முறுக்கு செய்வது எப்படி?

முறுக்கு பண்டைய நாட்களிலே வீடுகளில் பண்டிகைகளின் போது செய்து பயன்படுத்தப்பட்டது. இன்றைக்கு பலகாரக் கடைகளிலும், தெருக்களிலும், பாக்கெட்டுகளிலும் விற்கப்படுகிறது. கடைகளில் ரெடிமேட் முறுக்குமாவு விற்கப்படுகிறது.

ஆனாலும் நம் வீட்டில் மாவு தயாரித்து அதிலிருந்து முறுக்கு தயார் செய்வது சுவையையும், ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.

இனி வீட்டில் முறுக்கு செய்வது எப்படி என்பதனைப் பார்ப்போம்.

 

தேவையான பொருட்கள்

பச்சரிசி – ஒரு கப் (400 கிராம்)

உளுந்தம் பருப்பு – ¼ கப் (100 கிராம்)

சீரகம் அல்லது எள் – 4 ஸ்பூன்

தேங்காய் எண்ணெய் – பொரித்தெடுக்கத் தேவையான அளவு

உப்பு – தேவையான அளவு

 

முறுக்கு செய்முறை

உளுந்தம் பருப்பை வெறும் வாணலியில் போட்டு சூடாகும்வரை வறுக்கவும். வறுத்த உளுந்தம் பருப்பைஆற வைக்கவும்.

பின் மிசினில் கொடுத்து அரிசியையும், உளுந்தம் பருப்பையும் தனித்தனியே அரைக்கவும்.

பின் அரிசி மாவு மற்றும் உளுந்தம் மாவையும் தனித்தனியே சலித்துக் கொள்ளவும்.

பின் வாயகன்ற பாத்திரத்தில் அரிசி மாவு, உளுந்தம் மாவு மற்றும் சீரகம் அல்லது எள் ஆகியவற்றை போட்டு ஒரு சேரக் கலக்கவும்.

பச்சரிசி மாவு மற்றும் உளுந்த மாவு
பச்சரிசி மாவு மற்றும் உளுந்த மாவு

 

பச்சரிசி மாவு மற்றும் உளுந்த மாவுடன் சீரகம்
பச்சரிசி மாவு மற்றும் உளுந்த மாவுடன் சீரகம்

 

ஒருசேரக் கலந்த மாவு
ஒருசேரக் கலந்த மாவு

 

தேவையான அளவு தண்ணீரில் தேவையான அளவு உப்பைப் போட்டு கரைக்கவும்.

பின் உப்புத் தண்ணீரைச் சிறிது சிறிதாக மாவுக் கலவையில் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசையவும்.

மாவு பிசையும்போது
மாவு பிசையும்போது

 

சரியான பதத்தில் மாவு
சரியான பதத்தில் மாவு

 

பின் பிசைந்த மாவில் இருந்து சிறிதளவு எடுத்து முறுக்கு உழக்கில் அடைக்கவும்.

அடுப்பில் வாயகன்ற அடிப்புறத்தில் தட்டையாக உள்ள வாணலியை வைக்கவும். பின் அதில் தேவையான அளவு தேங்காய் எண்ணெயை ஊற்றி காய வைக்கவும்.

எண்ணெய் காய்ந்ததும் அதில் முறுக்குகளை பிழிந்து விடவும்.

 

முறுக்கு பிழியும்போது
முறுக்கு பிழியும்போது

 

ஒரு புறம் வெந்ததும் முறுக்குகளை மறுபுறம் திருப்பி விடவும்.

 

ஒருபுறம் வெந்த முறுக்கு
ஒருபுறம் வெந்த போது

 

முறுக்குகளில் எண்ணெய் குமிழி அடங்கியதும் எடுத்து விடவும். சுவையான முறுக்கு தயார். இதனை நீங்கள் வீட்டில் செய்து அசத்தலாம்.

சுவையான முறுக்கு
முழுவதும் வெந்ததும்

 

தேங்காய் எண்ணெயில் முறுக்குகள் பிழியப்படுவதால் இரண்டு, மூன்று மாதங்கள் வைத்திருந்து பயன்படுத்தலாம். முறுக்குகள் சுடும் போது தணலை மிதமாக வைக்கவும்.

 

குறிப்பு

விருப்பமுள்ளவர்கள் வெண்ணெயை மாவு பிசையும் போது சேர்த்து மாவினைத் தயார் செய்யலாம்.

முறுக்குகளை நேரடியாக எண்ணெயில் பிழிய முடியாதவர்கள் அரிகரண்டியில் பிழிந்து பின் அதனை எண்ணெயில் போடலாம். அரிகரண்டியில் எண்ணெயைத் தடவி அதில் முறுக்கினைப் பிழிந்தால் வறுத்தெடுக்கும் எண்ணெயில் போடும்போது எளிதாக இருக்கும்.

ஜான்சிராணி வேலாயுதம்

 

One Reply to “முறுக்கு செய்வது எப்படி?”

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.