முருக நாயனார் வேளை தவறாமல் மாலையிட்டு செய்த வழிபாட்டினால் இறைபதம் பெற்ற அந்தணர்.
முருக நாயனார் சோழ நாட்டில் திருப்புகலூர் என்னும் ஊரில் வேதியராகப் பிறந்தார். திருப்புகலூர் தற்போது நாகபட்டினம் மாவட்டத்தில் அமைந்துள்ளது.
திருப்புகலூரில் உள்ள சிவலாயத்தில் மூலவர் அக்னிபுரீசுவரர்.
இவரைத் தவிர பூதேசுவரர், வர்த்தமானேசுவரர், பவிசுயேசுவரர் என்னும் திருநாமங்களைக் கொண்டு முறையே இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் என்னும் மூன்று காலங்களின் தலைவனாக மூன்று சந்திகளில் சிவனார் அருளுகிறார்.
அக்னிபுரீசுவராகிய கோணப்பிரானும், வர்த்தமானேசுவரரும் தேவாரப் பதிகங்களால் போற்றப் பெற்றவர்கள். வர்த்தமானேசுவரரை திருஞானசம்பந்தர் ஒரு பதிகத்தில் போற்றி துதித்திருக்கிறார்.
முருகனார் திருப்புகலூரில் கோவில் கொண்டுள்ள வர்த்தமானேச்சுரிடம் பேரன்பு கொண்டிருந்தார். இவர் நிலைத்த வீடுபேற்றினை அடைய சிவதொண்டு செய்வதே வழியாகும் என்பதில் உறுதி கொண்டிருந்தார்.
ஆதலால் அவர் சிவனாருக்கு செய்யும் தொண்டுகளில் ஒன்றான, அன்று அலர்ந்த பூக்களைக் கொய்து மாலைகள் தொடுத்து வழிபடும் முறையை தவறாது கடைப்பிடித்து வந்தார்.
முருகனார் தினமும் அதிகாலையில் எழுந்து நீராடிவிட்டு நந்தவனம் செல்வார். நீர் மற்றும் நிலத்தில் வாழும் தாவரங்களில் அன்று அலர்ந்த பூக்களை பறித்து தனித்தனியாகப் பிரித்து எடுத்துக் கொண்டு வருவார்.
அப்பூக்களைக் கொண்டு இறைவனுக்கு தலையில் அணியும் இண்டை, மார்பில் அணியும் தார், பெரிய மாலையாகிய தாமம் என மாலைகளில் பலவகைகளைத் தொடுப்பார். பூசை நேர அலங்காரத்திற்கு ஏற்ப வகை வகையான மாலைகளைத் தொடுத்து இறைவனுக்கு சாற்றி கண்ணீர் மல்க வழிபடுவார்.
மற்ற நேரங்களில் திருஐந்து எழுத்தை விடாது உச்சரித்துக் கொண்டே இருப்பார். வர்த்தமானேசுரருக்கு இடைவிடாது பூமாலை சாற்றும் பணியை செய்து கொண்டே வந்தார் முருகனார்.
இவர் சிவனடியார்கள் வந்து தங்குவதற்கும் திருமடம் ஒன்றை திருப்புகலூரில் கட்டுவித்தார். அம்மடத்திற்கு ஆளடைய பிள்ளையான திருஞானசம்பந்தர் வந்தபோது அவரை எதிர்கொண்டு அழைத்தார்.
அம்மடத்தில் திருஞானசம்பந்தர் தங்கியிருந்த சமயம் திருநாவுக்கரசர் அங்கு வர சம்பந்தரும் முருகனாரும் நாவுக்கரசரை எதிர்கொண்டு வரவேற்றனர்.
திருநீலநக்கர், சிறுதொண்டர் ஆகிய நாயன்மார்களும் வந்து தங்கியிருந்து திருபுகலூர் சிவனாரை வழிபட்டுச் சென்றுள்ளனர்.
திருஞானசம்பந்தர் முருகனாரின் சிவபக்தியைக் கண்டு அவர் மேல் மிகுந்த அன்பு கொண்டார்.
திருநல்லூரில் நடைபெற்ற திருஞானசம்பந்தர் திருமண நிகழ்ச்சியில் முருக நாயனார் கலந்து கொண்டார். அத்திருமணத்தின் போது எழுந்த இறைசோதியில் முருகனாரும் மற்றவர்களுடன் இணைந்து சிவசோதியில் கலந்தார்.
இறைவனிடம் ஒன்றியவர்களுக்கு எத்தொண்டும் சமமானதே. ஆதலாலே முருகனார் திருஐந்தெழுத்தை உச்சரிப்பதையும், பூமாலைகள் தொடுத்து சாற்றி வழிபடுதலையும் சமமாகவே கருதினார்.
திருப்புகலூரில் வர்த்தமானேசுவரருக்கு எதிரே முருகனாரின் சிலை ஒன்று இன்றும் உள்ளது. அவ்வூரில் உள்ள கல்வெட்டில் முருகனார் கட்டிய திருமடத்தைக் குறிப்பிடும் வகையில் நம்பி முருகன் திருமடம் என்ற குறிப்பு காணப்படுகிறது.
முருக நாயனார் குருபூஜை வைகாசி மாதம் மூலம் நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது.
தன்னுடைய இடைவிடாத பூமாலை சாற்றும் தொண்டால் இறையடியைப் பெற்ற முருக நாயனாரை சுந்தரர் திருத்தொண்ட தொகையில் ‘முருகனுக்கும் (உருத்திர பசுபதிக்கும்) அடியேன்’ என்று போற்றுகிறார்.