முருங்கைக் கீரை பொரியல் செய்வது எப்படி?

முருங்கைக் கீரை பொரியல் சத்தான உணவாகும். முருங்கைக் கீரை இரும்புச்சத்து நிறைந்த உணவுப் பொருள். ஆதலால் இதனை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளுதல் என்பது அவசியமான ஒன்றாகும்.

இனி சுவையான முருங்கைக் கீரை பொரியல் செய்முறை பற்றிப் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

முருங்கைக் கீரை – 1 கட்டு

உப்பு – தேவையான அளவு

சீரகம் – 1½ ஸ்பூன்

தேங்காய் – ¼ மூடி (சற்று நடுத்தர அளவு உடையது)

தாளிக்க

நல்ல எண்ணெய் – 2½ ஸ்பூன்

சின்ன வெங்காயம் – 2 எண்ணம் (நடுத்தர அளவு)

கடுகு – ½ ஸ்பூன்

உளுந்தம் பருப்பு – 1½ ஸ்பூன்

மிளகாய் வற்றல் – 2 எண்ணம் (பெரியது)

கறிவேப்பிலை – 3 கீற்று

முருங்கைக் கீரை பொரியல் செய்முறை

முதலில் முருங்கைக் கீரையை காம்பு நீக்கி சுத்தம் செய்து கொள்ளவும்.

முருங்கைக் கீரையை அலசி எடுத்துக் கொள்ளவும்.

 

முருங்கைக் கீரை
முருங்கைக் கீரை

 

சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி சதுரங்களாக வெட்டவும்.

மிளகாய் வற்றலை காம்பு நீக்கி வைத்துக் கொள்ளவும்.

கறிவேப்பிலையை அலசி உருவிக் கொள்ளவும்.

தேங்காயை துருவிக் கொள்ளவும்.

குக்கரில் அலசிய முருங்கைக் கீரையைப் போட்டு அதனுடன் சீரகம் மற்றும் தேவையான அளவு உப்பு, சிறிதளவு தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி விசில் போடவும்.

 

குக்கரில் முருங்கைக் கீரைக் கலவை
குக்கரில் முருங்கைக் கீரைக் கலவை

 

குக்கரில் ஒரு விசில் வந்ததும் அடுப்பினை சிம்மில் வைத்து இரு நிமிடங்களில் குக்கரை இறக்கி விடவும்.

 

குக்கரைத் திறந்ததும்
குக்கரைத் திறந்ததும்

 

வாணலியை அடுப்பில் வைத்து அதில் நல்ல எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சதுரமாக்கிய சின்ன வெங்காயம், கடுகு, கறிவேப்பிலை, ஊளுந்தம் பருப்பு, மிளகாய் வற்றல் சேர்த்து தாளிதம் செய்யவும்.

 

தாளிதம் செய்யும் போது
தாளிதம் செய்யும் போது

 

கடுகு வெடித்ததும் குக்கரில் இருந்து முருங்கைக் கீரையை வெளியே எடுத்து தாளிதத்துடன் சேர்த்து வதக்கவும். அடுப்பினை சிம்மிற்கும் சற்று அதிகமாக வைக்கவும்.

 

முருங்கைக் கீரைக் கலவையைச் சேர்த்ததும்
முருங்கைக் கீரைக் கலவையைச் சேர்த்ததும்

 

தண்ணீர் வற்றி முருங்கைக் கீரை சுருள வதங்கியதும் அடுப்பினை அணைத்து விடவும்.

அதனுடன் துருவிய தேங்காய்த் துருவல் சேர்த்து கிளறி விடவும்.

 

தேங்காய்த் துருவலைச் சேர்த்ததும்
தேங்காய்த் துருவலைச் சேர்த்ததும்

 

சுவையான முருங்கைக் கீரை பொரியல் தயார்.

 

சுவையான முருங்கைக் கீரை பொரியல்
சுவையான முருங்கைக் கீரை பொரியல்

 

இது எல்லா வகை சாதங்களுடன் சாப்பிட ஏற்றது.

குறிப்பு

விருப்பமுள்ளவர்கள் பாத்திரத்தில் முருங்கைக் கீரையை வேக வைத்து தாளிதத்துடன் சேர்த்து பொரியல் தயார் செய்யலாம்.

ஜான்சிராணி வேலாயுதம்

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.