முருங்கைக்காய்

முருங்கைக்காய் என்றவுடன் முருங்கை சாம்பார் தான் நம் எல்லோர் நினைவிலும் நிற்கும். இக்காயினைக் கொண்டு செய்யப்படும் குழம்பு வகைகள் தனிசுவையையும், மணத்தையும் பெறுகின்றன.

முருங்கைக்காய் குறைவான விலையில் கிடைக்கும் அதிக சத்து நிறைந்த காயாகும்.

முருங்கை மரவகைத் தாவரத்திலிருந்து கிடைக்கிறது. முருங்கை மரமானது வெப்ப மண்டல மற்றும் துணை வெப்ப மண்டலத்தில் நன்கு வளரும். இது வறட்சியைத் தாங்கி வளரக்கூடிய இலையுதிர் மரவகையைச் சார்ந்தது.

முருங்கை மரமானது பொதுவாக எல்லா மண்ணிலும் வளரும் இயல்பினைப் பெற்றிருந்தாலும் மணல் சார்ந்த மண் வகையில் நன்கு செழித்து வளரும். முருங்கை மரமானது 30 அடி உயரம் வளரக்கூடியது.

முருங்கை மரமானது பொதுவாக பயிர் செய்து ஆறு மாதங்களில் காய்க்க தொடங்கி விடுகிறது. முருங்கையில் பழுப்பு வெள்ளை (கிரீம்) நிறத்தில் பூக்கள் பூக்கின்றன.

 

முருங்கைப்பூ
முருங்கைப்பூ

 

இப்பூக்களிலிருந்து நீளமான குச்சி போன்ற தோற்றத்துடன் சதைப்பற்றான முருங்கைக்காய் காய்க்கிறது.

முருங்கைக்காய்
முருங்கைக்காய்

 

 

இக்காயினுள் கூழ் போன்று மென்மையான சதைப்பகுதியும், அதனுள் உருண்டையான வெளிப்புறத்தில் சிறகுகள் போன்ற தோற்றத்துடன் கூடிய விதைகள் காணப்படுகின்றன.

முருங்கைக்காயானது இளமையாக இருக்கும்போது பச்சை நிறத்திலும், முதிர்ந்த நிலையில் பழுப்பு நிறத்திலும் காணப்படுகின்றது.

 

உலர்ந்த‌ முருங்கைக்காய்
உலர்ந்த‌ முருங்கைக்காய்

 

முருங்கையின் அறிவியல் பெயர் மோரிங்கா ஓலிஃபெரா என்பதாகும். முருங்கைமரம் மோரிங்கேசே என்ற தாவரக் குடும்பத்தைச் சார்ந்தது. முருங்கையின் தாயகம் இந்தியாவின் இமயமலைப் பகுதியாகும்.

இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேசம், தாய்லாந்து, தைவான், பிலிபைன்ஸ் மற்றும் ஆப்பிரிக்கா, தென்அமெரிக்கா நாடுகளிலும் முருங்கை பயிர் செய்யப்படுகிறது.

முருங்கைக்காயானது ரோம, கிரேக்க, எகிப்திய நாகரிகங்களிலும் பயன்படுத்தப்பட்டது.

முருங்கைமரத்தின் வேர், பட்டை, இலை, காய், விதைகள் என எல்லா பாகங்களும் மனிதனுக்கு பயன்படுவதால் இம்மரம் அதிசய மரம், பிரம்மவிருட்சம், கற்பகத்தரு என்றெல்லாம் போற்றப்படுகிறது.

முருங்கையின் விதையிலிருந்து சமையல் எண்ணெய் எடுக்கப்படுகிறது. முருங்கை மரத்தின் கிளைகளின் மூலமாகவும், விதைகளின் மூலமாகவும் புதிய முருங்கை கன்று உற்பத்தி செய்யப்படுகிறது.

 

முருங்கைக்காயில் உள்ள ஊட்டச்சத்துக்கள்

முருங்கைக்காய் அதிகளவு விட்டமின் சி-யைக் கொண்டுள்ளது. மேலும் இக்காயில் விட்டமின்கள் ஏ, பி1(தயாமின்), பி2(ரிபோஃப்னோவின்), பி3(நியாசின்), பி6(பைரிடாக்ஸின்), ஃபோலேட்டுகள் ஆகியவை காணப்படுகின்றன.

இதில் தாதுஉப்புக்கான கால்சியம், இரும்புச்சத்து, மாங்கனீசு, மெக்னீசியம், பாஸ்பரஸ், செலீனியம், துத்தநாகம், பொட்டாசியம் போன்றவைகள் உள்ளன.

மேலும் இக்காயில் குறைந்த எரிசக்தி, அதிகளவு நார்சத்து, கார்போஹைட்ரேட், புரதச்சத்து ஆகியவையும் காணப்படுகின்றன.

 

முருங்கைக்காயின் மருத்துவ பயன்கள்

எலும்புகளின் பலத்திற்கு

முருங்கைக்காயானது எலும்புகளின் பலத்தினையும், அதன் அடர்த்தியையும் அதிகரிக்கச் செய்கிறது. இக்காயில் உள்ள தாதுஉப்புக்கான கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீசியம் மற்றும் இரும்புச்சத்து ஆகியவை எலும்புகளைப் பலப்படுத்தி அதன் அடர்த்தியை இழக்காமல் பாதுகாக்கின்றன.

எனவே வளரும் குழந்தைகள் உட்பட அனைவரும் முருங்கைக்காயினை உணவில் சேர்த்து ஆரோக்கியமான எலும்புகளைப் பெறலாம்.

 

இதய நலத்தை மேம்படுத்த

இரத்த குழாய்களின் தடிமன் அதிகரித்தல் மற்றும் தமனிகள் தங்களின் நெகிழ்தன்மையை இழத்தல் ஆகியவற்றின் காரணமாக இரத்த அழுத்தமானது அதிகரித்து இதய நோய்கள் ஏற்படுகின்றன.

முருங்கைக்காயில் உள்ள க்யூயர்சிடின் என்ற ஆன்டிஆக்ஸிஜென்டானது இரத்த குழாய்களின் தடிமன் அதிகரிக்காமல் தடுக்கிறது. இதனால் முருங்கைக்காயை அடிக்கடி உணவில் சேர்த்து சீரான இரத்த அழுத்தத்தைப் பெற்று இதய நலனைப் பேணலாம்.

 

நோய்எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்க

முருங்கைக்காயில் அதிகளவு விட்டமின் சி உள்ளது. விட்டமின் சி-யானது உடலின் நோய்எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கிறது. இதனால் நோய்எதிர்ப்பு ஆற்றல் குறைவினால் ஏற்படும் காய்ச்சல், சளி, தொண்டைப்புண் ஆகியவை குணமாகின்றன.

மேலும் இதில் காணப்படும் நுண்ணுயிர் எதிர்ப்பு சக்தியானது உடலின் நோய்எதிர்ப்பு ஆற்றலை மேம்படுத்துகிறது.

 

சுவாசக் கோளாறுகளை நீக்க

முருங்கைக்காயில் உள்ள அழற்சிஎதிர்ப்பு பண்பானது சுவாசப் பாதையில் ஏற்படும் ஒவ்வாமையை தடைசெய்கிறது.

முருங்கைக்காயின் சாறானது ஆஸ்துமா நோயின் காரணமாக ஏற்படும் மூச்சுத்திணறல், மார்பு இறுக்கம், இருமல் ஆகியவற்றை தடைசெய்து, சிறந்த நுரையீரல் செயல்பாடு மற்றும் சுவாசத்தை ஊக்குவிப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

எனவே முருங்கைக்காயினை அடிக்கடி உணவில் சேர்த்து சுவாசக் கோளாறுகளிலிருந்து நிவாரணம் பெறலாம்.

 

நல்ல செரிமானத்திற்கு

முருங்கைக்காயில் உள்ள விட்டமின் பி சத்தானது உணவு செரித்தலில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த விட்டமினானது உணவினை உடைத்து செரிமானத்தை எளிதாக்குகிறது. முருங்கையில் உள்ள நார்சத்தானது செரிமானம் நன்கு நடைபெற உதவுகிறது.

 

கர்ப்பிணி பெண்களுக்கு

கர்ப்பிணிப் பெண்களுக்கான சிறந்த உணவாக முருங்கைக்காய் உள்ளது. முருங்கைக்காயானது கர்ப்பகாலத்திற்கு தேவையான இரும்புசத்தினை வழங்குகிறது.

இக்காயில் உள்ள கால்சியம் குழந்தையின் ஆரோக்கியமான எலும்பு வளர்ச்சிக்கு துணைபுரிகிறது. கர்ப்பகால மயக்கம், மந்தம், வாந்தியெடுத்தல் ஆகியவற்றை சரிசெய்யக்கூடிய தேவையான தாதுஉப்புக்கள் மற்றும் விட்டமின்களை முருங்கைக்காய் கொண்டுள்ளது.

கர்ப்ப காலத்திலும் அதற்கு முன்னரும் உள்ள சிக்கல்களை முருங்கைக்காய் நீக்குகிறது. மேலும் பாலூட்டும் தாய்மார்களின் பால்சுரப்பை முருங்கைக்காயானது அதிகரிக்கிறது.

 

இரத்தத்தை சுத்திகரிக்க

முருங்கைக்காயானது இரத்தில் உள்ள நச்சுத்தன்மையை வெளியேற்றி இரத்தத்தை சுத்திகரிக்கிறது. இரத்தம் சுத்திகரிக்கப்படுவதால் சரும நோய்களையும் போக்க முருங்கைக்காய் உதவுகிறது.

 

சருமம் மற்றும் கேச பராமரிப்பிற்கு

முருங்கைச்சாற்றில் உள்ள நச்சினை நீங்கும் தன்மையை மற்றும் ஈரப்பதம் ஆகியவற்றின் காரணமாக சருமச்சுருக்கம், மாசுபடுத்திகளின் பாதிப்பு முதலியவைகளிலிருந்து சருமம் பாதுகாக்கப்படுகிறது.

முருங்கைக்காயில் உள்ள புரதச்சத்தானது காட்மியம், மெர்குரி போன்ற கனரக உலோகங்களின் தாக்கத்திலிருந்து சரும உயிரணுக்களைப் பாதுகாக்கிறது. எனவே முருங்கைச்சாறானது சருமத்திற்கான அழகுசாதனப் பொருட்களின் தயாரிப்பில் உபயோகப்படுத்தப்படுகிறது.

முருங்கையின் விதைகளிலிருந்து தயார் செய்யப்படும் எண்ணெயானது கேசத்தை சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் புறஊதாக்கதிர்களின் தாக்கத்திலிருந்தும் பாதுகாக்கிறது.

இது கேசத்திற்கு சிறந்த கன்டிஷனராகச் செயல்படுவதோடு கேச வேர்களை வலுவூட்டி முடி வளர்ச்சியைத் தூண்டுகிறது.

 

முருங்கைக்காயினை வாங்கும் முறை

முருங்கைக்காயினை வாங்கும்போது இளமையான, புதிதான ஒரே சீரான பச்சை நிறத்தில் உள்ள காய்களை வாங்க வேண்டும். முற்றிய, உலர்ந்த, சுருங்கிய, முறுக்கப்பட்ட, உடைந்த முருங்கைக்காய்களைத் தவிர்க்கவும்.

முருங்கைக்காயினை அறையின் வெப்பநிலையில் ஓரிரு நாட்கள் வைத்திருந்து பயன்படுத்தலாம். குளிர்பதனப் பெட்டியில் ஒரு வாரம்வரை வைத்திருந்து இக்காயினை பயன்படுத்தலாம்.

முருங்கைக்காயினைப் உபயோகிக்கும்போது தண்ணீரில் அலசி தேவையான அளவு வெட்டி உபயோகிக்கலாம். வடஅமெரிக்கா மற்றும் ஐரோப்பா நாடுகளில் முருங்கைக்காயினைக் கொண்டு தயார் செய்த காப்ஸ்யூல்கள் மற்றும் பொடிவகைகள் பயன்படுத்தப்படுகின்றன.

முருங்கைக்காயானது குழம்பு வகைகள், பொரியல்கள், சூப்புகள், சாலட்டுகள், ஊறுகாய்கள், கேக்குகள், ரொட்டிகள் தயார் செய்யப் பயன்படுத்தப்படுகிறது.

சத்துக்கள் நிறைந்த இயற்கையின் கொடையான முருங்கைக்காயினை உணவில் அடிக்கடி சேர்த்து நலமான வாழ்வு பெறுவோம்.

-வ.முனீஸ்வரன்

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.