வந்தே பழனியிலே உன்னை வணங்கியே வழிபடுவார்

 

தும்பிக்கையான் தம்பியாய் நீ பொய்கையில்அவதரித்தாய்

உன்னை நம்பியே ஓடிவந்தேன் ஆறுமுக வேலவனே

 

மானிடராய் பிறந்து மந்த மதியால் அலைந்த என்னை

வந்தே கைகொடுத்து சன்மார்க்கத்தைத் தந்தருள்வாய்

 

தேர்ஒன்று செய்திடுவேன் அதில் தீபங்கள் ஏற்றி வைப்பேன்

பொய்கை ஆற்றினிலே அதை பாங்குடன் அனுப்பி வைப்பேன்.

 

ஊன் உடல் மறைந்தாலும் என்உயிர் உந்தன் பாதம் வரை

வான்புகழ் கொண்டவனே இந்த வரங்களைத் தந்தருள்வாய்

 

 

தேவனவன் காட்சி

 

வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்

வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்

 

பழனி என்றசொல் எனக்கு ஜீவமந்திரம்-அதைப்

பாடப்பாட எனக்கு வரும் வென்றிடும் திரம்

அழகுமுருகன் ஆண்டருளும் அழகு மாமலை

அவனிதனில் அதற்கிணையாய் ஏது மாமலை

 

ஞானத்திற்கும் மோனத்திற்கும் விளக்கம் பழனியில்

நாடுநலம் அத்தனையும் கிடைக்கும் பழனியில்

தேனமுத அபிஷேகம் தெய்வப் பழனியில்

தேவனவன் காட்சியதோ தினமும் பழனியில்

 

திருப்புகழின் முழக்கமெல்லாம் மேவும் பழனியில்

தேவன் நாமம் சொல்லிக் குயில் கூவும் பழனியில்

விருப்புடனே தொழுதவர்க்கோ வெற்றி பழனியில்

விளங்கும் நெற்றி நீறுமணக்கும் வேந்தன் பழனியில்

முருகன் பக்தி பாடல்கள் பாடுவோம். ஆனந்தக் கூத்தாடுவோம்.

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.