அலைபேசும் செந்தூரின் கடலோரம் நின்றாடும்
முகில்போல உனை போற்றி நான்பாடவா?
நிலையாது செல்கின்ற அவ்வலை சொல்லும் கதைபோல
நினைப்பாடும் மொழியாக நான் மாறவா?
மலைமேலே நீவாழும் பரங்குன்றின் ஒளிபோல
உனக்கான விளக்காக நான் மாறவா?
கலையாத அழகோடு கள்ளழகர் சோலைதனில்
கருங்குயிலின் கானமென நான் மாறவா?
மலைவாழை குலைசூழும் ஆவினன்குடி தன்னில்
மணம்வீசும் சந்தனமாய் நான் மாறவா?
மலையேழில் குடிகொண்ட மாமனவன் வேய்குழலின்
ஒலியாக தணிகையிலே நான் மாறவா?
பிழையே நான் செய்தாலும் பெரும்பாவம் என்றாலும்
பெருமானே அதைபோக்கி எனைக் காக்கவா
தொலைந்தேநான் போனாலும் துவண்டேநான் வீழ்ந்தாலும்
தோள்பற்றி எனை நிறுத்த நீ ஓடிவா
சிலை ஒன்றில் விளையாடும் உளிபோல என்வாழ்வின்
துயர்நீக்கி எனைகாக்க அருள்வாய் அய்யா
தலை நிமிர்ந்து வெல்வதற்கோ தலைதாழ்த்தி வணங்குதற்கோ
தகவாக நின்னருளை தருவாய் அய்யா
– செந்தூர்க்கவி
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!